மாற்றமல்ல, ஏமாற்றம்!

மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்த

மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்த மத்திய அமைச்சரவை மாற்றம் எந்தவித அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் செய்யப்பட்டிருக்கும் மூன்றாவது அமைச்சரவை மாற்றம் இது. சிறப்பாகச் செயல்பட்டவர்கள் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு பிரதமரின் எதிர்பார்ப்புக்கேற்ப உயராதவர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் 76 அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15% என்கிற அளவில் அமைச்சரவை அமையலாம் என்பதால் இன்னும் ஆறு அமைச்சர்களைச் சேர்த்துக்கொள்ள முடியும். ஒருவேளை ஐக்கிய ஜனதா தளத்தை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வதற்கும் ஏனைய கூட்டணிக் கட்சியினரைத் திருப்திப்படுத்தவும் அந்த ஆறு இடங்களைப் பிரதமர் விட்டு வைத்திருக்கிறாரோ என்னவோ.
2014-இல் ஆட்சிக்கு வந்தது முதலே நரேந்திர மோடி அமைச்சரவையைக் குறித்து இருந்து வரும் விமர்சனம், தங்களுக்கென்று செல்வாக்குள்ள தலைவர்கள் அவரது அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது. அப்படியே இடம்பெற்றவர்களும்கூட ஒருவர் பின் ஒருவராக அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டனர். இப்போதைக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் மட்டும்தான் குறிப்பிடத்தக்க தலைவர்களாக அமைச்சரவையில் இருக்கிறார்கள். நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
இப்போதைய அமைச்சரவை மாற்றத்தில் குறிப்பிடத்தக்கவை மூன்று. முதலாவது நிர்மலா சீதாராமனை பாதுகாப்பு அமைச்சராக்கி இருப்பது. இரண்டாவது முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறையின் அமைச்சராக்கப்பட்டிருப்பது. மூன்றாவது, அரசியலுக்கு அப்பாற்பட்ட, நிர்வாகத்துறையில் திறமை படைத்த நான்கு பேரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருப்பது.
நிர்மலா சீதாராமன் முழுநேரப் பாதுகாப்புத் துறை அமைச்சராக கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருப்பது யாருமே எதிர்பார்த்திராத ஒன்று. முழுநேரப் பாதுகாப்புத் துறை அமைச்சராகச் செயல்படப் போகும் முதல் பெண்மணியாகிறார் நிர்மலா சீதாராமன். இதற்கு முன்னால் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பாதுகாப்புத் துறையைக் கூடுதல் பொறுப்பாக வைத்துக் கொண்டிருந்தார் என்றாலும், கட்சிக்கும் ஆட்சிக்கும் புதிய வரவான நிர்மலா சீதாராமன் மீது இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்து முக்கியமானதொரு துறையின் பொறுப்பை பிரதமர் ஒப்படைத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராகச் சென்றுவிட்ட பிறகு நீண்ட நாள்களாகவே முழுநேரப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லாமல் இருந்தது நரேந்திர மோடி அரசின் மீதான குற்றச்சாட்டாகத் தொடர்ந்து வந்தது. எல்லைப்புறத்தில் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் பிரச்னைகள் நிலவும் வேளையில் முழுநேரப் பாதுகாப்பு அமைச்சர் இல்லாமல் இருந்தது மிகப்பெரிய தவறு. நிர்மலா சீதாராமனை நியமித்ததன் மூலம் அந்தத் தவறு திருத்தப்பட்டிருக்கிறது. அமைச்சரவையிலுள்ள 8 பெண் அமைச்சர்களில் 6 பேர் இப்போது கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக கேபினட் அந்தஸ்துடன் உயர்த்தப்பட்டிருக்கிறார். நரேந்திர மோடி அரசு சிறுபான்மையினரின் பயத்தைப் போக்குவதில்லை என்பதும், அவர்கள் நலனைப் பாதுகாப்பதில்லை என்பதும் பெரும்பான்மை சமூகத்தின் கலாசாரத்தைத் திணிக்க முற்படுகிறது என்பதும் பரவலான குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை எந்த அளவுக்கு முக்தார் அப்பாஸ் நக்வி அகற்றுவார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.
வாஜ்பாய், அத்வானி காலகட்டத்திலிருந்து நரேந்திர மோடி காலகட்டத்துக்கு மாறிவிட்டிருப்பதன் அடையாளம்தான், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட இளைய தலைமுறை அமைச்சர்கள் பலர் பிரதமர் மோடியால் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருப்பது.
எரிசக்தித் துறை அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றிய பியூஷ் கோயலுக்கு ரயில்வே துறையும், சுரேஷ் பிரபுவுக்கு வர்த்தகத் துறையும் தர்மேந்திர பிரதானுக்கு கேபினட் அந்தஸ்துடன் பெட்ரோலியத் திறன் மேம்பாட்டுத் துறையையும் அளித்திருப்பது இந்த அமைச்சரவை மாற்றத்தின் குறிப்பிடத்தக்க மோடி வித்தைகள்.
புதிதாக அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் 9 அமைச்சர்களில் 4 பேர் முன்னாள் இந்திய அரசுத்துறை அதிகாரிகள். கே.ஜே. அல்போன்ஸ் கண்ணந்தானம், ராஜ்குமார் சிங், சத்யபால் சிங், ஹர்தீப் சிங் புரி ஆகிய 4 பேரும் திறமைசாலிகள் என்றாலும் அவர்களது திறமைக்கேற்ற துறைகள் ஒதுக்கப்படாதது ஏன் என்பது புரியவில்லை. மாநிலப் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்தி அமைச்சரவையை மாற்றி அமைக்காமல் தகுந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து அமைச்சர்களாக்கி இருப்பது பாராட்டுக்குரிய செயல்பாடு.
வழக்கம்போல இந்த முறையும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்மலா சீதாராமனை தமிழகத்தின் அமைச்சரவைப் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மாற்றம் தமிழகத்தைப் பொருத்தவரை ஏமாற்றமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com