பாதுகாப்பே இல்லாத நாடு!

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிக் கலாசாரம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிக் கலாசாரம் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. இது ஏனைய நாடுகளுக்கும் பரவிவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. 
2012-இல் சான்டி ஹூக் தொடக்கப் பள்ளியில் 26 குழந்தைகளும், ஆசிரியர்களும் சுட்டுத் தள்ளப்பட்டனர். கடந்த ஆண்டு ஃபுளோரிடாவிலுள்ள இரவு விடுதியில் 49 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாயினர். அவற்றையெல்லாம் விஞ்சும் விதத்தில் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துப்பாக்கிச் சூடாக அமைந்திருக்கிறது இரு வாரங்களுக்கு முன்பு 64 வயது ஸ்டீபன் பேட்டாக் என்பவர் மிருக வெறியுடன் லாஸ் வேகாஸில் நடத்தியிருக்கும் துப்பாக்கிச்சூடு. இதில் 59 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். 
ஸ்டீபன் பேட்டாக் தான் தங்கியிருந்த விடுதியின் 23-ஆவது மாடியில் அமர்ந்தபடி அங்கே நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தவர்கள் மீது குண்டு மழை பொழியத் தொடங்கினார். அவரிடம் 23 வெவ்வேறு விதமான துப்பாக்கிகள் இருந்திருக்கின்றன. சாதாரணமாக ஒரு சுற்றில் 40 முதல் 60 குண்டுகள் பொழியும் துப்பாக்கியை சில இணைப்புகளின் மூலம் 400 முதல் 800 குண்டுகள் பொழியும் விதத்தில் தரம் உயர்த்தி இருந்தார் அவர். அவரை அடையாளம் கண்டு சுற்றி வளைக்க முற்பட்டபோது தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்திருந்தார் ஸ்டீபன் பேட்டாக். 
ஸ்டீபன் பேட்டாக் ஒரு இஸ்லாமியராகவோ, வெளிநாட்டவராகவோ இருந்திருந்தால் அவரது செயல்பாட்டுக்கு தீவிரவாத முத்திரை குத்தியிருப்பார்கள். அவர் உள்ளூர்க்காரர் என்பது மட்டுமல்ல, எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லாத கோடீஸ்வரர், பட்டயக் கணக்காளர். பணி ஓய்வு பெற்றவர். லாஸ் வேகாஸ் சூதாட்ட மையங்களில் தொடர்ந்து பங்கு பெறுபவர். அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
1982-லிருந்து இதுவரை அமெரிக்காவில் இதுவரை 90 பெருந்திரள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்கள். 2014-இல் 12,571, 2015-இல் 13,500, 2016-இல் 15,079, 2017-இல் சமீபத்திய லாஸ்வேகாஸ் சம்பவத்தையும் சேர்த்து 11,652 உயிர்கள் துப்பாக்கி தொடர்பான வன்முறைக்கும் நான்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படும் பெருந்திரள் துப்பாக்கிச் சூட்டுக்கும் பலியாகியிருப்பதாக அமெரிக்காவில் வெளியான துப்பாக்கி வன்முறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மிக அதிகமான ஊடக வெளிச்சத்தையும் முக்கியத்துவத்தையும் பெறும் தீவிரவாத தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட இவை மிக மிக அதிகம் என்பதுதான். 
அமெரிக்காவில் துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்குவதற்கான முயற்சிகள் பலமுறை எடுக்கப்பட்டும் அவையெல்லாம் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது துப்பாக்கிக் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த வேண்டியதாவது அவசியம் என்று முனைப்புடன் சில விதிமுறைகளைக் கொண்டுவர முற்பட்டார். 15 முறை அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டுவர பராக் ஒபாமா எடுத்த எல்லா முயற்சிகளும் உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டன. தனது பதவிக்காலத்தின் கடைசி நாள்களில் துப்பாக்கிச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நிர்வாக அறிவிப்பின் மூலம் அடைப்பதற்கான அவரது கடைசி முயற்சியும் வெற்றி பெறவில்லை. 
ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை பறிக்கப்பட்டுவிடும் என்பதேகூட, குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய ஆயுதங்களில் ஒன்று. குடியரசுக் கட்சியைப் பொருத்தவரை தனிநபர் துப்பாக்கி வைத்துக்கொள்வது என்பது அமெரிக்க அரசியல் சட்டம் ஒவ்வொருவருக்கும் தந்திருக்கும் தனியுரிமையாகும். டொனால்ட் டிரம்புக்கு வாக்களித்து அதிபராகிய அமெரிக்காவின் அடித்தட்டு உழைக்கும் வெள்ளையர்களைப் பொருத்தவரை துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை மிகவும் முக்கியமானது. துப்பாக்கி உரிமத்தின் மீது கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்துவது என்பது, ஏற்கெனவே வெளிநாட்டுக் குடியேறிகளால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் தங்களை மேலும் பலவீனப்படுத்தும் முயற்சி என்று அவர்கள் கருதுகிறார்கள். 
அமெரிக்காவின் இரண்டாவது அரசியல் சாசனத் திருத்தம் ஒவ்வோர் அமெரிக்கருக்கும் தற்காப்புக்கு ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை வழங்குகிறது. ஏறத்தாழ 5.5 கோடி அமெரிக்கர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். உலகின் மொத்த மக்கள்தொகையில் 5% மட்டுமே உள்ள அமெரிக்கர்கள், உலகில் பொதுமக்கள் பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களில் 35% முதல் 40% ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டில் நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச்சூடுகளில் லாஸ் வேகாஸில் நடந்தது 273-ஆவது துப்பாக்கிச் சூடு. 
துப்பாக்கிக் கலாசாரம் என்பது அமெரிக்கர்களின் மரபணுவிலேயே உள்ள ஒன்று. கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தண்டிக்கப்பட்ட, நாடு கடத்தப்பட்ட ஐரோப்பியர்கள்தான் அமெரிக்காவில் குடியேறி அங்குள்ள பூர்வகுடிமக்களான செவ்விந்தியர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்றழித்து இப்போதைய அமெரிக்க தேசத்தை உருவாக்கினார்கள் எனும்போது அங்கே பரவலாக துப்பாக்கிக் கலாசாரம் காணப்படுவதில் வியப்பே இல்லை.
துப்பாக்கிக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பாத அமெரிக்கா, உலகிலுள்ள பிற நாடுகளை 'பாதுகாப்பில்லாத நாடுகள்' என்று முத்திரை குத்துவதுதான் மிகப்பெரிய நகைமுரண்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com