பொறுப்பற்ற பேச்சு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு ஆண்டுதோறும்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு ஆண்டுதோறும் நியூயார்க்கில் கூடும்போது, அந்த நகரமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நியூயார்க்கில் குவிந்திருப்பார்கள். பெரிய நாடு, சிறிய நாடு என்கிற வேறுபாடு இல்லாமல் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர்கள் என்று ஐ.நா. சபையின் உறுப்பினர் நாடுகள் அனைத்திலிருந்தும் பிரதிநிதிகள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. சபையில் கூடுவார்கள்.
ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் உரையாற்றுவது என்பது எந்த ஒரு தலைவருக்கும் பெருமிதம் கொள்ளத்தக்க தருணம். உலக நாடுகளின் பிரதிநிதிகளின் முன்பாக, தங்களது நாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பதிவு செய்யவும், சர்வதேசப் பிரச்னைகளில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும் ஒரு நாட்டின் அதிபருக்கோ, பிரதமருக்கோ கிடைக்கும் அரிய வாய்ப்பு. அதனால் ஐ.நா. சபையின் பொதுக் குழுவில் உரையாற்றக் கிடைக்கும் வாய்ப்பை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்தி தனது ஆளுமையையும் தனது நாட்டின் கௌரவத்தையும் நிலைநாட்ட எந்த ஒரு தலைவரும் தவற விடுவதில்லை.
ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் சில தலைவர்கள் தங்களது மதிப்பை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். வேறு சிலர் உலக நாடுகளின் பார்வையில் தங்களது செயல்பாட்டால் தங்களைத் தரம் தாழ்த்திக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு. 
1960-இல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய அன்றைய சோவியத் யூனியனின் பிரதமர் நிகிடா குருச்சேவ் தனது காலணியைக் கழற்றி மேசையில் ஆவேசமாக ஓங்கித் தட்டியபோது, கூடியிருந்த உலக நாட்டுத் தலைவர்களின் நகைப்புக்கு உள்ளானார். 2009-இல் லிபியா அதிபர் முகமது கடாஃபி தனது முதலாவது ஐ.நா. உரையின்போது, ஐ.நா.வின் கொள்கை ஆவணத்தைக் கிழித்து எறிந்தார். கூடியிருந்த அத்தனை பேரும் அருவருப்புடன் முகம் சுளித்தனர். இதுபோல எத்தனை எத்தனையோ சம்பவங்கள் ஐ.நா. சபையின் பொதுக்குழு கூட்டத்தின்போது அரங்கேறியிருக்கின்றன. அந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முதலாவது உரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
உலகத்தின் சர்வ வல்லமையுள்ள ஒரு நாட்டின் தலைவர் பொறுப்பில்லாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதை உலகமே வியந்து பார்த்தது. 1960-இல் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை குழிதோண்டிப் புதைப்பேன் என்று அன்றைய சோவியத் பிரதமர் நிகிடா குருச்சேவ் வீராவேசமாக முழங்கியதற்கும், இப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவை அழித்துக் காட்டுகிறேன் என்று முழங்குவதற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை. இரண்டுமே அவர்கள் வகிக்கும் பதவிக்கு, அவர்களது நாட்டின் கௌரவத்துக்கு ஏற்றதாக இல்லை.
அதிபர் டிரம்பின் உரை பல காரணங்களுக்காக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்க நாட்டின் நிர்வாகம் எந்த ஒரு பிரச்னையையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்கிற கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது, அமெரிக்க அதிபர் ஒரு நாட்டை அழித்து விடுவேன் என்று வீராவேசமாக சபதமெடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. உறுப்பினர் நாடுகள் என்ன கருதுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் ஐ.நா. சபையின் பொதுக்குழு கூடுகின்றதே தவிர, தனி நபர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக அல்ல என்பதைக்கூட அமெரிக்க நாட்டின் அதிபர் தெரிந்துகொள்ளாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.
வருங்காலக் கூட்டணிகள் இரண்டு நாடுகளுக்கு இடையேயுள்ள பரஸ்பரத் தேவைகளின் அடிப்படையில்தான் அமையும் என்று குறிப்பிட்டதுடன் அனைத்து நாடுகளின் வருங்காலமும், அவரவர் நிலையில் சுதந்திரமாகவும், பொருளாதார வளத்துடனும், பாதுகாப்புடனும் இருப்பதில்தான் அமையும் என்றும் அதிபர் டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் 1920-க்கு முன்னால் 'லீக் ஆஃப் நேஷன்ஸ்' என்கிற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சர்வதேசப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முறைக்குத் திரும்ப வேண்டும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கருதுகிறாரா? 
அதிபர் டிரம்பின் உரைக்குப் பிறகு சீனாவும், ரஷியாவும், வடகொரியாவுக்கு எதிரான எந்தவொரு தடையையும் ஆதரிக்காது என்பது மட்டுமல்ல, அந்த நாட்டுக்கு மறைமுக ஆதரவு அளித்தாலும் வியப்படையத் தேவையில்லை. அமெரிக்காவின் ஆதரவு நாடுகளேகூட வடகொரியாவுக்கு எதிரான அணுஆயுதத் தாக்குதலை ஆதரிக்காது. இது கொரிய தீபகற்பத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதுடன் வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தற்காப்புத் தாக்குதல் நடத்த முற்பட்டால் அதனால் அமெரிக்காவின் தோழமை நாடுகளான தென்கொரியாவும் ஜப்பானும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஜப்பான் வழியாக வடகொரியா ஏவுகணைகளைச் சோதனை செய்தது எந்த அளவுக்கு கண்டனத்துக்குரியதும் அபாயத்துக்குரியதுமான செயலோ, அதற்கு எள்ளளவும் குறையாதது அதிபர் டிரம்பின் மிரட்டல்கள். கொரியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்திருப்பது வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் கரங்களை உள்நாட்டில் பலப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் புதிய பல தடைகளை எதிர்கொள்ள அரசியல் ரீதியாக வடகொரிய மக்களின் மனநிலையை அதிபர் கிம் ஜோங்-உன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வற்புறுத்தலால் அமெரிக்கா பின்வாங்குமேயானால், சர்வதேசப் பிரச்னைகளில் சீனாவும், ரஷியாவும் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதைத் தவிர்க்கும். அதன் விளைவாக அமெரிக்கா பல தர்மசங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். இதுகூடவா தெரியாது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com