நீதிக்கு சோதனை!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதி செலமேஸ்வர், தலைமை நீதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதம் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதி செலமேஸ்வர், தலைமை நீதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதம் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் குறித்தும், இந்தியாவின் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களின் சுதந்திரமான செயல்பாடுகள் குறித்தும் ஐயப்பாட்டை எழுப்பியிருக்கிறார் அவர். நீதிபதி செலமேஸ்வரின் கருத்துகள் நீதித்துறை சுதந்திரம் குறித்து அக்கறை உள்ளவர்களை நிமிர்ந்து உட்கார்ந்து, சிந்திக்க வைத்திருக்கிறது.
கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நிருபர்கள் கூட்டம் கூட்டி, நீதிபதி செலமேஸ்வர் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு, நீதிபதி செலமேஸ்வர் இப்போது எழுதியிருக்கும் கடிதம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் இன்னும் கருத்து வேறுபாடு தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. 
நீதித்துறை குறித்த அரசின் அணுகுமுறை, உயர்நீதிமன்றங்களின் செயல்பாடு, நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையேயான உறவு உள்ளிட்டவை குறித்து சில ஐயப்பாடுகளையும் குற்றச்சாட்டுகளையும் அந்தக் கடிதத்தில் நீதிபதி செலமேஸ்வர் வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து விவாதிக்க உச்சநீதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளும் அடங்கிய கூட்டம் ஒன்று தலைமை நீதிபதியால் கூட்டப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார் அவர்.
ஏற்கெனவே உத்தரகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப்பை, உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்த நீதிபதிகளின் கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. உத்தரகண்ட் அரசை மத்திய அரசு கலைத்தது செல்லாது என்று மத்திய அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய காரணத்தால், நீதிபதி ஜோசப்பின் பதவி உயர்வை அறிவிக்காமல் கிடப்பில் போட்டிருக்கிறது மத்திய சட்ட அமைச்சகம். அதேபோல, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில் நீதிபதி செலமேஸ்வர் தனது கடிதத்தின் மூலம் 
எழுப்பியிருக்கும் கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியான கிருஷ்ணபட் என்பவருக்கு எதிராக ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். நீதிபதி கிருஷ்ணபட் இரண்டு முறை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர். அவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, முந்தைய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான கொலீஜியம் விசாரணைக்கு உத்தரவிட்டு, நீதிபதி கிருஷ்ணபட் மீதான குற்றச்சாட்டுகள் எந்தவித ஆதாரமும் இல்லாதவை என்று தெரிய வந்திருக்கிறது.
ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், இப்போது மத்திய அரசின் வேண்டுகோள்படி, இப்போதைய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மறு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு என்பது நீதிபதி செலமேஸ்வரின் குற்றச்சாட்டு.
அரசின் கோரிக்கைகளையும், வேண்டுகோள்களையும் ஏற்று உயர்நீதிமன்றங்கள் செயல்பட முடியாது, கூடாது என்பது எழுதப்படாத மரபு. உச்சநீதிமன்றத்திடமிருந்துதான் உயர்நீதிமன்றங்கள் தங்களது ஆணைகளைப் பெற்று செயல்பட வேண்டும் என்பதுதான் நீதித்துறையின் நடைமுறை வழக்கம். ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த விசாரணையைப் புறந்தள்ளி, அரசின் அழுத்தம் காரணமாக மறு விசாரணைக்கு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி உத்தரவிட்டதை, நீதிபதி செலமேஸ்வர் மட்டுமல்ல, நீதித்துறையில் பலரும் வன்மையாக எதிர்க்கவும் கண்டிக்கவும் செய்திருக்கிறார்கள்.
இந்திய நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் பெரும்பாலான வழக்குகள் அரசுக்கு எதிரானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசும் அரசு அதிகாரிகளும் எடுக்கும் முடிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நீதிமன்றங்களை அணுகுகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில், நீதித்துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் இடையில் ஆரோக்கியமான இடைவெளி இருக்க வேண்டுமே தவிர, இவை இரண்டும் இணைந்து உறவாடி, செயல்படத் தொடங்கினால் அதனால் பாதிக்கப்படப்போவது சாமானிய குடிமக்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. பொதுமக்களை பாதிக்கும் விதமாக அரசு எடுத்திருக்கும் முடிவைத் தட்டிக்கேட்க சாமானிய மக்களுக்கு இருக்கும் ஒரே வடிகால் நீதிமன்றம் மட்டுமே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
நீதிபதி செலமேஸ்வர் முன்வைத்திருக்கும் கருத்துகளைப் புறந்தள்ளிவிட முடியாது. நீதித்துறையின் செயல்பாட்டிலும் நீதித்துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் அரசின் தலையீடு அதிகரித்து வருவதாகவும், இது தொடர்ந்தால், என்ன வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை நீதித்துறைக்கு அரசு உத்தரவிடும் அவல நிலை ஏற்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கிறார் நீதிபதி செலமேஸ்வர். 
விரைவில் பதவி ஓய்வுபெற இருக்கும் நீதிபதி செலமேஸ்வருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு கிடையாது. தான் பதவி ஓய்வு பெற்ற பிறகு வேறு எந்தப் பொறுப்பையும் 
ஏற்றுக் கொள்வதில்லை என்று அவர் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், தலைமை நீதிபதிக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் அவர் போர்க்கொடி உயர்த்தி, குற்றச்சாட்டுகளை எழுப்பியிருப்பது தனிப்பட்ட விரோதம் காரணமாக மட்டுமே என்று ஒதுக்கிவிட முடியாது. அவர் முன்வைத்திருக்கும் கருத்துகள் நீதித்துறையின் சிந்தனைக்குரியவை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com