வன்முறை விடையாகாது!

காவிரி நதிநீர் பங்கீட்டைப் பொருத்தவரை, தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தனது

காவிரி நதிநீர் பங்கீட்டைப் பொருத்தவரை, தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியும்கூட இன்னும் அந்தத் தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இறங்கிவில்லை என்பது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்துக்கு முழுமையான நியாயத்தையும் ஆறுதலையும் தரவில்லை. பிப்ரவரி 5, 2007-இல் வெளியான நடுவர் மன்றத் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டிஎம்சி காவிரி நீர், 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டிருக்கிறது. எனினும், தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மனக்கசப்பை ஏற்படுத்தி வரும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை எப்படியாவது முடிவுக்கு வந்தால்போதும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வேதனையுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு தமிழக மக்கள் வந்துவிட்டிருந்தனர். அப்படி இருந்தும்கூட, அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனும்போது, அதிருப்தியும், ஆத்திரமும் ஏற்படுவது இயற்கை.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை நடைமுறைப்படுத்த மார்ச் 29-ஆம் தேதிக்குள் ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கட்டளை இட்டிருந்தது. நீதிமன்றம் குறிப்பிட்டிருந்த திட்டம் என்பது காவிரி நீர் மேலாண்மை வாரியம் என்றுதான் பலரும் கருதினர். கடந்த வாரம், 'திட்டம்' என்பதற்கு விளக்கம் கேட்டு அதை நிறைவேற்ற மத்திய அரசு மூன்று மாதகால அவகாசம் கோரியது. ஆனால், மத்திய அரசு தனது தீர்ப்பை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்கிற முழுமையான செயல்திட்டத்தை வரும் மே 3-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை கண்டிப்பாக கூறிவிட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் உரிமையைத் தனது தீர்ப்பின் அடிப்படையில் பாதுகாப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதியும் அளித்திருக்கிறது. 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவதற்கு முக்கியமான காரணம், கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற இருக்கும் தேர்தல்தான் என்பது உலகறிந்த உண்மை. இதில் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜகவை மட்டும் குற்றம் சாட்டுவதிலோ, குறை கூறுவதிலோ அர்த்தம் இல்லை. பாஜகவுக்குப் பதிலாக காங்கிரஸ் இப்போது மத்திய ஆட்சியில் இருந்திருந்தாலும்கூட, இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்திருக்கும் என்பதை அந்தக் கட்சியின் முந்தைய செயல்பாடுகள் எடுத்துரைக்கின்றன. 
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாள் மே 12 எனும் நிலையில், மே 3-ஆம் தேதிக்குள் மத்திய அரசு தனது மாதிரித் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுவேகூட மத்திய அரசுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் கர்நாடகத் தேர்தலில் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தக்கூடும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு முழுமையாக சாதகமாக இல்லாவிட்டாலும், தனது தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் அது உறுதியாகவும் கண்டிப்பாகவும் இருக்கிறது என்பதை நாம் சந்தேகிக்க இடமில்லை. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருதியிருந்தால், மத்திய அரசு தனது செயல் திட்டத்தை தாக்கல் செய்ய, கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஒரு தேதியை நிர்ணயித்திருக்கும். 
இந்தப் பின்னணியில்தான் உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் போராட்டக் களத்தில் குதித்திருக்கின்றன. இதுபோன்ற போராட்டங்கள் மூலம் அரசியல் ஆதாயம் பெற முடியுமே தவிர, காவிரியிலிருந்து நமக்கு உரிமையான தண்ணீரைப் பெற்றுவிட முடியாது என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் நன்றாகவே தெரியும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நடைப்பயணம், அடையாள உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் தவறில்லை. ஆனால், இந்தப் பிரச்னையை பயன்படுத்தி வன்முறையில் இறங்குவது என்பது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் துடிக்கும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்பதல்லாமல், வேறென்ன?
தமிழகம் காவிரி நீர் பிரச்னையில் கொதிப்படைந்திருக்கிறது என்பதற்காக முன்பே திட்டமிடப்பட்டுவிட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தள்ளிப்போடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதாகப்படவில்லை. அப்படியே ஐபிஎல் போட்டி நடத்தப்படு வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தாலும், அந்த எதிர்ப்பு வன்முறையாக மாற வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. 
ஆட்டக்களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களை நோக்கிக் காலணிகள் வீசப்பட்டதும், வன்முறைக் கும்பலை கட்டுப்படுத்த முயன்ற காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதும் நாகரிகமான தமிழன் செய்யும் செயல்பாடாக இருக்க முடியாது. வன்முறையின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்பட்ட அரசியல் இயக்கங்கள் மக்கள் மன்றத்தின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றதில்லை என்கிற வரலாற்றை அவை உணர வேண்டும்.
காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகப் போராட்டங்களின் மூலம் அழுத்தம் கொடுக்கலாமே தவிர, வன்முறையின் மூலம் தீர்வு காண நினைப்பது, தடியால் அடித்து மாங்காயைப் பழுக்க வைக்கும் முயற்சி என்பதல்லாமல், வேறென்ன?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com