தற்காலிக நிம்மதி!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்திருக்கிறது. புதன் கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்திருக்கிறது. புதன் கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஆதரவுடன் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமருக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டு, நம்பிக்கையில்லாத் தீர்மானம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அக்னிப்பரீட்சையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் முன்னாள் அதிபர் ராஜபட்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா 340 இடங்களில் 225 இடங்களைக் கைப்பற்றியது முதல், விக்ரமசிங்க அரசு நிலையற்ற தன்மையை எதிர்கொண்டது. 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் ஒருங்கிணைந்து போட்டியிட்டதால்தான் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு, மீண்டும் ராஜபட்சவின் கரத்தை வலுப்படுத்திவிட்டனர் என்பதுதான் உண்மை.
உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிபர் சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமரின் செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினர். பிரதமர் ரணில் பதவி விலக வேண்டும் என்கிற கோஷம் எழுந்தது. வெளிப்படையாக அதிபர் சிறீசேனா அதை ஆதரிக்காவிட்டாலும், அவருக்கும் பிரதமருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருக்கவில்லை. இலங்கையில் மத்திய வங்கி உள்ளிட்ட சில முக்கியமான அமைப்புகளின் கட்டுப்பாட்டை பிரதமரிடமிருந்து அதிபர் சிறீசேனா எடுத்துக்கொண்டது விரிசலை மேலும் அதிகரிக்கச் செய்தது. அமைச்சரவை மாற்றத்தால் கூட ஆளும் கூட்டணியில் ஏற்பட்டிருந்த அதிருப்தியை அகற்ற முடியவில்லை.
முன்னாள் அதிபர் ராஜபட்ச தலைமையிலான கூட்டணி 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதிபர் சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அதற்கு முழுமையான ஆதரவு தரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த, இன்னொருவரின் தலைமையின் கீழ் பணியாற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விரும்பினார்களே தவிர, முன்னாள் அதிபர் ராஜபட்சவுடன் மீண்டும் கைகோக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை.
225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 81 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதிபர் சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன்தான் 107 உறுப்பினர்கள் கொண்ட கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கின்றன.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் தோல்விக்கு தமிழ் தேசியக் கூட்டணியின் 15 உறுப்பினர்களின் ஆதரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குக் கை கொடுத்திருக்கிறது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் முறியடிக்கப்பட்டதாலேயே பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறிவிட முடியாது. அதிபரும் பிரதமரும் இனிமேல் எப்படி நடந்துகொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொருத்துத்தான் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி, தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யுமா செய்யாதா என்பதைக் கூறமுடியும்.
அடுத்த தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதிபரும், பிரதமரும் உடனடியாகத் தங்களது மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த ஆட்சியின் மரியாதையைக் காப்பாற்ற முடியும். 
பிரதமர் பொருளாதாரத்தை சரியாகக் கையாளவில்லை என்கிற அதிபர் சிறீசேனாவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. இலங்கையின் வளர்ச்சி கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-இல் 3.1%ஆகக் குறைந்திருக்கிறது. அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டமும், ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளும் ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகின்றன. 
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பும், மறுவாழ்வும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் அரசியல் ரீதியான சம உரிமை வழங்கும் வகையில் புதிய அரசமைப்புச் சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. முன்னாள் அதிபர் ராஜபட்சவின் ஆட்சியில் நடந்த குற்றங்கள், ஊழல்கள் குறித்து விசாரணைகள் முறையாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. 
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அதிபர் சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து அரசுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இது ராஜபட்சவின் கரம் வலுப்பட்டு வருவதைத்தான் உணர்த்துகிறது. கடந்த 2015-இல் ராஜபட்சவின் ஆட்சியை அகற்றுவதற்காகவும், இலங்கையில் நல்லாட்சி மலர்வதற்காகவும், இப்போதைய கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். இதை அதிபர் சிறீசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உணராமல் இணைந்து செயல்பட மறுத்தால், அதன் விளைவு மீண்டும் மகிந்த ராஜபட்சவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் விபரீதத்தில் முடியும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்துவிட்டதாலேயே பிரச்னை முடிந்துவிடவில்லை, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதில்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வருங்காலம் இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com