கமலுக்கு உரிமை உண்டு!

தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் டெங்கு

தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் டெங்கு வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மழைக்காலம் வரும்போதெல்லாம் இது போல வைரஸ் காய்ச்சலும், விஷக்காய்ச்சலும், மலேரியா, காலரா உள்ளிட்ட நோய்த் தொற்றுகளும் பரவுவது புதிதொன்றும் அல்ல. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த தரப்படும் மருந்து குறித்த விவாதம், இப்போது போல முன்னெப்போதும் எழுந்ததில்லை. 
டெங்கு என்கிற வைரஸ் காய்ச்சலின் விளைவால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் (பிளேட்லட்ஸ்) எண்ணிக்கை குறையத் தொடங்குகின்றன. அவை மிக அதிகமாக குறைந்துவிடும்போது உடலில் பல பாகங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நோயாளி மரணத்தைத் தழுவ நேர்கிறது. 
வைரஸ் காய்ச்சல் வந்தவுடன் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உடனடியாக ரத்தப் பரிசோதனையில் டெங்கு வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வெள்ளை அணுக்களும் தட்டணுக்களும் குறையாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மருத்துவர்களால் எடுக்கப்படுகிறது. அப்படியில்லாமல் போகும்போதுதான் டெங்கு மரணம் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் நோயாளிகள் குணமடைகிறார்கள் என்றாலும்கூட, ஒரு சிலர் மரணமடைகிறார்கள் என்பதையும் வைரஸின் பாதிப்பால் சிலர் மூட்டு வலியுடன் சில காலம் தொடர்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. 
டெங்கு வைரஸ் காய்ச்சலுக்கு அலோபதி மருத்துவத்தில் எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும்கூட, அது மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்த முடியாதது அல்ல. அதேநேரத்தில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவமுறைகளில் இதற்குத் தீர்வாக நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச் சாறு போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. இவைதான் இப்போது பரவலான சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன.
நிலவேம்பு என்பது சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது பெரும்பாலும் கிழக்காசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த மூலிகை குறித்து நடத்தப்பட்ட தாவர வேதியியல் ஆய்வுகளின்படி இதில் உள்ள பிளோவோனாய்ட்ஸ், ஆன்ரோகிராபோலய்ட், பென்செனாய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருள்கள் ஒவ்வாமை, நுண்ணுயிரிகள், வைரஸ்கள் ஆகியவற்றை எதிர்த்து அழிக்கும் தன்மை கொண்டவை. நிலவேம்பில் உள்ள பிளோவோனாய்ட்ஸ் என்கிற வேதிப்பொருள் வைரஸ், தொற்றுநோய், ஒவ்வாமை, காய்ச்சல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது என்கிறது சீன மருத்துவம்.
டெங்கு காய்ச்சலுக்குத் தரப்படும் நிலவேம்புக் குடிநீர் என்பது இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தாலும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தாலும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. நிலவேம்புக் குடிநீரில் கோரைக்கிழங்கு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், சந்தனம், பற்படாகம், பேய்புடல், சுக்கு, மிளகு, நிலவேம்பு உள்ளிட்ட ஒன்பது மூலிகைகள் அடங்கியிருக்கின்றன. இந்த மூலிகைகள், மாற்று மருத்துவத்தினர் பரிந்துரைப்பதுபோல டெங்கு வைரûஸ குணப்படுத்தாமல் போனாலும்கூட, இவற்றால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.
மாற்று மருத்துவ முறையில் வழங்கப்படும் மருத்துவத் தீர்வுகள், அலோபதி மருந்துகளைப்போல, பெரும்பாலும் பக்க விளைவுகளை உருவாக்குவதில்லை. இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இயற்கையின் அடிப்படையில் மிக உயர்ந்த மருத்துவ சிகிச்சை முறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்து வந்திருப்பது வரலாற்று உண்மை. ஆனால், இந்த மாற்று மருத்துவ சிகிச்சைகள் குறித்து போதுமான அளவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் மருத்துவ குணங்கள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. ஐரோப்பியர்களின் படையெடுப்பால் காலனிகளாக மாற்றப்பட்ட காரணத்தால் ஆசியாவின் மேம்பட்ட மருத்துவ முறைகள் புறக்கணக்கப்பட்டுவிட்டன என்பதுதான் உண்மை. 
கடந்த அரைநூற்றாண்டு காலமாகத்தான் இந்த மருத்துவ முறைகள் குறித்த மீள்பார்வைக்கு வழிகோலப்பட்டிருக்கிறது. பழைய ஓலைச்சுவடிகள், பாரம்பரிய செவிவழி மருத்துவ முறைகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு புத்துயிர் தரப்பட்டு வருகிறது. இவையெல்லாம் இன்னும் மேலை நாட்டவரின் அலோபதி மருத்துவ முறைக்கு இணையான அளவில் பெரும் பொருட்செலவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படவில்லை.
மருந்தால் மட்டுமே நோய் குணமாவதில்லை. மருத்துவர் மீதான மற்றும் மருந்தின் மீதான நம்பிக்கையும் சிகிச்சையில் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால் ஒரேயடியாக டெங்கு காய்ச்சலுக்கு தரப்படும் நிலவேம்புக் குடிநீர் என்கிற மாற்று மருத்துவ முறையின் பரிந்துரையை ஒதுக்கிவிட வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில், அதுமட்டுமே சிகிச்சை என்று கருதி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையை அணுகாமல் இருப்பது என்பது பகுத்தறிவின் பாற்பட்டதாக தோன்றவில்லை.
தனது ரசிகர்களை, பொதுமக்களுக்கு பரவலாக நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதில் எந்தவித தவறும் காண முடியவில்லை. ஆய்வு முடிவுகள் வெளிவரும் வரை தனது ரசிகர்கள் பொது மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டாம் என்று கூறும் உரிமை கமல்ஹாசனுக்கு இருக்கிறது. வேறொரு நடிகர், அரசியல் கட்சித் தலைவர் தனது ரசிகர்களையோ தொண்டர்களையோ நிலவேம்புக் குடிநீர் வழங்கும்படி கூறினால் அதை எப்படி குறைகாண முடியாதோ, அதேபோல கமல்ஹாசனின் கருத்தை விமர்சிப்பதும் தவறு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com