தட்டிக் கழிப்பு!

விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில்

விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம் என்று கடந்த மக்களவைத் தேர்தலின்போது பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை எனும்போது அந்தத் திட்டங்கள் குறித்த ஆய்வுகளும் மறுபரிசீலனைகளும் செய்வதை விட்டுவிட்டு, இப்பொழுது அந்தப் பொறுப்பை மாநிலங்களின் மீது சுமத்த முற்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் திட்டம் எதுவுமே விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரின் பிரச்னைகளை தீர்க்கவில்லை என்பதுடன் அவர்களது உற்பத்திக்கு உத்தரவாதமோ விளைபொருள்களுக்கு லாபகரமான விலையையோ தரமுடியவில்லை. இப்பொழுது மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் விவசாயிகளின் நலனைப் பேணும் பொறுப்பை மாநிலங்களின் மீது சுமத்தி, விவசாயிகளின் உற்பத்திக்கு லாபகரமான விலை கிடைக்கப் பெறுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மத்திய வேளாண்துறை அமைச்சரின் அறிவுரையை மாநில அரசுகள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகின்றன, எப்படி நடைமுறைப்படுத்தப் போகின்றன என்று புரியவில்லை.
பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்த, விவசாயிகளுக்கு அவர்களது வேளாண் உற்பத்திச் செலவைக் காட்டிலும் 50% லாபம் ஈட்டும் வகையில் விலை தரப்பட வேண்டும் என்கிற எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு கைகழுவி விட்டது என்பதைத்தான் வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கின் அறிவுறுத்தல் வெளிப்படுத்துகிறது. மாநில அரசுகள், எந்த அளவுக்கு விவசாயிகள் குறித்து கவலைப்படுகின்றன என்பதும், விவசாயத்துக்கு போதுமான பாசன வசதியை உறுதிப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றன என்பதும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், மத்திய அரசும் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் சூழல் ஒட்டுமொத்த இந்திய விவசாய பெருங்குடிமக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் இழப்பீட்டைவிட பல மடங்கு அதிகமான காப்பீட்டுத் தொகையை அரசிடமிருந்து பெறுகின்றன. உர மானியம் போல இந்தத் திட்டமும் காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் ஈட்ட பயன்படுகிறதே தவிர, விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாகத் தெரியவில்லை.
இந்த ஆண்டு இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பருவமழை எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தும்கூட விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பது ஒருபுறமிருக்க, அன்றாட விவசாயத்துக்கான அடிப்படைத் தேவைகளைக்கூட எதிர்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. தொடரும் விவசாயிகள் தற்கொலை, சர்வதேச அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைக்கிறது. நமது உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்று ஒருபுறம் பெருமை பேசிக்கொள்ளும்போது மற்றொருபுறம், விவசாயிகளின் வயிறு காய்கிற முரணை என்னவென்று சொல்ல?
உத்தரப் பிரதேசத்திலும் பஞ்சாபிலும் மாநில அரசுகள் தந்திருக்கும் விவசாயக் கடன் தள்ளுபடி என்கிற தீர்வு, விவசாயிகளின் வாக்குகளைக் குறிவைத்து செய்யப்பட்டிருக்கிறதே தவிர, அவர்களது துயரைத் துடைக்கவோ, தேங்கிவிட்ட உற்பத்தியுடன் தவிக்கும் விவசாயப் பிரச்னைக்கு தீர்வாகவோ அமையாது. மத்திய, மாநில அரசுகளுக்கு வேளாண் ஆராய்ச்சி என்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படாத நிலையில் உற்பத்தியைப் பெருக்குவதிலும் பயிர்களைக் காப்பதிலும் விவசாயிகள் செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறார்கள்.
ஹரியாணா, குஜராத் மாநிலங்களில் விவசாயப் பெருங்குடி மக்களான ஜாட்டுகளும், படேல்களும் வேறு வழியில்லாமல் இடஒதுக்கீட்டிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாசன நீருக்காகப் போராடுகிறார்கள். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடியில் திருப்தி அடையும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்திருப்பதைப் போலத் தங்களது விளைபொருள்களுக்கான முதலீட்டைவிட 50% கூடுதலான லாபத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஒரு வழி காணாமல் குறுகிய தேர்தல் ஆதாயத்துக்காக அரசியல்வாதிகள் உடனடித் தீர்வுகளை வழங்கி விவசாயிகளை திருப்திபடுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாய விளைபொருள்களுக்கு தரப்படும் குறைந்தபட்ச ஆதார விலை அதிகரித்து தரப்பட்டிருக்கிறது என்றாலும்கூட, விவசாயிகளின் முதலீடு அதிகரித்து வரும் நிலையில் அதை ஈடுகட்டுவதாக இல்லை. செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவு விவசாய விளைபொருள்களுக்கான தேவையைக் கடுமையாக பாதித்து அதனால் விலைகள் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு விவசாயிகளுக்கு ஈடுகட்டவில்லை. அதனால் விவசாயிகள் அடைந்திருக்கும் பாதிப்பு சொல்லிமாளாது.
விவசாயம் என்பது மாநிலங்களின் பட்டியலில் வந்தாலும்கூட, மாநில அரசுகளின் நிதி வருவாய் இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. மத்திய அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பொறுப்பை மாநில அரசுகளின் மீது சுமத்துவது குருவியின் தலையில் பனங்காயை வைப்பது போன்றதாக இருக்குமே தவிர, பிரச்னைக்கு தீர்வாக இருக்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com