உறவுக்குக் கை கொடுப்போம்!

இன்று தொடங்க இருக்கும் நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஓலியின் அரசு முறைப் பயணம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்நாட்டில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த பிறகு

இன்று தொடங்க இருக்கும் நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஓலியின் அரசு முறைப் பயணம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்நாட்டில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த பிறகு பிரதமர் ஓலி மேற்கொள்ள இருக்கும் முதல் அரசுமுறைப் பயணம் இந்தியாவுக்குத்தான் என்பதிலிருந்து எந்த அளவுக்கு நேபாளம் இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பின் பின்னணியில் இந்த அரசுமுறைப் பயணம் அமைந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி 2014-இல் தனது பதவியேற்பு விழாவுக்கு, இந்தியாவின் அண்டை நாடுகளான 'சார்க்' உறுப்பு நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்தது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. குறிப்பாக, அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பிரதமர் மோடியின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை சர்வதேச ஊடகங்கள் தெற்காசியாவில் அமைதி ஏற்படப் போவதன் அறிகுறியாக வர்ணித்தன. ஆனால், கடந்த நான்காண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. 
பாகிஸ்தானுடன் மட்டுமல்ல, இந்தியாவின் ஏனைய அண்டை நாடுகள் எதனுடனும் - பூடானைத் தவிர- இந்தியாவுக்கு நெருக்கமான உறவு இருப்பதாக இப்போது கூற முடியாது. மாலத்தீவு உட்பட இந்தியாவைச் சுற்றியுள்ள அத்தனை நாடுகளும், அணுகுமுறையில் இந்தியா 'பெரிய அண்ணன்' போல நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டுகின்றன. மேலும், பொருளாதார ரீதியாக சீனா அந்த நாடுகளுக்குப் பெரிய அளவில் உதவி புரிவதால், இந்தியாவைவிட சீனாவுடனான நெருக்கமும் நட்புறவும் ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை.
நேபாளத்தைப் பொருத்தவரை, இந்தியாவின் மிக நெருக்கமான தோழமை நாடாக ஒருகாலத்தில் இருந்துவந்திருக்கிறது. நேபாளத்தைச் சுற்றி மூன்று பகுதிகளிலும் இந்திய எல்லை என்பதால் இமயமலையில் அமைந்திருக்கும் நேபாளம் எல்லா விதத்திலும் இந்தியாவைச் சார்ந்து இருந்துவந்தது. ஆனால், இந்த உறவில் மனக் கசப்பும், நம்பிக்கையின்மையும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக அதிகரித்திருக்கிறது. 
மன்னர் ஆட்சிமுறை ஒழிந்து நேபாளத்தில் மக்களாட்சி மலர்ந்தது என்றாலும், அங்கு இதுவரையில் நிலையான அரசு அமையவில்லை. அந்நாட்டில், கடந்த 20 ஆண்டுகளில் எந்தவொரு பிரதமரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்ததில்லை. இதற்கு இந்தியாவின் மறைமுகத் தலையீடு ஒரு காரணம் என்று நேபாள அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுகிறார்கள். 
இந்தியாவை ஒட்டிய நேபாளத்தின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழும் ஹிந்தி பேசும் நேபாளிகள் 'மதேசிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நேபாளத்தின் புதிய அரசமைப்புச் சட்டத்தில் போதிய முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை இந்தியா மறைமுகமாக ஆதரித்தது. மதேசிகள் நடத்திய பொருளாதாரத் தடையினால், நேபாளத் தலைநகரம் காத்மாண்டு உட்பட மலைப்பகுகிதளில் கடுமையான உணவுத் தட்டுப்பாடும், மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டதற்கும் நேபாள அரசியல்வாதிகள் இந்தியாவின் மறைமுகத் தலையீடுதான் காரணம் என்று 
குற்றம் சாட்டினர்.
நேபாளத்தில் மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர், 'பிரசண்டா' என்று அழைக்கப்படும் புஷ்பகமல் தாஹால் பிரதமரானபோது சீனாவுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தினார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஓலி கடந்த முறை பிரதமராக இருந்தபோது, சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, நேபாளம் இந்தியாவுக்கு மட்டுமே கட்டுப்பட்ட நாடு என்கிற நிலைமையை மாற்றினார்.
இந்தப் பின்னணியில்தான் இப்போது கே.பி. சர்மா ஓலி மீண்டும் பிரதமராக முழுப் பெரும்பான்மையுடன் பதவி ஏற்றிருக்கிறார். பிரசண்டாவின் மாவோயிஸ்டுகளையும், கூட்டணிக் கட்சியாகக் கொண்ட நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி தேசிய அளவில் மட்டுமல்லாமல், மாநிலங்கள் அளவிலும், உள்ளாட்சி அளவிலும்கூட மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. நேபாளி காங்கிரஸ் கட்சியும், முன்னாள் அரசர் ஞானேந்திராவின் ஆதரவாளர்களும் எல்லாத் தளங்களிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் இந்திய அரசுமுறைப் பயணம் தொடங்குகிறது.
நமது அண்டை நாடுகள் சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவு வைத்துக் கொள்வதாலேயே அவை இந்தியாவுக்கு எதிரானவை என்று நாம் கருதிவிட முடியாது. இந்தியாவே சீனாவுடன் அதிகரித்த வர்த்தகமும் பொருளாதார உதவியும் பெறும்போது, நமது அண்டை நாடுகள் இந்தியாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றோ, அண்டி இருக்க வேண்டுமென்றோ எதிர்பார்ப்பது தவறு.
நேபாள பிரதமர் ஓலி, ஓர் மிதவாதி. இவருக்கும் பிரசண்டாவுக்கும் இடையே சில பிரச்னைகள் இருக்கின்றன. சுழற்சி முறையில் இருவரும் பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் பிரசண்டா. கே.பி. சர்மா ஓலியின் கட்சியுடனான கூட்டணி இல்லாமல் போயிருந்தால், நேபாளி காங்கிரஸுக்கு நேர்ந்த கதிதான் தனது மாவோயிஸ்ட் கட்சிக்கும் நேர்ந்திருக்கும் என்பதை பிரசண்டா உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் கரத்தை வலுப்படுத்த வேண்டியது இந்தியாவின் கடமை.
நேபாளத்தின புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி அடுத்த இரு ஆண்டுகளுக்கு பிரதமர் கே.பி. சர்மா ஓலிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாது என்கிற நிலையில், அவருடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்டு இந்திய-நேபாள உறவை மீண்டும் பழைய நிலைமைக்கு இட்டுச் செல்ல ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் இந்தியப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை இரு நாடுகளிலும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிடக் கூடாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com