மனிதநேயத்துக்கு சோதனை!

ஜனநாயகத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கும்

ஜனநாயகத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கும் மியான்மர், இப்போதுதான் ராணுவத்தின் இரும்புத் திரை சற்றே விலக்கப்பட்டு வெளியுலகுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடி மியான்மருக்கு விஜயம் செய்து திரும்பியிருக்கிறார். பிரதமரின் இந்த விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையே 11 ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டிருக்கின்றன. கடல்வழி பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை மட்டுமல்லாமல் மியான்மரில் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவது வரை ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டிருக்கின்றன.
மியான்மருடன் நெருக்கமான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நெருக்கத்தை இந்தியா பலப்படுத்திக் கொள்ளாவிட்டால், மியான்மர் சீனாவின் நட்பு வளையத்துக்குள் சென்றுவிடும். மியான்மர் சீனாவுடன் அணி சேர்ந்துவிட்டால் வடகிழக்கு மாநிலங்கள் மீதான இந்தியாவின் உரிமை பறிபோகும் ஆபத்து காத்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் நாகர்கள் உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் மியான்மரிலிருந்துதான் இயங்கி வருகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு மியான்மர் அரசு மற்றும் ராணுவத்தின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதனால்தான் கடந்த பல ஆண்டுகளாகவே மத்தியில் ஆட்சிபுரிந்த எல்லா அரசுகளும் மியான்மரின் பிரச்னைகளில் தலையிடாமல் தவிர்த்து வந்திருக்கின்றன.
இந்திய - மியான்மர் உறவில் மிக சிக்கலான தர்மசங்கடமாக உயர்ந்திருப்பது ரோஹிங்கயா அகதிகள் பிரச்னை. மியான்மரைப் பொருத்தவரை அந்த நாட்டின் பெரும்பான்மையினரான பர்மியர்கள் தங்களது உள்நாட்டு விவகாரத்தில் எந்த ஒரு வெளிநாடும் தலையிடுவதை விரும்புவதில்லை. ஏனைய தென்கிழக்காசிய நாடுகளைப்போல் அல்லாமல் பெளத்த இனவெறி மிக அதிகமாக காணப்படும் நாடாக மியான்மர் திகழ்கிறது. மியான்மரின் சரித்திரத்தை சற்று திரும்பிப் பார்த்தால், அங்கே பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி விட்டிருக்கிறார்கள். அதேபோல சீனர்களையும் வெளியேற்றி விட்டிருக்கிறார்கள். இந்த பின்னணியில் அவர்கள் ரோஹிங்கயாக்களையும் வெளியேற்ற முற்படுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான ரோஹிங்கயாக்கள் கடந்த இரண்டு மூன்று வாரங்களில் மியான்மரிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 25 முதல் இதுவரை 75 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மியான்மரின் ராக்கைன் பகுதியிலிருந்து அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது. அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தில் பல ரோஹிங்கயா கிராமங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன.
ரோஹிங்கயாக்கள் என்பவர்கள் வங்கதேசத்தை ஒட்டிய மியான்மரின் மேற்கிலுள்ள ராக்கைன் பகுதியில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள். இவர்கள் பெரும்பான்மை பெளத்த மதத்தினரைப்போல் அல்லாமல் இன, மொழி, மத ரீதியாக வித்தியாசமானவர்கள். 78% குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் பகுதிதான் ரோஹிங்கயாக்கள் காணப்படும் மியான்மரிலேயே மிகவும் பின்தங்கிய ராக்கைன்.
1824-26இல் அன்றைய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ராக்கைன் பகுதியை கைப்பற்றியபோது இந்தியாவிலிருந்து பலரையும் அங்கே குடியேற ஊக்குவித்தது. அன்றைய ஒன்றுபட்ட வங்காளத்திலிருந்து முஸ்லிம்கள் பலர் ராக்கைன் பகுதியில் குடியேறினர். அவர்கள்தான் ரோஹிங்கயாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற பர்மிய அரசு, ரோஹிங்கயாக்களை தங்கள் நாட்டிலுள்ள 135 இனக் குழுக்களில் ஒன்றாக அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ரோஹிங்கயாக்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் நாடில்லா அகதிகளாக அலைய வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ 34 ஆயிரம் ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். சுமார் 40 ஆயிரம் பேர் இந்தியாவுக்கும் அகதிகளாக வந்திருக்கிறார்கள். மியான்மரின் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகியவை ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் தரத் தயாராக இல்லை. மியான்மரிலிருந்து படகுகளில் வெளியேறுகின்ற ரோஹிங்கயாக்கள் பலர் எந்த நாட்டிலும் அடைக்கலம் கிடைக்காமல் நடுக்கடலில் தத்தளிக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் என்று அலைகடலில் மடிந்து போகிறவர்களும் உண்டு.
ரோஹிங்கயா பிரச்னையில் இன்னொரு சிக்கலும் உண்டு. ரோஹிங்கயாக்கள் பலருக்கும் லஷ்கர்-ஏ-தொய்பா என்கிற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் அடைக்கலம் தேடி வந்திருக்கும் ரோஹிங்கயாக்களை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்கிற தர்மசங்கடத்தில் மத்திய அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது.
தனது மியான்மர் விஜயத்தின்போது ராக்கைனில் காணப்படும் தீவிரவாத வன்முறை குறித்து மியான்மர் அரசுடன் இணைந்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சர்வதேச நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்தில் ராக்கைன் பகுதியில் நடைபெறும் வன்முறை குறித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தவிர்த்திருக்கிறார்.
ரோஹிங்கயாக்கள் பிரச்னை மியான்மரின் பிரச்னையோ, வங்கதேசத்தின் பிரச்னையோ, இந்தியாவின் பிரச்னையோ அல்ல, இது உலகின் பிரச்னை. நாடற்றவர்களாக லட்சக்கணக்கானவர்களை அகதிகளாய் அலைய விடுகிறோமே, இதுதான் மனித நாகரிகத்தின் வளர்ச்சியா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com