நீதித்துறையா தீர்மானிப்பது?

வரும் நவம்பர் 1-ஆம் தேதிவரை

வரும் நவம்பர் 1-ஆம் தேதிவரை தில்லியில் பட்டாசுகள் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தடை விதித்திருக்கிறது. கடந்த ஆண்டும் இதேபோல தீபாவளியையொட்டிய வாரங்களில் பட்டாசுகள் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை பிறப்பித்திருந்தது. இந்த ஆண்டும் அதேபோல தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி அன்று தில்லி உலகிலேயே மிக மோசமான அளவுக்கு காற்றுமாசால் பாதிக்கப்படுவது புதிதொன்றும் அல்ல. சுற்றியுள்ள ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலப் பகுதிகளில் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு எஞ்சியிருக்கும் வைக்கோலை எரிப்பதால் ஏற்படும் காற்றுமாசு போதாது என்று தீபாவளி பட்டாசு வெடிப்புகையும் சேர்ந்து கொள்ளும்போது உலகிலேயே மிக மோசமான நிலைமைக்கு தில்லி தள்ளப்படுகிறது. இதனால், தில்லியிலுள்ள பலர் நுரையீரல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். ஏற்கெனவே ஆஸ்துமா, காசநோய் உள்ள நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
நவம்பர் 1-ஆம் தேதி வரை தலைநகர் தில்லி பகுதியில் பட்டாசுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருப்பதால் எந்த அளவுக்கு காற்றின் தரம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்து. இந்தக் கருத்து உடன்பாடானதுதான். 
ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தில்லியிலும் தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முற்றிலுமாக பட்டாசு விற்பனையை தடுத்துவிடுமா என்பது சந்தேகம்தான். உச்சநீதிமன்றம் நல்லெண்ணத்துடன் எடுத்திருக்கும் இந்த முடிவு நடைமுறை சாத்தியமாகத் தெரியவில்லை.
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவது என்பது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம். எந்த ஒரு பண்டிகையோ, விழாவோ, கொண்டாட்டமோ தில்லியில் பட்டாசு இல்லாமல் கொண்டாடப்படுவது இல்லை என்கிற நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து மக்கள் உடனடியாக பட்டாசு வெடிப்பதை குறைப்பதோ, முற்றிலுமாகக் கைவிடுவதோ ஏட்டளவில் மட்டுமே சாத்தியம். பட்டாசுக்கான தடையைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் பட்டாசுக்கெதிரான மனநிலையை உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்பதை நீதிபதிகள் உணராதது வியப்பாக இருக்கிறது.
தடை என்பது எப்போதுமே எதிர்பார்த்த பலனை அளிப்பதில்லை. சொல்லப்போனால், எப்போது தடைவிதிக்கப்படுகிறோ அப்போதெல்லாம் மக்களில் பெரும்பாலோருக்கு அந்தத் தடையை மீறும் மனோபாவம் வருவதுதான் வழக்கம். தடை விதிக்கப்படாமல் விழிப்புணர்வுப் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டிருந்தால், காலப்போக்கில் பட்டாசு வெடிப்பதை குறைக்கவும் கைவிடவும் மக்கள் தயாராகக்கூடும். இப்போது தீபாவளி நெருங்கும் வேளையில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது மக்களை வெறுப்படையச் செய்யுமே தவிர, நீதிமன்ற ஆணையை ஏற்கச் செய்யாது.
நீதிமன்றத் தடையால் உடனடியாக நேரப்போவது, அதிகரித்த விலையில் கள்ளச்சந்தையில் பட்டாசு விற்பனை கொடிகட்டிப் பறக்கும் என்பதுதான். தில்லியின் தெருக்களில் எல்லாம் காவல்துறையினர் ரோந்து போய் தடையை மீறிப் பட்டாசு வெடிக்கும் சிறுவர்களைக் கைது செய்யப் போகிறார்களா? ஆங்காங்கே தடையை மீறியோ அல்லது திருட்டுத்தனமாகவோ பட்டாசுகள் விற்கும் சில்லறை விற்பனையாளர்களையும் வணிகர்களையும் கைது செய்வார்களா? அல்லது அவர்களிடமிருந்து கையூட்டுப் பெற்று தங்களது பைகளை நிரப்பிக் கொள்வார்களா? இதையெல்லாம் உச்சநீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தபோது ஏன் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது புரியவில்லை.
தில்லியின் காற்றுமாசுக்கு மிகமுக்கியமான காரணம், முன்பே கூறியதுபோல அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பிறகு வயலில் இருக்கும் எஞ்சிய வைக்கோலை தீயிடுவதால் ஏற்படும் புகைதான். அப்படி வைக்கோலுக்குத் தீ மூட்டுவதற்கு தடை இருந்தும்கூட, விவசாயிகள் அதைக் கைவிடுவதாக இல்லை. வைக்கோல் எரிப்பதால் ஏற்படும் புகை மட்டுமல்லாமல், தில்லி சாலைகளில் காணப்படும் தூசியும் (38%), வாகனங்களால் ஏற்படும் புகையும் (20%) கூட முக்கியமான காரணங்கள். 
அருகிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவனப் பகுதிகளிலிருந்து மிகவும் நுண்ணிய தூசு, காற்றால் அடித்துவரப்பட்டு தில்லியின் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. தூசால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த நடைமேடை அமைத்து தினமும் சாலைகளை சுத்தப்படுத்த உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. 
தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 19 சாலை துப்புரவு இயந்திரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதேபோல, தனியார் வாகனங்களைக் குறைப்பதற்கு பொதுப்போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும் என்கிற திட்டமும் வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை. மெட்ரோ ரயில் வந்தபின்னும்கூட தில்லியில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறையவில்லை. 
நிர்வாகத்தின் பொறுப்புகளில் நீதித்துறை தலையிடுவது ஏற்புடையதல்ல. இதுபோன்ற கொள்கை முடிவுகள் எடுப்பதும், அவற்றை நடைமுறைப்படுத்துவதும் ஆட்சியாளர்களின் வேலையே தவிர, நீதிமன்றங்களின் வேலையல்ல. உச்சநீதிமன்றம் மத்திய - மாநில அரசுகளுக்கு இதுகுறித்து கவலை தெரிவிக்கலாம். ஆனால், பொதுமக்கள் எப்படி விழாக்களைக் கொண்டாடுவது என்பதை நீதித்துறையா தீர்மானிப்பது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com