நடந்தால் நல்லது!

இந்திய அரசு, ஏர் இந்தியா நிறுவனத்தில் 76% பங்குகளை விற்பதற்கு முன்வந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்திய அரசு, ஏர் இந்தியா நிறுவனத்தில் 76% பங்குகளை விற்பதற்கு முன்வந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரத்தை முழுமையாக விட்டுக் கொடுக்கும் விதத்தில் பங்குகள் விற்கப்படும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. 
ஏர் இந்தியா நிறுவனம் 1932-இல் 'டாடா ஏர்லைன்ஸ்' என்கிற பெயரில் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவால் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஒன்றுபட்ட இந்தியாவில் மும்பைக்கும் (அன்றைய பம்பாய்) இப்போது பாகிஸ்தானில் இருக்கும் கராச்சிக்கும் இடையே தபால்களைக் கொண்டு போவதற்காகத் தொடங்கப்பட்ட சரக்கு விமானச் சேவையாகத்தான் முதலில் இருந்தது. பிறகு, பயணிகள் விமான சேவையிலும் அந்த நிறுவனம் இறங்கியது. விரைவிலேயே இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனமாக மாறியது. 1950-இல் அரசுடைமை ஆக்கப்பட்டு மகாராஜா இலச்சினையுடன் ஏர் இந்தியாவாக மாறியது நிறுவனம். 
1991-இல் பொருளாதார தாராளமயமாக்கல் அறிமுகப்படுத்தப்படுவது வரை இந்தியாவின் போட்டியில்லாத விமான நிறுவனமாக ஏர் இந்தியா கோலோச்சி வந்தது. தனியார் மயத்துக்கு வழிகோலப்பட்டபோது, பல புதிய விமான நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படத் தொடங்கின. அதுமுதல் ஏர் இந்தியாவின் வீழ்ச்சி படிப்படியாக அதிகரித்துவந்து மக்கள் வரிப்பணத்தை மிக அதிக அளவில் உறிஞ்சும் நிறுவனமாக மாறியது.
ஏர் இந்தியாவின் மொத்த இழப்பு இப்போது ரூ.46,805 கோடி. மார்ச் 31, 2017 வரையிலான கடன் மட்டும் ரூ.48,781 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடாமல் காப்பதற்காக, இந்திய அரசு வரிப்பணத்தில் இருந்து அளித்திருக்கும் நேரடி உதவி ரூ.26,545 கோடி. 
இத்தனைக்குப் பிறகும் கடந்த ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.3,643 கோடி.
கடந்த பத்து ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து அதிலும் குறிப்பாக, பயணிகள் போக்குவரத்து பலமடங்கு அதிகரித்து வந்திருக்கும் நிலையில், அதனால் தனியார் விமான நிறுவனங்கள்தான் பலன் பெற்றனவே தவிர, ஏர் இந்தியாவால் வியாபாரப் போட்டியில் ஈடுகொடுக்க முடியவில்லை. மிக அதிகமான விமானங்களும், விமான சேவைகளும் வைத்திருந்தும்கூட ஏர் இந்தியா தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி வந்திருக்கிறது. இப்போது மொத்த விமான சேவையில் ஏர் இந்தியாவின் பங்கு வெறும் 13 விழுக்காடு மட்டும்தான் எனும்போது எந்த அளவுக்கு அந்த நிறுவனம் தடுமாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இத்தனை கடன்களுடனும், இழப்புகளுடனும் இருக்கும் ஒரு நிறுவனத்தை யாராவது வாங்க முற்படுவார்களா என்கிற ஐயப்பாடு பலருக்கும் எழாமல் இல்லை. அதே நேரத்தில் ஏர் இந்தியா என்பது வணிக ரீதியாகவும், தொலைநோக்கு வியாபார நோக்கிலும் கவர்ச்சியான ஒன்றாகத்தான் இருக்கும் என்கிறார்கள் நோக்கர்கள். 
அரசு 76% பங்குகளை விற்க முற்பட்டிருப்பதால், முழுமையான கட்டுப்பாட்டை வாங்குபவர்களுக்கு வழங்குகிறது. நிறுவனத்தின் முடிவுகளை சிறப்புத் தீர்மானம் மூலம் தடுப்பதற்குக் குறைந்தது 26% பங்குகள் வேண்டும். அரசு தன்வசம் 24% பங்குகளை மட்டுமே வைத்துக் கொண்டிருப்பதால், முழுமையான அதிகாரமும் ஏர் இந்தியாவின் 76% பங்குகளை வாங்குபவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பாக இயங்கத் தொடங்கினால், தன் கைவசம் இருக்கும் 24% பங்குகளையும் அதன் ஊழியர்களுக்கே பிரித்துக் கொடுப்பது என்று அரசு அறிவித்திருப்பது மிகவும் சாதுர்யமான முடிவு.
இரண்டாவதாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடனையும் வாங்குபவர்களுக்கு அப்படியே மாற்றிக் கொடுக்கப் போவதில்லை. ஏர் இந்தியாவின் ரூ.51,000 கோடி கடனில் 65% மட்டும்தான் அந்த நிறுவனத்தை வாங்குபவர்கள் பொறுப்பேற்க வேண்டி வரும். மீதமுள்ள கடனும், ஏர் இந்தியா நிறுவனத்தின் அசையா சொத்துகளும் அரசின் வசமே இருக்கும் என்பதுதான் அரசு விற்பனைக்கு விதித்திருக்கும் நிபந்தனைகளில் ஒன்று. 
எல்லாவற்றுக்கும் மேலாக, ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கி நடத்துவதில் ஒரு மிகப்பெரிய லாபம் இருக்கிறது. வாரத்திற்கு 54 உள்ளூர் தடங்களில் 2,330 விமான சேவையும், 39 சர்வதேச தடங்களில் 393 விமான சேவையும் இயக்கும் ஏர் இந்தியாவின் 115 விமானங்களை அதன் உரிமையை வாங்கும் நிறுவனம் பெறப்போகிறது. 
அதுமட்டுமல்ல, சர்வதேச விமான நிலையங்களில் விமானங்களை நிறுத்துவதற்கான இட ஒதுக்கீடு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இருக்கிறது. இவற்றை, புதிய விமான சேவை நிறுவனங்கள் எளிதாக பெற்றுவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக 85 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஒரு புகழ்பெற்ற நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வருவது என்பது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பெருமை சேர்க்கும் செயல்பாடாகத்தான் இருக்கும்.
ஏர் இந்தியா ஊழியர்கள் மத்தியிலும், அரசியல் ரீதியாகவும் பரவலான எதிர்ப்புகள் இருந்தாலும்கூட, தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தில் இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை அரசு நடத்திக் கொண்டிருப்பது என்பது தேவையில்லாத செயல்பாடு என்பதை நடுநிலை சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏர் இந்தியாவை அரசு கை கழுவுவது, வருவாய் ஈட்ட அல்ல. இனிமேலும் இழப்பை சுமக்க வேண்டாம் என்பதற்காக என்பதை நாம் உணர வேண்டும். 
கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு வசதிகள் என்று எத்தனையோ பிரச்னைகள் முதலீட்டுக்காகக் காத்துக் கிடக்கும்போது, தொடர்ந்து இழப்பை மட்டுமே சந்தித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை 
மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கிக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com