ஜியாமென் வெற்றி!

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்திய - பூடான் - சீன

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்திய - பூடான் - சீன முச்சந்தியில் உள்ள டோக்கா லாமில் காணப்பட்ட எல்லையோர பதற்ற நிலைமையில் 'பிரிக்ஸ்' மாநாடு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை பின்வாங்கிக் கொண்டு சீனாவிலுள்ள ஜியாமென் நகரத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றது பாராட்டுக்குரியது. 
பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பிரிக்ஸ் என்கின்ற அமைப்பு, உலகின் ஏறத்தாழ 48% மக்கள்தொகையினரின் பிரதிநிதித்துவம் பெறுகிறது. உலகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 22% பிரிக்ஸ் அங்கம் பெறும் நாடுகளில் உற்பத்தியாகிறது. இந்த அமைப்பு ஒருவகையில் ஐரோப்பியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்காவின் நாட்டோவுக்கும் சவாலாக இருப்பதுபோல் தோன்றினாலும், அந்த அமைப்புகளின் அளவுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடையே வர்த்தக, ராணுவ ஒற்றுமை நிலவுகிறதா என்றால் கிடையாது.
ஆனால் உலகின் மிகப்பெரிய வளரும் பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் இந்தியாவும் சீனாவும் இடம் பெற்றிருப்பதும், இவற்றுடன் ரஷியாவும் பிரேஸிலும் கைகோத்து இருப்பதும் பிரிக்ஸின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்துகிறது. 
ஜியாமெனில் நடந்த 9-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் டோக்கா லாம் பிரச்னையை ஒதுக்கிவைத்துவிட்டுத் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து செயல்பட்டதுதான் இந்த மாநாட்டின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம். பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள மறுத்திருந்தால் முந்தைய இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டைப்போல இந்த மாநாடும் ரத்தாகிவிட்டிருக்கும். 
இந்தியா வராமல் இருந்துவிடக் கூடாது என்பதால்கூட சீனா டோக்கா லாமிலிருந்து பின்வாங்கியிருக்கலாம். அப்படியே இருந்தாலும்கூட, சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக தனிமையில் நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் தங்கள் உறவு குறித்துத் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்க வேண்டும் என்று கூறியிருப்பது சீன அதிபரின் பெருந்தன்மையையும் அரசியல் கண்ணியத்தையும் எடுத்துரைக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று பிரச்னைகளில் தனது நிலைப்பாட்டுக்கு சாதகமான முடிவுகளை பிரிக்ஸ் மாநாட்டில் நிலைநாட்டியிருக்கிறார். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அவரது முதல் வெற்றி. கடந்தாண்டு கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் சீனா தடுத்துவிட்டது. அதுமட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்கள் பற்றிய பிரச்னையை இந்தியா எழுப்பக்கூடாது என்று பிரிக்ஸ் மாநாட்டுக்கு முன்னால் சீனா எச்சரித்திருந்தது. இந்த நிலையில், சீனாவின் தலைமையில் நடைபெற்ற ஜியாமென் பிரிக்ஸ் மாநாட்டில் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது உள்ளிட்ட அமைப்புகள் குறித்துக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
இரண்டாவதாக, ஜியாமென் பிரிக்ஸ் மாநாட்டைப் புறக்கணிக்காமலும் இரு நாடுகளுக்கிடையே இருந்த மனக்கசப்பை வெளிப்படுத்திக் கொள்ளாமலும் இந்தியா கலந்துகொண்டதால் சீனாவுடனான தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு ஆக்கபூர்வமான அடித்தளம் போடப்பட்டிருக்கிறது. இனியொருமுறை டோக்கா லாம் போன்ற பதற்றம் ஏற்படாத வகையிலும், எல்லைப்புற பாதுகாப்பு குறித்த பிரச்னைகளைத் தீர்வு காண்பதற்கு புதியதொரு வழிமுறையை ஏற்படுத்தவும் இந்தியா இதன்மூலம் வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. டோக்கா லாமிலிருந்து சீனா பின்வாங்கியதைத் தனக்குக் கிடைத்த ராணுவ வெற்றியாக இந்தியா தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல் அடக்கி வாசித்ததுதான் சுமுகமான உறவுக்கு வழிகோலியது.
பிரிக்ஸ் அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்கிற சீனாவின் முயற்சிக்கும் இந்தியா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சீனாவைப் பொருத்தவரை துருக்கி, இந்தோனேஷியா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளையும் பிரிக்ஸ் அமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி வருகிறது. மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளும் பல்வேறு பிரச்னைகளில் இந்தியாவுடன் ராஜதந்திர ரீதியாகக் கருத்துவேறுபாடு கொண்டவை. 
அதுமட்டுமல்லாமல், பிரிக்ஸ் அமைப்பை விரிவுபடுத்த இந்தியா சம்மதித்தால் சார்க் அமைப்பில் சீனாவைச் சேர்த்துக்கொள்ளும் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும். பிரதமர் நரேந்திர மோடி மிகவும் சாதுர்யமாக ஐந்து நாடுகள் கொண்ட அமைப்பை மேலும் விரிவாக்கும் திட்டத்துக்கு ஜியாமெனில் நடந்த மாநாட்டில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டிருக்கிறார்.
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாதக் குழுக்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டாலும் சீனா எந்த அளவுக்கு இதை ஏற்றுக்கொள்கிறது என்பது, அக்டோபர் மாதம் ஐ.நா. சபையில் ஜெய்ஷ் பயங்கரவாதி மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம்தான் உறுதிப்படுத்த முடியும். அது ஒருபுறம் இருந்தாலும் ஜியாமெனில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் புரிதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்று எல்லைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் பொருளாதார நட்புறவை வளர்ப்பதற்கும் பயன்படுத்துவதில்தான் நமது உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com