கைதிகளும் மனிதர்கள்தான்!

இதுவரை ஊடக வெளிச்சம் மட்டுமே

இதுவரை ஊடக வெளிச்சம் மட்டுமே பெற்றிருந்த சிறைச்சாலைகள் மீது நீதித் துறையின் பார்வை விழுந்திருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். 2012 முதல் நடந்தேறியிருக்கும் இயற்கையான முறையில் அல்லாத சிறைச்சாலை மரணங்களுக்குத் தகுந்த இழப்பீடு சம்பந்தப்பட்ட கைதிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கைதிகளும் மனிதர்கள்தான் என்றும், அவர்களுக்கும் அடிப்படை சுகாதாரம், உடல்நலம் பேணுதல் ஆகியவற்றுக்கான உரிமை உண்டென்றும் அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. 
சிறைச்சாலைச் சட்டங்கள், நிர்வாகம், அணுகுமுறை ஆகியவற்றில் சீர்திருத்தம் ஏற்படுத்தி இந்திய சிறைச்சாலைகளின் சூழலை ஒட்டுமொத்தமாக மாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். கைதிகள் நியாயமாகவும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவதை அரசுகள் உறுதிப்படுத்துவதையும், கைதிகளுக்கு அநீதி இழைப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதையும் அந்தந்த மாநிலத்திலுள்ள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் கண்காணித்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது.
தகுந்த சீர்திருத்தங்களின் மூலம் சிறைச்சாலைகளில் கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதற்குத் தேவையான மாற்றங்
களையும், சீர்திருத்தங்களையும் நடைமுறைப்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னால் பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சிறைச்சாலை சீர்திருத்தம் குறித்து வலியுறுத்தியிருக்கின்றன. 
சிறைச்சாலை நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கைதிகளின் உரிமைகள் குறித்து அரசால் தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம். சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர முடியாவிட்டால் தேவையில்லாமல் விசாரணை என்கிற பெயரில் கைது செய்வதை அரசுகள் தவிர்க்க வேண்டும் என்றும், சிறைச்சாலையில் தவறுகள் நடப்பது தெரியவந்தால் உயர்நீதிமன்றங்கள் சிறைச்சாலைகளை நெறிப்படுத்த தன்னிச்சையாக விசாரணைக்கு உத்தரவிடவும், நடவடிக்கை எடுக்கவும் தயங்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பெரிதும் சிறிதுமாக இந்தியாவில் செயல்படும் 1,387 சிறைச்சாலைகளில் ஏறத்தாழ 4 லட்சத்து 20 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இது சிறைச்சாலையில் அங்கீகரிக்கப்பட்ட கைதிகளுக்கான எண்ணிக்கையைவிட மிகவும் அதிகம். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் விசாரணைக் கைதிகள். நீண்ட நாட்களாக விசாரணை தொடர்வதால் அவர்களில் சிலர் பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் கழிக்கிறார்கள். கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருப்பவர்களுடன் இந்த விசாரணைக் கைதிகள் சிறையில் நீண்டநாள் கழிப்பதால், சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் நாற்றுப் பண்ணைகளாக மாறிவிடுகின்றன.
தங்களது வாழ்க்கையில் நல்ல பகுதிகளையெல்லாம் சிறைச்சாலையில் கழித்துவிட்டு குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் விசாரணைக் கைதிகளில் பலர், வெளியில் வரும்போது சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எந்தத் தவறும் செய்யாதவர்களை விசாரணை என்கிற பெயரில் அடைத்து வைப்பதால் அவர்களை சிறைச்சாலைகள் மனரீதியாக குற்ற உணர்வு படைத்தவர்களாக மாற்றிவிடுகின்றன. விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எத்தனையோ பரிந்துரைகள் செய்யப்பட்டும்கூட அவர்களது எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது என்பது வேதனையிலும் வேதனை.
மிக அதிகமான இயற்கை அல்லாத மரணங்கள் சிறைச்சாலைகளில் காணப்படுவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதற்கு சிறைச்சாலை வன்முறை, போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பது, சிறை நிர்வாகத்தின் கவனக்குறைவு, கைதிகளுக்கு இடையே ஏற்படும் தனிப்பட்ட மோதல்கள், தற்கொலைகள் ஆகியவைதான் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதைவிட சிறைச்சாலைகளில் நடைபெறும் தற்கொலைகள் 50% அதிகம். 
சிறைச்சாலை மரணங்கள் தடுக்கப்பட்டே ஆக வேண்டுமென்றும், சிறைச்சாலைகளில் இயற்கையாக அல்லாத மரணம் ஏற்பட்டால் கைதிகளின் உறவினர்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2013-இல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கொன்றில், இப்போது தரப்பட்டிருக்கும் தீர்ப்பில், கைதிகளின் குடும்பத்தினர்கள் கைதிகளை வந்து சந்திப்பதை ஊக்குவிக்க வேண்டுமென்றும், அவர்களுடன் தொலைபேசி, காணொலி காட்சி ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்வதை அனுமதிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.
சிறைச்சாலைகள் மேம்படுத்தப்பட்டு, கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதற்கு சிறைச்சாலைகள் குறித்த அடிப்படை புரிதல் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். சிறைச்சாலைகள் என்பது சட்டத்தின் பார்வையில் தவறிழைத்தவர்களை திருத்துவதற்காகத்தானே தவிர, அவர்களை மனிதாபிமானமற்றவர்களாக மாற்றுவதற்கோ, விலங்குகளைப்போல நடத்தப்படுவதற்கோ அல்ல என்பதைப் பொதுமக்களும், சிறைச்சாலை நிர்வாகத்தினரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்னையில் அரசுக்கு மட்டுமல்லாமல், நீதித் துறைக்கும் கூடப் பங்கு உண்டு. தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு தொடர் வாய்தா வாங்குவதை அனுமதிக்காமல், விரைந்து முடிவுக்கு கொண்டு வர முடியுமேயானால், சிறைச்சாலைகளில் காணப்படும் சீரழிவு பெரிதும் தவிர்க்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com