வானமே கூரையாய்...

இந்தியாவின் நகர்ப்புறங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தால்

இந்தியாவின் நகர்ப்புறங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தால் விரிவடைந்தவண்ணம் இருக்கின்றன. பார்க்கும் இடமெல்லாம் பெருகிவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், அதிகரித்துவிட்ட வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களும் மட்டும்தான் நமது கண்களுக்கு தென்படுகின்றன. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பெருகிவிட்டிருக்கும் குடிசைப் பகுதிகளும், இருப்பதற்கு இடமில்லாமல் தெருவோரங்களில் தஞ்சமடைந்திருக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது குறித்து யாரும் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. 
நகர்ப்புற ஏழைகளின் வறுமையைக் குறைக்கவும், அவர்களது பிரச்னைகளைத் தீர்க்கவும் 2013-ஆம் ஆண்டு தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோள், நகர்ப்புறங்களில் வீடில்லாமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் வாழும் ஏழை, எளியோரின் நலனைப் பேணுதல். வீடில்லாதவர்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் இரவு நேரத் தங்கும் விடுதிகள் அமைத்துக் கொடுப்பது, புறம்போக்குப் பகுதி குடிசைகளில் வாழ்பவர்களின் அடிப்படை சுகாதாரத்தையும், தேவைகளையும், மருத்துவ வசதிகளையும் உறுதிப்படுத்துவது என்று தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் பல இலக்குகளை நிர்ணயித்து செயல்படும் என்று கூறப்பட்டது.
தெருவோரம் வசிப்போர், வெட்டவெளியில் வசிப்பவர்கள், மேம்பாலங்கள், ஆறு மற்றும் சாக்கடை ஓரங்களில் வசிப்பவர்கள், வழிபாட்டுத் தலங்கள், மண்டபங்கள், ரயில் மற்றும் போக்குவரத்து நிலையங்கள் ஆகியவற்றைத் தங்குதலுக்காகத் தஞ்சமடைபவர்கள் என்று வீடில்லாதவர்களுக்கு விளக்கம் அளிக்கிறது அரசின் குறிப்பு. இவர்களுக்கெல்லாம் குடியிருக்க வீடுகள் அமைத்துக் கொடுக்க முடியாமல் போனாலும், தங்கும் விடுதிகளாவது அமைத்துத் தர வேண்டும் என்கிற கோரிக்கையைப் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும்கூட இதுவரை ஆக்கபூர்வமாக எந்தவொரு முயற்சியும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், வீடில்லாமல் தெருவோரங்களையும், பொது இடங்களையும் தஞ்சமடைந்து வானமே கூரையாக வாழுகின்ற மக்கள் குறித்து கணக்கெடுப்பு ஒன்று அரசால் நடத்தப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஏறத்தாழ 17.7 லட்சம் பேர் தங்க இடம் இல்லாதவர்கள் என்கிற புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டது. உண்மை நிலை இதைவிட சில மடங்குகள் அதிகமாக இருக்கும் என்றாலும், தெருவோர வாசிகள் குறித்த அதிகாரபூர்வக் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது என்கிற அளவில் அரசின் முயற்சி வரவேற்புக்குரியது. 
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் இடையிலான பத்து ஆண்டுகளில், குடியிருக்க வழியில்லாதவர்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் குறைந்திருக்கிறது என்பது ஆறுதலுக்குரியது. ஊரகப்புறங்களில் வீடில்லாமல் தெருவோரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 28 விழுக்காடு குறைந்திருக்கிறது என்றால், நகர்ப்புறத் தெருவோர மற்றும் குடிசைவாசிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்து, கிராமப்புறங்களில் வீடில்லாதோரின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணத்தை ஊகித்துக் கொள்ளலாம். வேளாண்மை நடைபெறாததால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறையும்போது மக்கள் கூலிவேலை செய்து பிழைப்பதற்காக நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் என்பதைதான் இது தெளிவுபடுத்துகிறது.
கடந்த ஆண்டு இந்தப் பிரச்னை பொதுநல வழக்காக உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது மத்திய - மாநில அரசுகளின் அக்கறையின்மையை நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது. போதிய நிதி ஒதுக்கீடு இருந்தும்கூட நகர்ப்புற ஏழைகளுக்குப் பாதுகாப்பான இரவு நேர உறைவிடங்களை ஏற்படுத்திக் கொடுக்காததை நீதிமன்றம் கண்டித்தபோதுதான் மாநில அரசுகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை பயன்படுத்தாமல் மடைமாற்றம் செய்வது வெளிச்சத்துக்கு வந்தது.
மத்திய அரசின் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தில் இந்தியாவிலுள்ள 790 நகரங்கள் இடம் பெறுகின்றன. இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ரூபாய் ஆயிரம் கோடியும் முழுமையாக செலவிடப்படாமல் வேறுவேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஒதுக்கீடு நகர்ப்புற வீடில்லாதவர்களுக்கானது மட்டுமல்லாமல் ஏனைய செயல்பாடுகளுக்குக்கும்கூட என்கிற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 
நீதிபதிகள் மதன் லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் முன் இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசின் மெத்தனம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. 2016 - 17இல் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.412 கோடி செலவிடப்படாத நிலையில், 2017-18 நிதியாண்டில் மீண்டும் ரூ.228 கோடி வழங்கப்பட்டிருப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதி மாநில அரசுகளால் எப்படி செலவிடப்படுகிறது என்பது குறித்துக் கணக்குத் தணிக்கைக் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், நிதி ஒதுக்கீடு முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 
நிதி ஒதுக்கீடு செய்வதால் மட்டுமே தீர்வு கிடைத்துவிடாது. தெருவோர வாசிகளும் இந்தியக் குடிமக்கள்தான் என்பதை நினைவில் நிறுத்தி ஆட்சியாளர்கள் செயல்பட்டால் மட்டுமே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்; தெருவோரம் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கும் நியாயம் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com