வெற்றியைத் தொடர்ந்து...

கடந்த சனிக்கிழமை இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி

கடந்த சனிக்கிழமை இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளில் புதிய சாதனையும் சரித்திரமும் படைத்திருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்களில் 45 வயதை அடைய இருக்கும் லியாண்டர் பயஸ், டேவிஸ் கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான இரட்டை ஆட்டக்காரராக புதிய சாதனை படைத்திருக்கிறார். இது இவரது 43-ஆவது இரட்டையர் வெற்றி. இதுவரை எந்தவொரு டென்னிஸ் வீரரும் டேவிஸ் கோப்பை வரலாற்றில் இரட்டையர் ஆட்டத்தில் 43 முறை வெற்றி பெற்றதில்லை என்பதுதான் சிறப்பு.
18 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்; 34 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை வந்தவர்; 7 முறை ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்டவர்; ஒருமுறை ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவர்; கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 8 முறை இரட்டையர் ஆட்டத்திலும், 10 முறை கலப்பு இரட்டையர் ஆட்டத்திலும் பட்டம் வென்ற பெருமைக்குரியவர். இப்படி லியாண்டர் பயஸின் வெற்றிச் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
டேவிஸ் கோப்பை போட்டியில் 1990-இல் முதன்முதலில் விளையாடத் தொடங்கிய லியாண்டர் பயஸ், கடந்த சனிக்கிழமை ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து, சீனாவின் மா ஜீங் காங்யூம் - சே ஸாங்யூம் இணையை மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு தோற்கடித்தார். இந்த வெற்றிக்கு மிகப் பெரிய காரணம், தனது 45 வயதிலும் துளியும் அயராமல், அலட்டிக் கொள்ளாமல் விளையாடிய லியாண்டர் பயஸ்தான் என்று குறிப்பிட்டால் தவறில்லை.
உலகின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ டென்னிஸ் போட்டிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட பல டென்னிஸ் பந்தயங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டிருக்கின்றன. அரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த டேவிஸ் கோப்பை போட்டிக்கான பரபரப்பு இப்போது இல்லை என்பது உண்மைதான் என்றாலும், இப்போதும்கூட உலகின் தலைசிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் அதை தேசிய கடமையாகக் கருதி டேவிஸ் கோப்பைப் போட்டிக்கு அணிதிரள்கிறார்கள். அப்படியிருக்கும் நிலையில், டேவிஸ் கோப்பை போட்டியில் லியாண்டர் பயஸ், தனது 43-ஆவது வெற்றியை நிகழ்த்தியிருப்பது, அவரிடம் தொடர்ந்து காணப்படும் உற்சாகத்தை பறைசாற்றுகிறது. 
ஒருபுறம் லியாண்டர் பயஸ் - ரோஹன் போபண்ணா இணையின் டேவிஸ் கோப்பை வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது என்றாலும், இன்னொருபுறம் இந்திய டென்னிஸ் குறித்த கவலை எழாமல் இல்லை. கிரிக்கெட்டிலும் பூப்பந்தாட்டத்திலும் கால் பந்தாட்டம், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளிலும் உருவாகும் அளவுக்கு டென்ஸிஸ் வீரர்களும், வீராங்கனைகளும் அதிக அளவில் இல்லை என்பதும், புதிய வரவுகள் சர்வதேசத் தரத்துக்கு உயரவில்லை என்பதும், நாம் கவலைப்படவேண்டிய ஒன்று.
இந்தியாவுக்கு 1880-இல் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் டென்னிஸ் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்திய டென்னிஸ் வீரர்களான சலீம், பைஸி சகோதரர்கள், கிருஷ்ண பிரசாத் உள்ளிட்டோர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்திருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் எடுத்துக் கொண்டால், ராமநாதன் கிருஷ்ணன், பிரேம்ஜித்லால், எஸ்.பி.மிஸ்ரா, ஜெய்தீப் ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து அமிர்தராஜ் சகோதரர்கள், ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா, போபண்ணா ஆகியோரைத் தொடர்ந்து, பிரிஜ்னீஷ் குணேஸ்வரன், ருஷ்மி சக்ரவர்த்தி, ஹர்ஷ் மங்கல், அங்கிதா ரெய்னா உள்ளிட்ட சில இளைய தலைமுறை விளையாட்டு வீரர்களும் டென்னிஸை இன்னும் உயிரோட்டமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
ஜூனியர் அளவில் பல பிரகாசமான விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் உருவாகாமல் இல்லை. ஆனால் அவர்கள் சர்வதேச அளவிலான ஒற்றை மற்றும் இரட்டையர் ஆட்டக்காரர்களாகப் பெயர் பெற முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. 
யூகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன், 2015 ஜூனியர் விம்பிள்டன் இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற சுமீத் நகல் உள்ளிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டும்தான் வருங்காலத்தில் இந்திய டென்னிஸை வழிநடத்த முடியும் என நம்மால் அடையாளம் காணமுடிகிறது. 
இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களிலும், கல்லூரிகளிலும் டென்னிஸ் மைதானங்கள் உருவாகி இருக்கின்றன. டென்னிஸ் பணக்காரர்களின் விளையாட்டு என்பது போய், சாமானியர்களும் விளையாட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும்கூட நம்மால் கிரிக்கெட் போலவோ, ஏனைய விளையாட்டுக்களைப் போலவோ வீரர்களை உருவாக்க முடியவில்லை என்றால், அதற்கு அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் அணுகுமுறை சரியானதாக இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.
அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு மாவட்டத் தலைநகரங்களிலும், சிறு சிறு நகரங்களிலும் கூடத் தன்னுடைய செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தியாக வேண்டும். நல்ல திறமைசாலிகளை அடையாளம் காண்பதால் மட்டுமே நல்ல விளையாட்டு வீரர்களை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் உருவாக்கி விட முடியாது. அதற்கு அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு போதுமான நிதியுதவி அளிப்பது மட்டுமல்லாமல், புதிய இளம் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான தரமான டென்னிஸ் மைதானங்களையும், மட்டைகளையும், பந்துகளையும் பயிற்சிக்கான உதவிகளையும் செய்துதர வேண்டும். அவர்களுக்கு, தேர்ந்த பயிற்சியாளர்களின் மூலம் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான தேர்ச்சியை அளிப்பது அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் கடமை.
லியாண்டர் பயஸின் வெற்றி நம்மை வருங்காலம் குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com