அடிபணிகிறதா ஆணையம்?

ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல்

ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்குப்பதிவின் முடிவுகளை அந்த மாநில மக்கள் உடனடியாக தெரிந்துகொண்டுவிட முடியாது. முடிவுக்காக டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி வரை அவர்கள் காத்திருக்க வேண்டிவரும். ஏனென்றால், சட்டப்பேரவை தேர்தல் காணும் இன்னொரு மாநிலமான குஜராத் வாக்காளர்கள் அப்பொழுதுதான் வாக்களித்திருப்பார்கள்.
ஹிமாசலப் பிரதேசத்துக்கான வாக்களிப்பு தேதியை அறிவித்துவிட்டு குஜராத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்காமல் விட்டிருப்பதால் இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இதற்குப் பின்னால் அரசியலும் மத்திய அரசின் தலையீடும் இருக்கிறது என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் அர்த்தமில்லை என்று ஒதுக்கிவிட்டுவிட முடியாது. 
ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையும் இரண்டாவது வாரத்திலேயே, அதாவது 2018 ஜனவரி 28-இல், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. சாதாரணமாக அடுத்தடுத்து சட்டப்பேரவைப் பதவிக்காலம் முடிவடையும் மாநிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. அப்படியிருக்கும்போது மிக நீண்ட இடைவெளியில் ஹிமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் வாக்கெடுப்பு நடத்தி ஒரே நேரத்தில் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது எதற்காக என்கிற தார்மிக ரீதியான கேள்வி எழுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக ஹிமாசலப் பிரதேசமும், குஜராத்தும் ஒரே நேரத்தில்தான் வாக்கெடுப்பை சந்தித்திருக்கின்றன. இதற்கு முன்னால் 2002-இல் குஜராத் கலவரம் ஏற்பட்டபோது மட்டும், இரண்டு மாநிலங்களிலும் வெவ்வேறு தேதிகளில் வாக்கெடுப்பை நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டது.
குஜராத் மாநிலத்தில் கடந்த மூன்று முறையாக ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை கடுமையான எதிர்ப்பை சந்திக்கிறது. அம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் பா.ஜ.க. பலவீனப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க.வின் நிரந்தர ஆதரவாளர்களான படேல்கள், பட்டிதார் சமூகத்தினர் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். அதேபோல, சத்ரியர்கள், தலித்துகள், விவசாயிகள் ஆகியோர் மத்தியிலும் பா.ஜ.க.வுக்கு எதிரான மனோநிலை வலுத்துவருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது செல்வாக்குச் சரிவை தடுத்து நிறுத்த ஆளும் பா.ஜ.க. எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஆட்சியின் மீதான அதிருப்தியைப் போக்குவதற்காக அரசு பல திட்டங்களையும் பல்வேறு பிரிவினருக்கு சலுகைகளையும் அறிவித்தவண்ணம் இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஹிமாசலப் பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் அறிவித்துவிட்டு குஜராத்துக்கு தேர்தல் தேதியை அறிவிக்காமல் விட்ட 10-ஆவது நிமிடத்தில் குஜராத் முதல்வர் பல நூறு கோடி ரூபாய்க்கான சலுகைகளை அறிவித்ததை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றன.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக குஜராத்தில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி பாவ்நகர், வதோதரா மாவட்டங்களில் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருக்கிறார். பிரதமர் மோடியின் குஜராத் சுற்றுப்பயணத்திற்காகவும் அறிவிப்புகளுக்காகவும்தான் தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பை தள்ளிப் போட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துகிறது. ஹிமாசலப் பிரதேசத்துடன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தால் நன்னடத்தை விதி அமலுக்கு வந்து முதலமைச்சர், பிரதமர் ஆகியோர் எந்தவித அறிவிப்பையும் வெளியிட முடியாமல் போயிருக்கும்.
குஜராத்தில் பெய்த பெருமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஹிமாசலப் பிரதேசத்துடன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தால் அங்கெல்லாம் நிவாரணப் பணிகள் தடைபட்டிருக்கும் என்பதும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதியின் வாதம். அரசு ஊழியர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டி வரும் என்றும் அவர் விளக்கம் தருகிறார்.
தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களான டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.ஒய். குரேஷியும் இதுகுறித்து வேறுவிதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அரசியல்வாதிகளின் பங்களிப்பு இல்லாமல் நிவாரணப் பணிகளை தொடர்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை' என்று டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், "தேர்தல் நேரத்திலான பிரதமர் மோடியின் குஜராத் விஜயம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும் தன்னிச்சையான செயல்பாட்டையும் குலைக்கிறது' என்று எஸ்.ஒய். குரேஷியும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
2012 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அன்று மத்தியில் ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸின் வற்புறுத்தலுக்கு இணங்கி, குஜராத்தின் அன்றைய முதல்வர் நரேந்திர மோடியை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவிடாமலும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவிடாமலும் தேர்தல் ஆணையம் நீண்ட நாட்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகளை குஜராத்தில் அமல்படுத்தியது என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்திருப்பதிலிருந்து, இப்போது காங்கிரஸின் அடிச்சுவட்டில் பா.ஜ.க.வும் பயணிக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவு, அரசியல் சட்ட அமைப்புக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com