காவல் சவால்!

காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக மத்திய

காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவை ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு; காலத்தின் கட்டாயமும்கூட. அதிகரித்து வரும் கிரிமினல் குற்றங்கள், ஊடுருவல்கள், தீவிரவாதப் போக்கு இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி இணையவழிக் குற்றங்களை எதிர்கொள்ளப் போதிய தகவல் தொழில்நுட்ப மேம்பாடு காவல்துறைக்கு இப்போது அவசியமாகிறது.
மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கும் ரூ.25,000 கோடி காவல்துறையை நவீனமயப்படுத்தப் போதுமானதாக இருக்காது என்றாலும்கூட, காவல்துறையின் அடிப்படைத் தேவைகளை ஓரளவுக்கு இந்த ஒதுக்கீடு ஈடுகட்டக்கூடும். இதனால், காவல்துறை நவீனமயமாக்கலுக்கு 75% மத்திய உதவி தரப்படும் நிலையில் மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி நவீனமயமாக்கலை இனியும் தள்ளிப்போட முடியாது.
இந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதி காவல்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும். புதிய ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் வாங்குதல், தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துதல், குற்றப்புலனாய்வை தொழில்நுட்ப ரீதியில் நவீனப்படுத்துதல் ஆகியவை இந்த நிதி ஒதுக்கீட்டின்கீழ் வரும். அதுமட்டுமல்லாமல், அனைத்து காவல் நிலையங்களும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்துடன் இணைக்கப்பட்டு அதன் மூலம் குற்றப் புலன் விசாரணை மேம்படுத்தப்படும். காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலை என்று அனைத்துமே இணைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை விரைந்து நடைபெற வழிகோலப்படும்.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியிருக்கும் ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீட்டில், ரூ.10,132 கோடி ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், நக்ஸல் பாதிப்புள்ள பகுதிகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதிகளிலுள்ள மாநில காவல்துறை நவீனமயப்படுத்தப்பட்டு தொழில்நுட்ப ரீதியாகவும் பலப்படுத்தப்பட்டால் மட்டுமே அங்கே நிலவும் பதற்றமான சூழலை எதிர்கொள்ள முடியும். மாநில நிர்வாகத்துடன் இணைந்து உள்ளூர் மக்களின் நம்பிக்கையையும் பெற்று செயல்பட்டால்தான் அந்தப் பகுதிகளில் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
பத்தாண்டுக்கு முந்தைய, கைவிடப்பட்ட ஆயுதங்களை இந்தியாவில் காவல்துறையினர் பயன்படுத்தும்போது, கிரிமினல்களும், தீவிரவாதிகளும் அதிநவீன ஆயுதங்களுடன் வலம் வரும் அவலம் காணப்படுகிறது. காவல்துறையினரின் அன்றாட உபயோகத்திற்கான ஆயுதங்களை நவீனப்படுத்தாத வரை மாஃபியாக்களையும், தேர்ந்த கிரிமினல் கூட்டத்தினரையும் காவல்துறையினர் எதிர்கொள்வது என்பது இயலாது. மத்திய, மாநில அரசுகள் காவல்துறையைத் தொழில்நுட்ப ரீதியாகப் பலப்படுத்துவதில் அக்கறை காட்டாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஒதுக்கீடு, அந்தக் குறையைப் போக்கும்.
இப்போதைய நிலையில் அனுமதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கையில், ஏறத்தாழ 24% நிரப்பப்படாமல் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு காவல்துறையில் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்களை விரைவில் நிரப்ப முடிவெடுத்திருப்பது வரவேற்புக்குரிய ஒன்று.
ஒரு லட்சம் பேருக்கு 222 காவல்துறையினர் இருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரை. ஆனால், இந்தியாவில் 131 பேர்தான் இருக்கிறார்கள். காவலர் பற்றாக்குறை இருப்பதால் புலன் விசாரணைக்கும், ரோந்து போவதற்கும்கூடப் போதுமான காவலர்கள் இல்லை. அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கும் காவலர்கள் அழைக்கப்பட்டு விடுவதால் அவர்களது அடிப்படைக் கடமையான, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதும், குற்றச்செயல்களைத் தடுப்பதும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன.
போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால் காவல்துறையினரின் பணிச்சுமை அதிகரித்து அவர்களது அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதாக உளவியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பெரும்பாலான காவல்துறையினர் நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்குப் பதிலாக குறைந்தபட்சம் பதினோரு மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். சில நாள்களில் பதினான்கு மணி நேரம்கூட அவர்கள் பணியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏறத்தாழ 75% காவல்துறையினர் அவர்களது வாராந்திர விடுப்புகளை எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும்கூட ஏதாவது சட்டம் - ஒழுங்கு பிரச்னையோ, குற்றச்சம்பவமோ ஏற்பட்டு அவர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு விடுகிறார்கள்.
மத்திய - மாநில அரசுகள் காவல்துறையினரின் செயல்பாடு, நியமனம், இடமாற்றம் குறித்து தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று 2006-இல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு வற்புறுத்துகிறது. அதேபோல, தவறிழைக்கும் காவல்துறையினர் குறித்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் மத்திய - மாநில அரசுகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
கட்டமைப்பு வசதிகளையும், ஆயுதங்களையும் மேம்படுத்தும் வேளையில், 2006-இல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவல்துறையினரின் செயல்பாட்டிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டால்தான் காவல்துறை மேம்படும். அதுமட்டுமல்லாமல், அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை செயல்பாடு உறுதிப்படுத்தப்படாமல் குற்றங்களைத் தடுக்கவோ, தீவிரவாதத்தை எதிர்கொள்ளவோ இப்போதிருக்கும் காவல்துறையால் இயலுமா என்பது சந்தேகம்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com