சீனாவில் மாற்றம்!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது மாநாடு அதிபர் ஜீ ஜின்பிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது மாநாடு அதிபர் ஜீ ஜின்பிங் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எழுப்பப்பட்ட ஐயப்பாடுகளைபொய்யாக்கி இருக்கிறது. 2,287 உறுப்பினர்கள் கூடியிருந்த, தியானென்மென் சதுக்கத்தை எதிர்நோக்கியிருக்கும் 'கிரேட் ஹால்' என்கிற அரங்கத்தில் தனக்கு முன்னால் சீனாவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியையும் வழிநடத்திய டெங்ஜியோ பிங், ஹூ ஜின்டோ ஆகியோருடன் அதிபர் ஜீ ஜின்பிங் நுழைந்தபோது பல்வேறு ஊகபோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 
சீனாவைக் கடுமையாக பாதித்திருக்கும் புரையோடிப்போன ஊழலுக்கு எதிராக அதிபர் ஜீ ஜின்பிங் நடத்திவரும் போராட்டம் அந்த மூத்த தலைவர்கள் இருவரையும் அதிருப்திக்குள்ளாகியிருக்கிறது என்பது பரவலான வதந்தி. அவர்களது ஆதரவாளர்கள் பலர் ஊழல் புகாரில் சிக்கியிருப்பதால், அந்த இரு தலைவர்களும் அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டு வந்ததை பொய்ப்பித்திருக்கிறது 19-ஆவது கட்சி மாநாடு.
தியானென்மென் சதுக்கத்தை எதிர்நோக்கியிருக்கும் கிரேட் ஹால் என்கிற அரங்கத்துக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணி உண்டு. சீன மக்கள் குடியரசின் 10-ஆவது ஆண்டு விழா 1959-இல் நடந்தபோது, அதை நினைவுகூரும் விதமாக இப்படியொரு அரங்கம் எழுப்பப்பட வேண்டும் என்று கட்டளை இட்டவர் மாசே துங். சீனாவின் முதல் பிரதமரான சூயென்லாயிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 10 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட 'கிரேட் ஹால்' அரங்கத்தில் 3,293 பேர் அமரலாம். இது போதாதென்று மாடத்தில் (பால்கனி) அதே எண்ணிக்கையிலானவர்கள் அமர முடியும். அதற்கு மேலே, கேலரியில் 2,518 பேர் இடம் பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 9,000 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய மாபெரும் அரங்கம் அது. அரங்க மேடையில் மட்டும் 300 முதல் 500 பேர் உட்காரலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 
அரங்கத்தின் பிரம்மாண்டத்தைப் போலவே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து வருடத்திற்கு ஒருமுறையிலான மாநாடும் பிரம்மாண்டமானது. அதிபர்களை மாற்றுவதும், அதிபர்கள் தங்களது செல்வாக்கை பலப்படுத்திக் கொள்வதும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளில்தான்.
கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது மாநாடு அதிபர் ஜீ ஜின்பிங்கை முந்தைய அதிபர்களான மாசே துங், டெங் ஜியாவோபிங் ஆகியோருக்கு நிகரான நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. அவரது அரசியல் தத்துவம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை சாசனத்தில் மாசே துங், டெங் ஜியாவோபிங் ஆகியோருடைய பதிவுகளைத் தொடர்ந்து இப்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. 
அதிபர் ஜீ ஜின்பிங் இரண்டாவது முறையாக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை சாசனம் என்பது சீனாவின் தேசிய அரசமைப்புச் சட்டத்திலிருந்து வேறுபட்டது. கட்சியின் கொள்கை சாசனம்தான் உறுப்பினர்களுக்கான கொள்கை விளக்கத்தையும் நடத்தை விதிகளையும் தீர்மானிக்கிறது. அதுமட்டுமல்லாமல், கட்சியின் வரலாறு குறித்த பார்வை, கட்சியின் இன்றைய - நேற்றைய தலைவர்களின் பங்களிப்புகள் ஆகியவற்றையும் கொள்கை சாசனம் உள்ளடக்குகிறது. கட்சியின் எந்தவொரு முடிவையும் கட்சி மாநாட்டில் கொள்கை சாசனத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.
'சீனாவுக்கான சிறப்புத்தன்மையின் அடிப்படையில் ஜீ ஜின்பிங்கின் புதிய சோஷலிசக் கொள்கை' என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல் விளக்கமாக கட்சிக் கொள்கை சாசனத்தில் திருத்தம் ஏற்படுத்தி, 19-ஆவது கட்சி மாநாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. மாறிவிட்டிருக்கும் சூழ்நிலைக்கேற்ப சோஷலிசத்துக்கான விளக்கத்தை அதிபர் ஜீ ஜின்பிங் அதில் எடுத்துரைத்திருக்கிறார். இதன் மூலம் கட்சி உறுப்பினர்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் சீனாவின் புதிய சோஷலிசக் கண்ணோட்டம் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது.
அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் ஆகிய இருவர் மட்டுமல்லாமல், லீ ஷான்ஸு (67), துணைப் பிரதமர் ஜாங் யாங் (62), வாங் ஹுனிங் (62), ஷாவ் லெஜி (60), ஹான் ஹெங் (62) ஆகியோர் பொலிட்பியூரோ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 68 வயதைக் கடந்தவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்கிற விதி இருப்பதால் இவர்களில் எவரும் ஜீ ஜின்பிங்கின் இடத்திற்கு 2022 கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இல்லை.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 2,287 உறுப்பினர்களில் பலர் அதிபர் ஜீ ஜின்பிங்கின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், அவரது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையுடன் தொடர்பு உள்ளவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் பிராங் செங்ராய், ஜியாங் யாங், சாங் வென்குவான், ஊ செங்குலி உள்ளிட்ட பலரும் ஓரம் கட்டப்பட்டிருக்கிறார்கள். தனது நம்பிக்கைக்கு உரியவர்களும், நிர்வாகத்திறமை உள்ளவர்களும், ராணுவ பின்னணி உள்ளவர்களும் அதிபர் ஜீ ஜின்பிங்கால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். 72% உறுப்பினர்கள் 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள். 99% பேர் கல்லூரியில் பட்டப்படிப்பும் அதற்கும் மேலும் படித்தவர்கள்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது மாநாடு அதிபர் ஜீ ஜின்பிங்கின் கரத்தை வலுப்படுத்தி இருக்கிறது. இது சீனாவில் மேலிருந்து கீழ்வரை புரையோடிப் போயிருக்கும் ஊழல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா, வைக்காதா என்பதைப் பொருத்துத்தான் சீனாவின் வருங்காலம் அமையும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com