காலத்தின் கட்டாயம்!

ஜப்பான் பிரதமர் ஷின் ஸோ அபேயின்

ஜப்பான் பிரதமர் ஷின் ஸோ அபேயின் அரசுமுறைப் பயணம் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது. ஜப்பான் பிரதமரின் இப்போதைய இந்திய விஜயம் குறித்து காந்தி நகருக்கும் மும்பைக்கும் இடையே அதிவிரைவு புல்லட் ரயில் இயக்கப்படுவது குறித்த ஒப்பந்தம் பற்றி மட்டும்தான் அதிகமாக பேசப்படுகிறது. ஆனால், இந்த விஜயத்தின் பின்னணியில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பொருளாதார, ராஜதந்திர முடிவுகள் பல இருக்கின்றன.
இதற்கு முன்னால் பலமுறை ஜப்பானிய பிரதமர் ஷின் ஸோ அபே இந்திய பிரதமர் மோடியை சந்தித்திருந்தாலும்கூட டோக்கா லாம் பிரச்னைக்குப் பிறகு நடைபெற்றிருக்கும் சந்திப்பு என்பதால் இருதரப்பு விவாதத்தில் சீனாதான் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. டோக்கா லாம் பிரச்னையில் இந்தியாவும் சீனாவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த நேரத்தில் அந்த இரண்டு மாதங்களும் இந்தியாவுக்கு வெளிப்படையான ஆதரவை அளித்த நாடு ஜப்பான் மட்டுமே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 
டோக்கா லாம் பிரச்னையில் ஜப்பான் இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதற்கு காரணம் இருக்கிறது. ஜப்பானின் பகுதியான சென்காகூ தீவுகளை டோக்கா லாம் போலவே சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இந்தியா, ஜப்பான் மட்டுமல்லாமல் தென் சீனக் கடலிலுள்ள வேறு சில பகுதிகளையும் சீனா சொந்தம் கொண்டாடும் நிலையில், அந்த நாட்டின் ஏகாதிபத்திய எண்ணத்துக்கு முட்டுக்கட்டைபோட ஜப்பானுக்கு இந்தியாவின் துணை தேவைப்படுகிறது. 
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவைத் தனது பாதுகாப்புக்கு முழுமையாக நம்பி வந்த ஜப்பான், இப்போது தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் நாடாக பிரதமர் ஷின் ஸோ அபேயின் தலைமையில் புதியதொரு பாதையை வகுக்க முற்பட்டிருக்கிறது. அமெரிக்காவும், அதிபர் டிரம்பின் தலைமைக்குப் பிறகு பிற நாடுகளுக்கு உதவுவது என்கின்ற தனது கொள்கையை மாற்றிக் கொண்டு விட்டிருக்கிறது. இந்த சூழலில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஆசியாவின் வளர்ந்து வரும் இன்னொரு பெரிய பொருளாதாரமான இந்தியாவின் நெருக்கம் ஜப்பானுக்கு தேவைப்படுகிறது. 
காந்தி நகரில் பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ஷின் ஸோ அபேயும் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கை நிச்சயமாக சீனாவை நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனிக்கத் தூண்டியிருக்கும். இந்தியா, ஜப்பான் இரண்டு நாடுகளுக்குமே வட கொரியா மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும், வட கொரியாவின் அணு ஆயுத முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதும் சீனாவுக்கு எதிரான மறைமுகத் தாக்குதல். அதேபோல, தீவிரவாதக் குழுக்கள் பட்டியலில் ஜெய்ஷ் இ முகமதுவை சேர்ப்பதை நிராகரிக்கும் சீனாவை மறைமுகமாக தாக்குகிறது வன்முறைக்கு எதிரான தீர்மானம். தென் சீனக் கடல் பகுதியை யாரும் சொந்தம் கொண்டாடுவதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் கூட்டறிக்கை சீனாவைத்தான் கண்டிக்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
இந்தியாவை ஜப்பான் ஒரு பொருட்டாக மதிக்க தொடங்கியது அமெரிக்கா இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு பிறகுதான். அமெரிக்கா, இந்தியாவுடன் நெருங்குகிறது என்பதைப் புரிந்து கொண்ட ஜப்பான் அதன் பின்னால் இருக்கும் ராஜதந்திரத்தையும் புரிந்து கொள்ளத் தவறவில்லை. சர்வதேச உறவுகளில் அமெரிக்காவைப் பின்பற்றும் ஜப்பான், இந்தியாவுடன் தானும் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டதில் வியப்பொன்றுமில்லை. 
அமெரிக்காவிலிருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதையும் தங்களது தொழிற்சாலைகளை அமெரிக்காவுக்கு வெளியே நிறுவுவதையும் விரும்பாத டொனால்டு டிரம்ப் நிர்வாகம், போயிங், லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஜெட் போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவ அனுமதி வழங்கியிருக்கிறது எனும்போது எந்த அளவுக்கு அமெரிக்கா இந்தியாவை தனது நட்பு நாடாகக் கருதுகிறது என்பதை ஜப்பான் தெரிந்து கொண்டது.
இந்திய - ஜப்பான் உறவில் மிகப்பெரிய தடையாக இருந்தது இரண்டு நாடுகளுக்குமிடையேயான அணுசக்தி ஒப்பந்தம்தான். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்தவொரு நாட்டுடனும் ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதில்லை. அதனால் பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இழுபறியாகவே இருந்து வந்தது. இப்போது ஜப்பான் தனது நிபந்தனைகளையெல்லாம் தளர்த்திக் கொண்டு இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்திருக்கிறது. 
இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜப்பான்தான் இந்தியாவுக்கு மிக அதிகமான நிதி உதவி அளிக்கும் நாடாகத் திகழ்கிறது. அதேநேரத்தில் இரண்டு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம் குறைந்து வருவது கவனத்துக்குரியது. ஜப்பான் பிரதமரின் இந்திய விஜயத்தின் விளைவாக வர்த்தக உறவு மேம்படுவதுடன் ஆசியாவில் சீனாவுக்கு நிகரான சக்தியாக இந்தக் கூட்டணி உயருமேயானால் அது நிச்சயமாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பயன் அளிக்கும்.
அதேநேரத்தில் இரண்டு நாடுகளுமே வர்த்தக உறவு காரணமாக சீனாவைப் பகைத்துக் கொள்ள முடியாத இக்கட்டில் சிக்கியிருக்கின்றன என்பதையும், சீனா தவிர்க்க முடியாத சக்தியாக உலகில் உயர்ந்திருக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com