மீண்டும் மெர்க்கெல்!

மிகவும் ஆர்வமாகவும் கூர்மையாகவும் கவனிக்கப்பட்ட

மிகவும் ஆர்வமாகவும் கூர்மையாகவும் கவனிக்கப்பட்ட ஜெர்மனியின் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சி, 33 சதவீத வாக்குகளுடன் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் 4-ஆவது முறையாக மீண்டும் பதவியேற்க இருக்கிறார். ஜெர்மனியின் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்ற 678 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கடந்த முறையைவிட வாக்கு விகிதமும் இடங்களும் குறைவாகவே அதிபர் ஏஞ்சலா மெர்க்கெலின் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சி பெற்றது அதிர்ச்சி அளிப்பதாக இல்லை. தேர்தலில் முக்கியப் பிரச்னையாக அகதிகள் பிரச்னை எழுப்பப்பட்டதால் ஏஞ்சலா மெர்க்கெல் தோல்வி அடைவார் என்று எதிர்பார்த்தவர்கள்தான் அதிகம். 
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான வலதுசாரி ஆல்டர்னேடிவ் ஃபார் ஜெர்மனி என்கிற கட்சி 13 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதுதான். இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு தேசியவாதம் பேசுகிற வலதுசாரிக் கட்சி முதல்முறையாக ஜெர்மன் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்திருப்பது யாருமே எதிர்பாராத திருப்பம்.
ஏஞ்சலா மெர்க்கெலின் ஆளும் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் கட்சிக்குப் பிரதான எதிரியான சோஷியல் டெமாக்ரடிக் (சோசலிச ஜனநாயகக் கட்சி) இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு மிக மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதிபர் ஏஞ்சலா மெர்க்கெலுக்கு எதிராகக் களம் இளங்கியிருந்த சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏஞ்சலா மெர்க்கெலின் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாவும் அறிவித்திருக்கிறார். கடந்த தேர்தலிலும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியும், சோஷியல் டெமாக்ரடிக் கட்சியும் வேறுவழியில்லாமல் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. 
கடந்த தேர்தல் 41.5 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்த கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சி மிக அதிகமான இடங்களைப் பெற்ற கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும்கூட அந்தக் கட்சி எதிர்கொண்டிருக்கும் வாக்குச் சரிவு கணிசமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தளவுக்கு மோசமான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றதில்லை. சோஷியல் டெமாக்ரடிக் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாகத் தெரிவித்திருக்கும் நிலையில் அதிபர் மெர்க்கெல் எப்படி யாருடன் கூட்டு சேரப்போகிறார் என்பது குறித்து சர்ச்சையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று தேர்தல்களாக ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தநிலையில், இந்தத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றிருப்பது வியப்பளிக்கவில்லை. சவால்களை எல்லாம் சாதனைகளாக மாற்றும் தனித்திறமை அவருக்கு இருக்கிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மெர்க்கெலின் மிகப்பெரிய பலம் நிலையான ஆட்சியை அளிப்பவர் என்கிற மக்களின் நம்பிக்கை. ஐரோப்பிய யூனியனில் உள்ள ஏனைய நாடுகள் தடுமாற்றம் காணும்நிலையில், ஜெர்மனிய மக்கள் அந்த நிலை தங்கள் நாட்டுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்கூட ஏஞ்சலா மெர்க்கெலுக்கு நான்காவது முறை அதிபராகத் தொடர வாய்ப்பளித்திருக்கிறார்கள் என்று கருத இடமுண்டு.
2015-இல் சிரியாவில் தொடங்கிய உள்நாட்டுப் போரின் விளைவாக லட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பாவை தஞ்சமடைந்தபோது பல நாடுகளும் தங்கள் எல்லைகளில் அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். அப்போது ஏஞ்சலா மெர்க்கெல் துணிவுடனும் அனுதாபத்துடனும் 10 லட்சத்துக்கும் அதிகமான சிரியாவைச் சேர்ந்த அகதிகளுக்கு ஜெர்மனியில் ஆதரவு அளிக்க முற்பட்டார். ஒருபுறம் அவரது முடிவு ஜெர்மானியர்கள் சிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் அவரது கடந்த 12 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக மிகப்பெரிய அளவில் செல்வாக்குச் சரிவை அகதிகள் பிரச்னை ஏற்படுத்திவிடவில்லை.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் மார்ட்டின் ஷுல்ட்ஸ், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவராக இருந்தவர். அந்தக் கட்சி ஏஞ்சலா மெர்க்கெலின் கூட்டணியில் அங்கம் வகித்திருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் அந்தக் கட்சியின் மக்கள் நலக்கொள்கைகளை எல்லாம் ஏஞ்சலா மெர்க்கெல் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியின் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், சோஷியல் டெமாக்ரடிக் கட்சி தனது வாக்கு வங்கியை இழந்ததில் வியப்பொன்றும் இல்லை. 
பிற நாட்டினர் குடியேற்றத்திற்கு எதிரான வலதுசாரி ஆல்டர்நேடிவ் ஃபார் ஜெர்மன் கட்சி வலிமையான கட்சியாக நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பது அதிபர் ஏஞ்சலா மெர்க்கெலுக்கு மிகப்பெரிய தலைவலியாகவும் பின்னடைவாகவும் இருக்கக்கூடும். உக்ரைன் உடனான போர், கிரேக்க நாட்டு பொருளாதார வீழ்ச்சி, இங்கிலாந்தின் 'பிரெக்சிட்'என்று ஒன்றன்பின் ஒன்றாகப் பல வெளிநாட்டு சவால்களை இதுவரை சந்தித்த ஏஞ்சலா மெர்க்கெலுக்கு இனிமேல் காத்திருப்பது மிகப்பெரிய உள்நாட்டு சவால்கள்.
மேற்கு - கிழக்கு ஜெர்மனிகளை இணைத்த தனது அரசியல் வழிகாட்டி ஹெல்மட் கோல், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜெர்மனி புது அவதாரம் எடுக்க காரணமான கொனார்டு அடினார் ஆகியோர் வரிசையில் நான்காவது முறை அதிபராகி இருக்கிறார் ஏஞ்சலா மெர்க்கெல். இந்தத் தேர்தல் வெற்றி அவரது வெற்றி மட்டுமல்ல, ஐரோப்பியக் கூட்டமைப்பின் வெற்றியும்கூட!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com