பெருமையல்ல, சிறுமை!

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2018-19க்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 9-ஆம் தேதி முடிந்தது. ஏறத்தாழ ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மார்ச் 5-ஆம் தேதி இரண்டாவது அமர்வு ஆரம்பித்தது. ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்த அளவுக்கு எந்த ஓர் அமர்வும் மோசமாக செயல்பட்டதில்லை என்கிற அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு. இந்த அமர்வில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் எதற்காக அமைக்கப்பட்டிருக்கிறதோ, அந்தப் பணியில் 10 விழுக்காடு கூட ஈடுபடவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. இரண்டு அவைகளும் கூச்சல் குழப்பத்தால் 120 மணி நேர செயல்பாட்டை வீணாக்கி இருக்கின்றன. மாநிலங்களவையில் பட்டியலிடப்பட்டிருந்த 419 நட்சத்திரக் கேள்விகளில் வெறும் ஐந்து மட்டும்தான் எடுத்துக்கொள்ளப்பட்டன.
பல மசோதாக்கள் விவாதத்துக்கும், நிறைவேற்றப்படுவதற்கும் இரு அவைகளிலும் காத்துக்கிடக்கும்போது, பணிக்கொடை திருத்த மசோதா 2017 மட்டும்தான் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மக்களவை 2018-க்கான நிதி மசோதா உள்ளிட்ட மூன்றே மூன்று மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது. அதுவும்கூட, எந்தவித விவாதமும் இல்லாமல். 
நிதி மசோதாவுக்கு மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை. விவாதத்திற்குப் பிறகான வாக்கெடுப்புடன் நிதி மசோதாவை நிறைவேற்றிக்கொள்ள ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் போதுமான எண்ணிக்கை பலம் மக்களவையில் இருக்கிறது. அப்படியிருந்தும் விவாதமே இல்லாமல் ஆளுங்கட்சி, சுதந்திர இந்திய சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், நிதி மசோதாவை நிறைவேற்றியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
ரூ.89 லட்சம் கோடிக்கான இந்திய அரசின் வரவு - செலவு கணக்கு குறித்து எந்தவித விவாதமும் இல்லை என்றால், அரசின் செயல்பாடு குறித்தும், செலவினங்கள் குறித்தும் எந்தவிதக் கேள்வி முறையும் இல்லை என்றல்லவா பொருளாகிறது? குறிப்பாக, நிதி மசோதாவின் ஒரு பகுதியாக 1976 முதல் அரசியல் கட்சிகள் பெற்ற வெளிநாட்டு நன்கொடைகள் குறித்து எந்தவிதமான கேள்வி கேட்பும் கிடையாது என்று வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றுச் சட்டம் 2010-இல் செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தைக் குறிப்பிட வேண்டும். நியாயமாகப் பார்த்தால் மக்கள் மன்றத்திலும் 
நாடாளுமன்றத்திலும் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்னை இது.
இதேபோல, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தொடங்கி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை ஊதியத்தை உயர்த்திக் கொண்டதும் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 
பொதுத்துறை வங்கிகளில் நடக்கும் மோசடி, விவசாயிகள் பிரச்னை, தலித்துகள் போராட்டம், காஷ்மீர் பிரச்னை என்று எந்த ஒரு பிரச்னையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இதற்கு முன்னாலும் நாடாளுமன்ற செயல்பாடு எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக ஆளுங்கட்சியே நாடாளுமன்றம் முடக்கப்படுவதையும் செயல்படாமல் இருப்பதையும் வேடிக்கை பார்த்த வினோதத்தை இப்போதுதான் பார்க்கிறோம். எதிர்க்கட்சிகளை அரவணைத்து நாடாளுமன்றத்தை நடத்த வேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சியினுடையது என்பதை மறந்துவிட்டு, எதிர்க்கட்சிகள் மீது நாடாளுமன்ற முடக்கத்துக்கான பழியை சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர 50 உறுப்பினர்களின் ஆதரவு போதும். தெலுங்கு தேசம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 80 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும்கூட மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாதது மிகப்பெரிய தவறு. அவர் அந்தப் பதவிக்கான கெளரவத்தை குலைத்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
அவையில் குழப்பம் நிகழ்வதால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தேவையான 50 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்பதைத் தன்னால் நிர்ணயிக்க முடியவில்லை என்கிற வாதம் நகைப்புக்குரியது. அதுமட்டுமல்ல, மக்களவைத் தலைவரின் செயல்பாடு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வருங்காலத்தில் பெரும்பான்மையை இழந்த ஓர் அரசு, மக்களவைத் தலைவரின் உதவியுடன் தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் ஆட்சியில் தொடர்வதற்கு சுமித்ரா மகாஜனின் செயல்பாடு முன்னுதாரணமாகிவிட்டிருக்கிறது.
நரேந்திர மோடி அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்க முடியும் என்று நன்றாகவே தெரியும். ஆனாலும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் நீரவ் மோடி வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகத்தான் மக்களவைத் தலைவரின் துணையுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதை அரசு தடுத்திருக்கிறது என்பது வெளிப்படை. 
தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள், குறிப்பாக பாஜக உறுப்பினர்கள், அவை நடைபெறாத தினங்களுக்கான தங்களது ஊதியத்தையும், படியையும் பெறப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகளின் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளவும் முடியாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com