அரைகுறை அக்கறை!

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், 2017-32 ஆண்டுக்கான, 15 ஆண்டு கால தேசிய வனங்கள் செயல்திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம், சில திட்டங்களையும் ஏனைய அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்த இலக்குகளையும் நிர்ணயித்திருக்கிறது. வனவிலங்குகள், வனம், வனத்தில் வாழும் மக்கள், வனப் பாதுகாப்பு தொடர்புடைய அரசுத் துறைகள் என்று வனத்துடன் தொடர்பான அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைத்து புதிய தேசிய வனங்கள் செயல்திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது.
இப்படியொரு செயல்திட்டத்தை முன்மொழிவது இது மூன்றாவது முறை. அடுத்த 15 ஆண்டுகளுக்கான சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்த செயல்திட்டமும் இதன் முக்கியமான நோக்கம். வனங்களில் வாழும் சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் வனவிலங்குகளைப் பாதுகாப்பது, வனவிலங்கு சரணாலயப் பகுதிகளில் அதிகரித்திருக்கும் வனச் சுற்றுலாவை நெறிப்படுத்துவது ஆகியவையும் இந்த செயல்திட்டத்தின் குறிக்கோள்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் கானுயிர்ச் சுற்றுலாவுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதோடு, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவையும் மக்களின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்திருக்கின்றன. வெளிநாடுகளுக்கு சுற்றுலா போக முடியாத நடுத்தரக் குடும்பத்தினரின் கவனத்தை, இந்தியாவில் இருக்கும் பல வனவிலங்கு சரணாலயங்கள் ஈர்த்திருக்கின்றன. 
சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை ஈடுகட்டும் அதேநேரத்தில், வனவிலங்குகளின் நடமாட்டத்துக்கான பகுதிகள் சிதைந்து
விடாமல் பாதுகாப்பது என்பது மிக முக்கியம். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வனவிலங்கு சரணாலயங்கள் மிகவும் அடர்த்தியான காடுகளில் எந்தவித இடையூறும் இல்லாமல் திரியும் வனவிலங்குகளை உள்ளடக்கியவை. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல. வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையில், வனவிலங்குகள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்கின்றன.
"வனப்பாதுகாப்பு இந்தியா' என்கிற தலைப்பில் ஓர் ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி 72% சுற்றுலா உறைவிடங்களும், உணவகங்களும் தேசிய வனவிலங்கு சரணாலயங்களை ஒட்டி அமைந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை கடந்த 17 ஆண்டுகளில் அமைக்கப்பட்டவை. 
ஏறத்தாழ 85% சுற்றுலா விடுதிகள் தேசிய வனவிலங்கு பூங்காக்களின் எல்லைக்கு வெளியே ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் அமைந்திருக்கின்றன. இந்த தங்கும் விடுதிகள், உள்ளூரில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்துகின்றன என்பது மட்டுமல்ல, வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளின் தண்ணீரையும், சரணாலயப் பகுதிகளில் உள்ள மரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் விறகுகளையும் பயன்படுத்துகின்றன. சுற்றுச்சூழலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் கழிவுகளையும் குப்பைகளையும் சரணாலயங்களில் கொட்டுகிறார்கள். 
தேசிய வனங்கள் செயல்திட்டத்தின்படி கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகள் புதியவையல்ல. வழக்கம்போல கானுயிர்ச் சுற்றுலா, வனத்தையும் வனவிலங்குகளையும் வனவிலங்கு சரணாலயங்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்கிற குறிக்கோளை முன்வைக்கிறதே தவிர, தெளிவான வழிமுறைகளைக் குறிப்பிட்டு வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள விடுதிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாக இல்லை. செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பும் பல அமைச்சகங்கள், தனியார் ஆகியோரின் ஆதரவும் இருந்தால் மட்டுமே நடைமுறை சாத்தியம். 
வனவிலங்கு சரணாலயத்துக்குள் சுற்றுலாப் பயணிகளின் செயல்பாடு உள்ளிட்ட பல விதிமுறைகள் ஏற்கெனவே காணப்படுகின்றன. ஆனால், அவை செயல்படுத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை. இதற்குக் காரணம், கானுயிர்ச் சுற்றுலா என்பது வணிக ரீதியில் மட்டுமே பார்க்கப்படுகிறதே தவிர, வனவிலங்குகளின் பாதுகாப்புக் குறித்த கவலையை கருத்தில் கொள்வதில்லை. இதுகுறித்து நாம் முடிவெடுப்பதற்கு முன்னால், நம்மைவிட வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் எந்த அளவுக்கு கானுயிர்ச் சுற்றுலா குறித்த தெளிவான சிந்தனையுடன் இருக்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
போபாலில் உள்ள இந்திய வனப்பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் 1998 தேசிய வனக்கொள்கையின் அடிப்படையிலான 2016-க்கான வனக்கொள்கை வரைவு, கருத்தில் கொள்ளத்தக்கது. ஆனால், எந்தவித காரண காரியமுமில்லாமல் அந்த வரைவு திரும்பப் பெறப்பட்டது என்பது மட்டுமல்ல, அதுகுறித்து இப்போது யாருமே பேசுவதுகூட கிடையாது. 
இந்த இடைவெளியில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு வனவாழ்வுத் திட்டங்களை அறிவித்துவிட்டது. 2002-லும், கடந்த வாரத்திலும் என்று 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய வனங்கள் திட்டத்தை அறிவிக்கும் மத்திய அரசு, 30 ஆண்டுகளாகியும் ஏன் இன்னும் மத்திய வனக்கொள்கையை அறிவிக்கவில்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. செயல்திட்டம் என்பது வேறு கொள்கை என்பது வேறு.
சர்வதேச அளவில் அணுகும்போது இந்தியாவில் அடர்த்தியான காடுகளின் அளவு மிகமிக சரிந்திருக்கிறது. நாம் மிக அதிக அளவில் மர இறக்குமதி செய்கிறோம். அதற்காக, இருக்கும் வனங்களை அழித்து நமது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. ஆங்காங்கே மரக்கன்றுகள் நடுவதால் மட்டுமே பல ஆண்டுகளாகக் குறைந்துவரும் வனப்பகுதிகளை ஈடுகட்டிவிட முடியாது. தேசிய வனக்கொள்கையுடன் இணையாத தேசிய வனங்கள் செயல்திட்டம் என்பது அர்த்தமற்றது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com