நம்பிக்கை பொழிகிறது!

இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டில் வழக்கமான பருவமழை கிட்டும் என்று கணித்திருக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டில் வழக்கமான பருவமழை கிட்டும் என்று கணித்திருக்கிறது. இந்த ஆண்டு முதல், இந்திய வானிலை ஆய்வு மையம் ஐந்து நாட்களுக்குப் பதிலாக 15 நாட்கள் முன்கூட்டியே விவசாயிகளுக்கு கேரளத்திலிருந்து வடக்கு நோக்கி நகரும் பருவமழையின் போக்குக் குறித்து முன்னறிவிப்பு தரப்போகிறது என்கிற செய்தி பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரிய ஒன்று. 
வழக்கமான அல்லது சராசரி பருவமழை என்பது, கடந்த ஐம்பது ஆண்டுகளின் சராசரி மழை அளவில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை காணப்படுவது. பருவமழைக் காலம் என்பது ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்குப் பருவமழையைக் குறிப்பிடுவது. 
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வறட்சி நிலைமையை எடுத்துரைக்கிறது. இந்தியாவில் 640 மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் 404 மாவட்டங்கள் கடந்த அக்டோபர் 2017 முதல் மழை இல்லாததால் கடும் வறட்சி நிலையை எதிர்கொள்கின்றன. 109 மாவட்டங்கள் வறட்சி நிலைமையையும், 156 மாவட்டங்கள் குறைந்த அளவு வறட்சி நிலைமையையும் எதிர்கொள்கின்றன. இந்தச் சூழலில்தான், வர இருக்கும் தென்மேற்குப் பருவமழை பொய்க்காமல் வழக்கமான அளவு காணப்படும் என்கிற நல்ல செய்தியை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் ஓரளவு சரியாகவே இருந்திருக்கின்றன. 2014, 15இல் சராசரியைவிடக் குறைந்த அளவுதான் பருவமழை கிடைக்கும் என்று கணித்ததுபோலவே அந்த இரண்டு ஆண்டுகளிலும் இந்தியா கடும் வறட்சியை எதிர்கொண்டது. 2016-இலும், 2017-இலும் வழக்கமான அளவு பருவமழை கிடைக்கும் என்று கணித்தது. இந்த இரண்டு ஆண்டுகளுமே நல்ல மகசூல் ஆண்டுகளாக இருந்தன. 
வானிலை ஆய்வு மையம் கணித்ததுபோலவே, 2016-லும், 2017-லும் அகில இந்திய சராசரி அளவில் வழக்கம்போல பருவமழை கிடைத்தாலும்கூட, பரவலாக எல்லா பகுதிகளுக்கும் சமமான அளவில் மழை கிடைக்கவில்லை. தென்னிந்தியாவைத் தவிர, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஏனைய பகுதிகளில் வழக்கத்தைவிட சற்று அதிகமான பருவமழையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மத்திய - கிழக்கு இந்தியப் பகுதிகளில் குறைவான மழையும் பெய்தன. 
இந்தியாவின் மொத்த வருடாந்திர மழையின் அளவில், பருவமழையின் மூலம்தான் 70 சதவீதம் பெறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தென்மேற்குப் பருவமழை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் முக்கியமான பயிர்களான நெல், கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவை பருவமழையை எதிர்பார்த்துத்தான் பயிரிடப்படுகின்றன. 
விவசாயத்துறை இந்தியாவின் இரண்டு லட்சம் கோடி டாலர் (ரூ.130 லட்சம் கோடி) பொருளாதாரத்தில் 15 சதவீதப் பங்களிக்கிறது. அதன் பொருளாதாரப் பங்களிப்பு வெறும் 15 சதவீதமாக இருந்தாலும்கூட, இந்தியாவின் 120 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானோர் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். அதனால், பருவமழையின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்தால் மட்டும்தான் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட்டு, ஊரகப்புறங்களில் வாழ்பவர்களின் வருவாய் அதிகரிக்கும்.
இந்தியாவுக்குப் பருவமழை என்பது விவசாயத்துக்காக மட்டுமல்லாமல், குடிநீர் தேவை உட்பட அனைத்துக்குமே மிகவும் அவசியம். நாம் மிக அதிகமான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் தேசமாகத்தான் இருந்து வருகிறோம். சமீபத்தில் வெளியாகி இருக்கும் செயற்கைக்கோள் சார்ந்த எச்சரிக்கை அறிவிப்பில் மொராக்கோ, இராக், ஸ்பெயின், இந்தியா ஆகிய நான்கு நாடுகளிலும் மிகப்பெரிய அளவில் நீர்த்தேக்கங்கள் குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் எதிர்கொண்டதுபோல, இந்தியாவின் பல நகரங்களும் முற்றிலும் தண்ணீர் இல்லாத நாள்களை எதிர்கொள்ளும் அளவுக்குப் பிரச்னை ஏற்படக்கூடும் என்று அந்த செயற்கைக்கோள் ஆய்வு குறிப்பிடுகிறது. குறைந்து வரும் நிலத்தடிநீர் அளவு, குளங்கள், கிணறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் அழிக்கப்படுவது, போதுமான அளவு தண்ணீர் சேகரிக்கும் அமைப்புகள் இல்லாதது, இவையெல்லாம் பொருளாதார, விவசாய இடர்பாட்டை ஏற்படுத்தி, சமூகக் குழப்பங்களுக்கு வழிகோலக்கூடும் என்று எச்சரிக்கிறது அந்த ஆய்வு.
இந்தப் பின்னணியில்தான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வானம் பொய்க்காமல் இந்தியாவுக்கு பருவமழையைப் பொழிய இருக்கிறது என்கிற நல்ல செய்தி வந்திருக்கிறது. இதற்குப் பின்னால் சில பிரச்னைகளும் எழக்கூடும் என்பதை ஆட்சியாளர்கள் முன்கூட்டியே உணர வேண்டும். தேவையான அளவு பருவமழை கிடைக்கும்போது எதிர்பார்ப்புக்கும் அதிகமான மகசூலும் காணப்படும். அதன் விளைவாக விளை பொருள்களுக்குப் போதுமான விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பை எதிர்கொள்ளும் ஆபத்தும் காத்திருக்கிறது. 
மத்திய அரசு இப்போதே விழித்துக்கொண்டு சரியாகத் திட்டமிட்டு, என்னென்ன பயிர்கள் எந்த அளவுக்குப் பயிரிட வேண்டும் என்பதை முறைப்படுத்தாமல் போனால், முதலீட்டுக்குமேல் 50 சதவீத லாபம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தந்திருக்கும் உறுதியைக் காப்பாற்ற முடியாது. அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் பயிர்களின் அளவைக் கட்டுப்படுத்தி விவசாயத்தை லாபகரமாக்கவும், அதே நேரத்தில் பருவமழையால் கிடைக்கப்பெறும் தண்ணீர் சிக்கனமாக செலவிடப்படுவதைக் கண்காணிக்கவும் வேண்டியது அரசின் பொறுப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com