இது அடிமை நாடா என்ன?

ஒரு விசித்திரமான அவசரச் சட்டத்தை முதல்வர்

ஒரு விசித்திரமான அவசரச் சட்டத்தை முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த அவசரச் சட்டம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டும் கூட, கடந்த ஒன்றரை மாதமாக அப்படி ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது வெளியில் கசியாமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது எனும்போது, அரசின் நோக்கத்தை மேலும் சந்தேகிக்கத் தூண்டுகிறது.
செப்டம்பர் 7-ஆம் தேதி ராஜஸ்தான் அரசு, "குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் மாநில திருத்தம்) அவசரச் சட்டம் 2017' என்ற அவசரச் சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள், முன்னாள் - இன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது, மாநில அரசின் உரிய முன் அனுமதி இல்லாமல், எந்தவித விசாரணையும் மேற்கொள்ள முடியாது. அதேபோல, அரசு ஊழியர் மீது லஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலோ வேறு எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டாலோ அவரது குற்றம் உறுதி செய்யப்படும்வரை அவரது பெயர், புகைப்படம், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பத்திரிகைகளோ, தொலைக்காட்சி ஊடகங்களோ வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கும், இந்த அவசரச் சட்டம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி தனிநபர்கள் (அமைச்சர்கள், சட்டப்
பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள்), அமைப்புகள் மீதான குற்றச்சாட்டுகளையோ, கருத்துகளையோ ஊடகங்களில் அல்லது சமூக வலைதளங்களில் தெரிவிக்கக் கூடாது. குறிப்பாக, மாநில அரசின் கொள்கைகள், திட்டங்களை எந்த இடத்திலும் அரசுப் பணியாளர்கள் விமர்சிக்கக் கூடாது. இதனை மீறி எவரேனும் நடந்தால் அவர்கள் மீது துறைரீதியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசின் அனுமதி இல்லாமல் பணியிலோ, பொறுப்பிலோ உள்ள அரசு ஊழியர்கள் மீதோ, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீதோ, அவர்கள் பணிக்கால நடவடிக்கை குறித்த எந்தவித விசாரணையையும் அரசின் முன் அனுமதி பெறாமல் மேற்கொள்ள முடியாது என்கிறது இந்த அவசரச் சட்டம். இதற்கு முன்னால் மகாராஷ்டிர மாநிலத்தில் இதேபோல ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்றாலும்கூட, அந்தச் சட்டத்தில் விசாரணைக்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குத்தான் அரசின் முன் அனுமதியை அந்தச் சட்டம் வழிவகுக்கிறது. அந்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
வசுந்தரா ராஜே சிந்தியா அரசின் அவசரச் சட்டம், மகாராஷ்டிர அரசின் அவசரச் சட்டத்தை ஒன்றுமில்லாததாக்கி இருக்கிறது. விசாரணைக்கு அரசு அனுமதி வழங்குவது வரை, ஊடகங்கள் அதுகுறித்த எந்தவித செய்தியையும் வெளியிடக் கூடாது என்று தடை பிறப்பிக்கப்பட்டதுடன் நில்லாமல், அதை மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க முற்பட்டிருக்கிறது.
அரசு ஊழியர்கள் என்கிற வளையத்துக்குள் முதலமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் வருகிறார்கள். ஏதாவது ஊழல் குறித்த ஆதாரங்கள் கிடைத்தாலும்கூட, அதை வெளியிடவோ, அது குறித்து தகவல்களை மக்கள் மன்றத்தில் பதிவு செய்யவோ, ஊடகங்களுக்கு இந்த அவசரச் சட்டத்தின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 
கடந்த 70 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் குறித்து விசாரிக்கவோ, வழக்கு தொடரவோ, தண்டிக்கவோ பகீரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டும்கூட மிகக் குறைவான வழக்குகளில்தான் அவர்கள் சிக்கி தண்டனை பெற்றிருக்கிறார்கள். துணைச் செயலர் பதவிக்கு மேலே உள்ள அரசு ஊழியர்களின் தவறுகள் குறித்து, விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதுதான் அதற்குக் காரணம். இதனால், குறிப்பிட்ட அதிகாரி பணி ஓய்வு பெறும்வரை விசாரணையை தொடங்க முடிவதில்லை. காரணம், அரசு காலவரம்பில்லாமல் அனுமதி வழங்குவதை ஒத்திப்போட்டு விடுகிறது. 
உச்சநீதிமன்றம் இதற்கு முன்னால் இரண்டு முறை இதுபோல முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மத்திய புலனாய்வுத் துறை அரசின் முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தால் பல ஊழல் அரசு ஊழியர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும், ஒருவருடைய பதவியின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு விசாரணையிலிருந்து வெவ்வேறு விதமான பாதுகாப்பு வழங்குவது தவறு என்றும் 2014-இல் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 
அதேபோல, 2016-இல், எந்த வழக்காக இருந்தாலும் காவல்துறையினருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. நீதிமன்ற வழக்கு விசாரணைக்குத்தான் அரசின் முன் அனுமதி தேவையே தவிர, காவல்துறையினரின் விசாரிக்கும் உரிமைக்கோ, முதல் தகவல் பதிவுக்கோ எந்தவிதத் தடையும் கூடாது என்று உச்சநீதிமன்றம் அந்த வழக்கில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ராஜஸ்தான் அரசின் அவசரச் சட்டம், முன் அனுமதி வழங்குவதற்கு 180 நாட்கள், அதாவது, ஆறு மாத அவகாசத்தை அரசுக்கு வழங்குகிறது. இந்த ஆறு மாதத்தில் தடயங்களை அழிக்கவும், விசாரணையை திசை திருப்பவும் ஊழல்வாதிகளால் முடியும் என்பது ஊரறிந்த ரகசியம். 
ஊடகங்களுக்கும் இடித்துரைப்பாளர்களுக்கும் விசாரணை அமைப்புகளுக்கும் வாய்ப்பூட்டுப் போட்டு ஊழலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவே இப்படியொரு சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. பேச்சுரிமை வழங்கப்பட்டிருக்கும் சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சட்டமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com