நெஞ்சு பொறுக்குதில்லையே...

இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவது

இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்று கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை உருவாக்கிய அரசு, அந்த குழந்தைகளின் பாதுகாப்பை ஏனோ பள்ளி நிர்வாகங்களுக்கே வழங்கிவிட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகம் தங்கள் கல்விச்சாலையில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்கிற நம்பிக்கையில்தான் பெற்றோர்களும் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், பள்ளிக்கூடங்கள் சட்டத்தின் உணர்வையோ, பெற்றோர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையோ குறித்துக் கவலைப்படாமல் செயல்படுகின்றன என்பதைத்தான் தில்லியை அடுத்த குருகிராமில் இயங்கும் ரயான் உறைவிடப் பள்ளியில் அரங்கேறியிருக்கும் கோர சம்பவம் உணர்த்துகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ரயான் உறைவிடப் பள்ளியில் பயிலும் பிரத்யுமன் தாக்கூர் என்கிற ஏழு வயதுச் சிறுவன், அந்தப் பள்ளியில் பணிபுரியும் வாகன நடத்துநரான அசோக்குமார் என்பவரால் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவிட்டிருக்கிறது. தனது பாலியல் இச்சைக்கு உடன்பட மறுத்த அந்தச் சிறுவன் கழிப்பறையில் பேருந்து நடத்துநரால் கொல்லப்பட்டிருப்பது ரத்தத்தை உறையவைக்கும் கொடூர நிகழ்வு.
குருகிராமில் செயல்படும் ரயான் உறைவிடப் பள்ளியில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் காணப்படுகின்றன. கழிப்பறையை பயன்படுத்தும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கக் காவலாளிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களும் அதே கழிப்பறைகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனால் குழந்தைகள் பாலியல் இச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கான சூழல் காணப்பட்டது.
ஏழு வயது பிரத்யுமன் தாக்கூரின் கொலையாளி எந்தவித சோதனையோ கண்காணிப்போ இல்லாமல் கத்தியுடன் பள்ளிக்கூடத்திற்குள் வளைய வருவது தங்கு தடையில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தது. ரயான் உறைவிடப் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களின் பின்னணி குறித்து, காவல்துறையிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தும்கூட அவை செயல்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படவில்லை.
அசோக்குமார் என்கிற பேருந்து நடத்துநரான அந்தக் கொலையாளி, மாணவர்கள் பயன்படுத்தும் அதே கழிப்பறையை பயன்படுத்தியதும், அதில் நுழைந்ததும் பள்ளி சிறார்களின் பாதுகாப்பு குறித்த குருகிராம் காவல்துறையினரின் வழிகாட்டுதலை மீறிய செயல். காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் வேலைபார்க்கும் அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வாகன ஓட்டுநர்களும், நடத்துநர்களும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நுழைய முடியும். அப்படியிருக்கும்போது ரயான் உறைவிடப் பள்ளியில் அசோக்குமார் என்கிற அந்த வாகன நடத்துநர் எப்படி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் நுழைந்தார் என்பது குறித்தும், கத்தியுடன் அந்தப் பள்ளிக்குள் அவரால் எப்படி வளைய வரமுடிந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டாக வேண்டும். இதற்கு முன்னால் இதுபோல எத்தனை மாணவர்கள் அசோக்குமார் போன்ற ஊழியர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.
ரயான் உறைவிடப் பள்ளி என்பது மிகப்பெரிய கல்வி நிறுவனம். இந்தியாவில் மட்டும் 304 பள்ளிக்கூடங்களையும், இந்தியாவுக்கு வெளியில் 43 பள்ளிக்கூடங்களையும் நடத்துகிறது என்பதிலிருந்து அது எவ்வளவு பெரிய நிறுவனம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். சாதாரண தனியார் பள்ளிகளைவிடப் பல மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கும் இந்தக் குழுமத்தின் குருகிராம் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து கிடப்பதும், தீயணைப்புக் கருவிகள் செயல்படாமல் இருப்பதும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் அவை கண்காணிக்கப்படாமல் இருப்பதும், ஊழியர்களின் பின்னணி குறித்த விவரங்கள் அறியப்படாமல் இருப்பதும், சிறார்களுக்குப் பாதுகாப்பில்லாத கழிப்பறைகள் காணப்படுவதும், இதுபோன்ற பள்ளிகளில் எந்த அளவுக்கு நிர்வாகம் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
ரயான் உறைவிடப் பள்ளி போன்ற அதிகக் கட்டணம் பெறும் தனியார் பள்ளிகளிலேயே இதுதான் நிலைமை என்றால், இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் கோடிக்கணக்கான குழந்தைகளின் நிலைமை என்ன என்பது குறித்து சிந்திக்கும்போது அச்சம் மேலிடுகிறது. தனியார் பள்ளிகள் புற்றீசலாய் பெருகிவிட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களுக்கேகூட ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாத நிலை. கல்வித்துறையும் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அக்கறை காட்டாத போக்கு - இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை எப்படி, யார்தான் உறுதிப்படுத்துவது?
பள்ளிச் சிறார்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மகிழ்ச்சி. ஜூலை 16, 2004-இல் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மற்றும் சரஸ்வதி மழலையர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகள் குறித்த வழக்கில், ஜூலை 30, 2014-இல் விசாரணை நீதிமன்றம் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. ரயான் உறைவிடப் பள்ளி வழக்கிலும் இதுபோல நடக்காது என்பது என்ன நிச்சயம்? பாவம் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com