இனியாவது...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் அரசுமுறைப் பயணத்திற்கு ஜிபூட்டி நாட்டைத் தேர்ந்தெடுத்து விஜயம் செய்தது பலரின் புருவங்களை உயர வைத்தது. ஜிபூட்டி என்றொரு நாடு இருக்கிறது என்பதேகூடப் பலருக்கும் தெரியாத நிலையில், இந்தியா போன்ற ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் அந்த நாட்டைத் தனது முதல் அரசுமுறைப் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது.
ஜிபூட்டிக்கு விஜயம் செய்யும் முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தான். 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இந்த நாட்டுக்கு இதற்கு முன் இந்தியப் பிரதமர் மட்டுமல்ல, வேறு எந்த முக்கியமான நாட்டின் அதிபரோ, பிரதமரோ அரசுமுறைப் பயணமாக விஜயம் செய்ததில்லை. ஆனாலும் ஜிபூட்டியின் ராணுவ ரீதியிலான புவியியல் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதி என்று கருதப்படும் செங்கடலையும் ஏமன் வளைகுடாவையும் ஒட்டிய பகுதியில் அமைந்திருக்கிறது இந்த நாடு. வடக்கே ஏன்ட்ரியா, தெற்கிலும் மேற்கிலும் எத்தியோப்பியா, தென்கிழக்கில் சோமாலியா ஆகிய நாடுகள் சூழ்ந்திருக்க ஏனைய பகுதிகள் செங்கடலை ஒட்டி அமைந்திருக்கின்றன. தென்கடலும் இந்துமகா சமுத்திரமும் இணையும் இடத்தில் அமைந்திருப்பதால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா, ஆசியா என்று பல்வேறு பகுதிகளுடனும் தொடர்பு கொள்ளும் புவியியல் முக்கியத்துவம் ஜிபூட்டிக்கு உண்டு.
நாடு என்று எடுத்துக்கொண்டால் கடற்கரையைத் தவிர பெரிய அளவில் எந்தவித வளமும் இங்கே கிடையாது. தரிசு பூமிதான் பெரும்பாலும். ஜிபூட்டியின் அதிபர் இஸ்மாயில் ஒமர்கொயில்லே பலவீனங்களை பலமாக மாற்றி ஜிபூட்டியைப் பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தனது நாட்டின் புவியியல் முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி, அனைத்து வல்லரசுகளுக்கும் ஜிபூட்டியில் ராணுவத் தளம் அமைத்துக்கொள்ள அவர் அனுமதித்திருப்பது இதனால்தான். துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்று கடல் வணிக முக்கியத்துவம் பெறும் நாடாக ஜிபூட்டியை உருவாக்குவதுதான் அவரது குறிக்கோள்.
ஜிபூட்டியின் முக்கியத்துவத்தை இந்தியாவுக்கு முன்னால் சீனா புரிந்துகொண்டு தன்னுடைய முதல் வெளிநாட்டு ராணுவத் தளத்தை இங்கே அமைத்திருக்கிறது. சீனா மட்டுமல்ல, நெடுங்காலமாக ஜிபூட்டியைத் தனது காலனியாக அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரான்ஸ் மிகப்பெரிய ராணுவ தளத்தை இங்கே எப்போதோ ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் ஜிபூட்டியில் ராணுவ தளங்கள் இருக்கின்றன. அமெரிக்காவும் சரி, பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்காக ஜிபூட்டியில் மிகப்பெரிய ராணுவ தளம் வைத்திருக்கிறது. 2011 முதல் ஜப்பானுக்கும் ஜிபூட்டியில் ராணுவ தளம் இருக்கிறது.
ஜிபூட்டியிடம் சீனா கடந்த ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 2026 வரையில் 10,000 வீரர்களுடனான ராணுவ தளத்தை அங்கே நிறுவி செயல்படலாம். ஆப்பிரிக்கக் கண்டத்தில் தனது மனிதாபிமான சேவைக்காகவும், கடல் கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் இங்கே கடற்படைத் தளம் அமைக்க இருப்பதாக சீனா தெரிவிக்கிறது. இந்துமகா சமுத்திரம் வழியாக தனக்கு வரும் கச்சா எண்ணெய், ஏனைய தயாரிப்பு மூலப்பொருள்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காகத்தான் ஜிபூட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக சீனா கூறினாலும், அது முழு உண்மையல்ல.
பாகிஸ்தானிலுள்ள "க்வாடர்' துறைமுகத்தைத் தனது கடற்படைத் தளமாக்குவதற்கு சீனா முழுமூச்சில் இறங்கியிருப்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல, ஜிபூட்டியையும் எல்லா வசதிகளும் கொண்ட மிகப்பெரிய தளமாக மாற்றுவது சீனாவின் குறிக்கோளாக இருக்கக்கூடும். முன்பு மியான்மர், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், இப்போது ஜிபூட்டி என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் தனது கடற்படைத் தளத்தை அமைக்கும் சீனாவின் முயற்சியில் இதுவும் ஒன்று. சமீப காலமாக சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள், வேவு பார்க்கும் கப்பல்கள் ஆகியவை இந்துமகா சமுத்திரத்தில் தொடர்ந்து தென்படுவதாக இந்திய கடற்படை அரசுக்கு தெரிவித்திருக்கிறது.
உலகத்தின் கச்சா எண்ணெயை ஏற்றிச்செல்லும் 80% கப்பல்கள் இந்துமகா சமுத்திரத்தின் வழியாகத்தான் பயணிக்கின்றன. அதேபோல உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு சரக்கும் இந்துமகா சமுத்திரத்தின் வழியாகத்தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்பு இந்துமகா சமுத்திரத்தின்மீது அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு கண் இருந்ததோ, அதே அளவுக்கு இப்போது சீனாவுக்கு இந்துமகா சமுத்திரத்தைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் ஆசை இருக்கிறது. அதனால்தான் இந்துமகா சமுத்திரத்தில் உள்ள நாடுகளில் எல்லாம் தனது முதலீட்டில் துறைமுகங்கள், சாலைகள், ரயில்பாதைகள் ஆகியவற்றை அமைப்பதில் சீனா முனைப்புகாட்டி வருகிறது.
சுதந்திர இந்தியா, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் காட்டிய முனைப்பை, புவியியல் ரீதியில் ராணுவ, வணிக நோக்குடனான வெளியுலக தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படாமல் இருந்துவிட்டது. ஆப்பிரிக்காவுடனான நமது நெருக்கமும் படிப்படியாகக் குறைந்து வந்தது. இப்போதுதான் நாம் மீண்டும் விழித்துக்கொண்டு 2015-இல் இந்திய - ஆப்பிரிக்க மாநாட்டை தில்லியில் கூட்டினோம்.
இந்தியக் குடியரசுத் தலைவரின் ஜிபூட்டி விஜயம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இன்னும்கூட ஜிபூட்டியில் இந்தியத் தூதரகம் அமைக்கப்படவில்லை. இனிமேலாவது விழித்துக்கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com