சொன்னால் போதாது

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விரைவிலேயே ஜி.எஸ்.டி.யில்

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விரைவிலேயே ஜி.எஸ்.டி.யில் இணைப்பது குறித்து மத்திய அரசு சிந்திக்கத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டால் அதனால் நுகர்வோர் பயன் அடைவார்கள். மாநில அரசுகள் எந்த அளவுக்கு இதற்கு ஆதரவு தெரிவிக்கும் என்பதும், மத்திய அரசு முழு மனதுடன் இதை அமல்படுத்த முற்படுமா என்பதும் கேள்விக்குரியது.
2012-இல் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலர் கொடுத்து இறக்குமதி செய்து கொண்டிருந்தபோது இந்தியாவிலுள்ள பெட்ரோல் பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 50 டாலராகக் குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ.70-க்கும் அதிகம். 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.51, டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.91 என்கிற நிலையில் தில்லியிலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.09, டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.05 என்கிற நிலையில் சென்னையிலும் சில்லறையில் விற்கப்படுகிறது. நரேந்திர மோடி அரசு பதவியேற்ற மே 26, 2014 அன்று, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41, டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.71 என்கிற நிலையிலும், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.60, டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.50 என்கிற நிலையிலும் காணப்பட்டது. இதே காலகட்டத்தில் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 108.02 டாலரிலிருந்து 53.83 டாலராகக் குறைந்தும்கூட அந்த வீழ்ச்சியின் பயன் நுகர்வோருக்குக் கிட்டவில்லை.
பெட்ரோல், டீசலின் விலையை சர்வதேச விலையுடன் இணைத்து நாள்தோறும் நிர்ணயிப்பது என்கிற வழக்கம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 5% அதிகரித்திருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 7.89 டாலர் அதிகரித்திருக்கிறது என்று இந்த விலை உயர்வை பெட்ரோலிய நிறுவனங்கள் நியாயப்படுத்த முற்பட்டாலும்கூட, தளர்த்தப்பட்ட விலைக் கட்டுப்பாட்டின் பயன் பொதுமக்களை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலைச் சரிவின் பயன் பொதுமக்களை போய்ச் சேராததற்கு முக்கியமான காரணம் மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கும் ஏற்ப கலால் வரி, விற்பனை வரி ஆகியவற்றை அதிகரித்ததுதான். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூ.9.48-லிருந்து ரூ.21.48 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.56-லிருந்து ரூ.17.33 ஆகவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு வகையில் சொல்லப் போனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைச் சரிவின் பயனை எல்லாம் அரசு தனது நிதி வருவாயை பெருக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொண்டதே தவிர, பொதுமக்களுக்கு அதன் பயனைத் தரவில்லை. 
அரசின் கலால் வரி வருவாய் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.99,184 கோடியிலிருந்து ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 691 கோடியாக அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்து பெட்ரோல், டீசல் பயனீட்டாளர்களைவிட அரசுதான் இதனால் பயன் அடைந்திருக்கிறது என்பது தெளிவு. ஆண்டொன்றுக்கு 3.2 கோடி கிலோ லிட்டர் பெட்ரோலும், 9 கோடி கிலோ லிட்டர் டீசலும் விற்பனையாவதால் இதிலிருந்து கிடைக்கும் பல்வேறு வரிகளின் மூலம் மத்திய, மாநில அரசுகள் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகின்றன என்பது எந்தவிதத்தில் நியாயம் என்பதை ஆட்சியாளர்கள்தான் விளக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு உலகிலேயே மிக அதிகமாக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் பயனீட்டாளர்கள் பெட்ரோல், டீசலுக்காக தரும் விலை பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட தென் ஆசிய நாடுகளின் விலையைவிட 60% அதிகம்.
தினசரி விலை நிர்ணயம் என்கிற முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றம் குறித்தோ, மிக அதிகமான அளவு வரி விதிப்பு செய்யப்படுகிறது என்பது குறித்தோ மக்கள் மத்தியில் பெரிய அளவில் எழுச்சி எழாமல் தடுக்கப்பட்டிருக்கிறது என்பது அரசின் ராஜதந்திரம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானியம் 86% குறைந்திருக்கிறது. மத்திய, மாநில வரிகள் பெட்ரோல் மீது 112%-ம், டீசல் மீது 300%-ம் அதிகரித்திருக்கிறது. இதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறும் காரணங்கள் இரண்டு. முதலாவது, கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்காகவும், வளர்ச்சிப் பணிகளுக்காகவும் மத்திய அரசுக்கு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது என்பது. இரண்டாவது, இதன் மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பதும், தனியார் வாகனப் பயன்பாடு குறைக்கப்பட்டு காற்று மாசு கட்டுப்படுத்தப்படும் என்பதும். இவை இரண்டுமே வலுவான காரணிகள் அல்ல.
பெட்ரோல், டீசலுக்கு அதிகப்பட்ச 28% ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அறிமுகப்படுத்தி சர்வதேச கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பயனை பயனீட்டாளர்களுக்கும் வழங்க அரசு முற்படுவதுதான் பாராட்டுக்குரிய முடிவு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com