மோசடி முதலாளித்துவம்!

மொத்த மதிப்பில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியும், தனியார் வங்கிகளில் முதல் இடத்தில் இருப்பதுமான ஐசிஐசிஐ வங்கியில் நடைபெற்று இருக்கும் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மொத்த மதிப்பில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியும், தனியார் வங்கிகளில் முதல் இடத்தில் இருப்பதுமான ஐசிஐசிஐ வங்கியில் நடைபெற்று இருக்கும் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. விரைவிலேயே ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகி சந்தா கோச்சார் பதவி விலகக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே காணப்படுகிறது.
1969 ஜூலை 19-ஆம் தேதி என்ன காரணத்துக்காக அன்றைய இந்திரா காந்தி அரசு 14 தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதோ, அதற்கான காரணங்கள் இப்போதும் வலுவாகவே இருக்கின்றன என்பதைத்தான், ஐசிஐசிஐ வங்கியின் செயல்பாட்டில் காணப்படும் சார்புச் சலுகைகள் (நெப்பாடிசம்) வெளிப்படுத்துகின்றன. நேரிடையாக தலைமை நிர்வாகி சந்தா கோச்சாரை இதற்காகக் குற்றப்படுத்த முடியாது என்றாலும், நடந்திருக்கும் முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது அவரது கணவர் என்பதால், அவர் தார்மிக பொறுப்பிலிருந்து நழுவிவிட முடியாது.
வங்கிகளில் சேமிப்பாகவும், வைப்புத் தொகையாகவும் தங்களது பணத்தைப் போட்டிருக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு அந்தப் பணம் வங்கிகளால் எங்கே, யாருக்கு மறு முதலீடு செய்யப்படுகிறது, எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்த எந்த விவரமும் தெரியாது. வங்கி நிர்வாகத்தின் முடிவுப்படி கடன்கள் வழங்கப்படுகின்றன. இப்படி, வெளிப்படைத்தன்மை இல்லாமல் மற்றவர்களுடைய பணத்தில் நடத்தப்படும் வியாபாரம்தான் வங்கிச் சேவை.
வங்கிகளைக் கண்காணிப்பதும், ஒழுங்காற்றுவதும் ரிசர்வ் வங்கியின் கடமை. வங்கிகளின் தவறான நிர்வாக முறையினாலோ, செயல்பாட்டினாலோ வங்கியில் முதலீடு செய்திருக்கும் சாமானிய வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் இலக்கு. வங்கியின் செயல்பாடு, கணக்குத் தணிக்கை, வங்கி நிர்வாகத்தின் நேர்மை இவற்றையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உண்டு.
பொதுத்துறை வங்கிகளாகட்டும், தனியார் வங்கிகளாகட்டும், இவற்றின் வாராக்கடன் பல லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம், சரியான நேரத்தில் வங்கிகளின் கடன் வழங்கும் போக்குக் குறித்து ரிசர்வ் வங்கி சரியாக கண்காணிக்காமல் இருந்ததும், வாராக்கடன் அதிகரித்தபோது உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்படாததும்தான். வங்கிக் கண்காணிப்பாளரான ரிசர்வ் வங்கி, வங்கிகளின் பலவீனத்தை மறைப்பதற்கும், வாராக்கடன்கள் வளருவதற்கும் துணை போயிருக்கிறது என்கிற உண்மையை என்ன காரணத்தினாலோ ஆட்சியாளர்கள் வெளிப்படுத்துவதில்லை. 
கடந்த டிசம்பர் 2017 அளவில் இந்திய வங்கித் துறையின் வாராக்கடன் அளவு ரூ.8.4 லட்சம் கோடி. இந்த வாராக்கடனில் இருந்து வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக அரசு நமது வரிப்பணத்திலிருந்து வங்கிகளுக்கு செய்திருக்கும் மறு முதலீடு ரூ.2.11 லட்சம் கோடி. இந்தப் பின்னணியில்தான் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளும், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட தனியார் துறை வங்கிகளும் தவறான அல்லது முறைகேடான 
முடிவினால் ஏற்படுத்தியிருக்கும் பல லட்சம் கோடி வாராக்கடன்களை நாம் பார்க்க வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி என்பது தனியார் வங்கி என்று நாம் ஒதுக்கிவிட முடியாது. காரணம், அந்த வங்கியில் சேமிப்பாகவும், வைப்புத் தொகையாகவும் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தியக் குடிமக்கள். இந்த வங்கியின் கணிசமான பங்குகள் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் முதலீடுகள். அப்படி இருக்கும்போது, இதைத் தனியார் வங்கியின் முறைகேடு என்று எப்படி ஒதுக்கிவிட்டுப் பார்ப்பது? 
விடியோகான் நிறுவன அதிபர் வேணுகோபால் தூத், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருடன் இணைந்து 2008-இல் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனத்துக்கு வேணுகோபால் தூத்தின் இன்னொரு நிறுவனம் மார்ச் 2010-இல் ரூ.64 கோடி கடனாக வழங்கியது. மேலும் பல வணிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடன் கொடுத்த நிறுவனம் ஏப்ரல் 2013-இல் தீபக் கோச்சாரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அறக்கட்டளையால் முழுமையாக வாங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, வேணுகோபால் தூத், முதலில் தொடங்கிய நிறுவனத்திலிருந்த தனது 50 சதவீத பங்குகளை வெறும் ரூ.2.5 லட்சத்துக்கு தீபக் கோச்சாருக்கு மாற்றம் செய்து கொடுத்துவிட்டார். இதெல்லாம் ஒருபுறம்.
வேணுகோபால் தூத்தின் விடியோகான் நிறுவனத்துக்கு ஏப்ரல் 2012-இல் ஐசிஐசிஐ வங்கி ரூ.3,250 கோடி கடனாக வழங்குகிறது. அதாவது, தூத்துக்கும் தீபக் கோச்சாருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தங்கள் முடிவடைவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னால். இப்போது விடியோகான் நிறுவனம் 20 வங்கிகளுக்குத் தர வேண்டிய மொத்த வாராக்கடன் தொகை ரூ.40,000 கோடி. அதில் ஐசிஐசிஐ வங்கிக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் வாராக்கடன் ரூ.3,250 கோடி. இதுதான் இந்த முறைகேட்டின் பின்னணி.
சாமானியன் வங்கிக் கடன் வாங்க வேண்டும் என்றால், அதற்கு நூறாயிரம் கேள்விகள், ஆவணங்கள் தேவைப்படுகின்றன. 
அதற்குப் பிணையாக அரசு ஊழியரோ, அசையாச் சொத்தோ கோரப்படுகிறது. கடன் திருப்பிக் கொடுக்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல், ஊடகங்களில் கடனாளி குறித்த தகவல் படத்துடன் வெளியிடப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் பணத்தைக் கடனாகப் பெற்றுத் திருப்பித் தராமல் ஏமாற்றினாலும், அதன் இயக்குநர்கள் கெளரவமாக வலம் வருகிறார்கள். இதற்குப் பெயர்தான் மோசடி முதலாளித்துவம் (க்ரோனி கேப்பிடலிஸம்).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com