சரியான முடிவு!

குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவி நீக்கக் கோரிக்கையை நிராகரித்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவி நீக்கக் கோரிக்கையை நிராகரித்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும்கூட நாடாளுமன்றத்தில் போதிய எண்ணிக்கை பலம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லாத நிலையில் அது நிறைவேற்றப்பட்டிருக்காது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்வதற்குக் குறைந்தது100 மக்களவை அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். நீதிபதியை பதவி நீக்கம் கோரும் அவர்களது தீர்மானத்தை ஏற்கவோ, மறுக்கவோ மக்களவைத் தலைவருக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் உரிமை உண்டு. 
அப்படி ஏற்கப்பட்டால் ஒரு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு மூத்த அனுபவசாலியான வழக்குரைஞர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு அமைக்கப்பட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். அந்தக் குழுவின் பரிந்துரைப்படி அந்தப் பதவி நீக்கத் தீர்மானம் நாடாளுமன்றத்தால் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அந்தக் கோரிக்கைக்கு தனித்தனியாக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்படும். அப்படி இரண்டு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அவரது உத்தரவுடன் உச்சநீதிமன்ற நீதிபதியோ, தலைமை நீதிபதியோ பதவி நீக்கம் செய்யப்படுவார்.
மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் நீதித்துறையின் மீதான நம்பிக்கையும் கெளரவமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் இதுபோன்ற பதவி நீக்கம் முடிந்தவரை தவிர்க்கப்படுகிறது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இதுவரை ஒரேயொரு முறைதான் ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. 1804-இல் நீதிபதி சாமுவேல் கேஸ் என்பவர் அரசியல் சார்புள்ள தீர்ப்புகளை வழங்கினார் என்கிற குற்றச்சாட்டுக்காக அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால், அமெரிக்க மேலவை அந்தத் தீர்மானத்தை நிராகரித்துவிட்டது. அதற்குச் சொல்லப்பட்ட காரணம், ஒரு நீதிபதி அவர் வழங்கிய தீர்ப்புக்காக பதவி நீக்கம் செய்யப்படுவது தவறு என்பதுதான்.
இதற்கு முன்னால் பதவி நீக்கத் தீர்மானம் ஒரே முறைதான் இந்திய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பஞ்சாப் - ஹரியாணா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த வி. ராமசாமி மீது அவர் சில தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பதவி நீக்கத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தது. அப்போது அன்றைய ஆளுங்கட்சியான காங்கிரஸ், தனது உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்காததால், அந்தப் பதவி நீக்கத் தீர்மானம் தோல்வி அடைந்தது. 
இப்போதும்கூட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருவதில் காங்கிரஸ் கட்சியிலுள்ள மூத்தத் தலைவர்கள் பலருக்கும் உடன்பாடு இல்லை. காங்கிரஸ் தலைமையிலான ஏழு கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 79 என்றாலும், இந்தத் தீர்மானத்தை ஆதரித்து கையொப்பம் இட்டிருப்பவர்கள் 64 பேர் மட்டுமே. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டவர்கள் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. காங்கிரஸின் முன்னாள் சட்ட அமைச்சர்களான சல்மான் குர்ஷித், அஸ்வனி குமார் ஆகியோர் வெளிப்படையாகவே இந்தத் தீர்மானம் எதிர்வினை விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பதவி நீக்கத் தீர்மானத்துக்காக கூறப்பட்டிருக்கும் காரணங்கள் எதுவுமே தகுந்த ஆதாரத்தின் அடிப்படையிலானவை அல்ல. ஒரு கல்வி அறக்கட்டளை தொடர்பான கையூட்டு வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கிறது, 39 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு நிலம் வாங்கி பிறகு அதை திருப்பிக் கொடுத்துவிட்டார், அவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வழக்குகளைப் பிரித்துக்கொடுப்பதில் ஒருதலைபட்சமாக நடக்கிறார் என்பதெல்லாம்தான் அவர்மீது கூறப்பட்டிருக்கும் பதவி நீக்க கோரிக்கைக்கான காரணங்கள். 
உச்சநீதிமன்ற நீதிபதியின் தவறான நடத்தை குறித்து ஆதாரம் இருக்க வேண்டும். அல்லது அவர் தனது பதவியில் செயல்பட முடியாத அல்லது தகுதியில்லாதவராக இருக்க வேண்டும் என்பதுதான் பதவி நீக்கத்துக்கான அடிப்படைக் காரணிகளாக இருக்க முடியும். நீதிமன்றத்தில் இருக்கும் கருத்து வேறுபாடுகளும், அரசியல் ரீதியான காரணங்களும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் உச்சநீதிமன்ற நீதிபதியோ, தலைமை நீதிபதியோ பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான காரணங்களாக இருக்க முடியாது. இந்த பின்னணியில்தான் குடியரசுத் துணைத் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவரிடம் அளித்த பதவி நீக்கத் தீர்மானத்தை நிராகரித்தை நாம் பார்க்க வேண்டும். 
உச்சநீதிமன்றத்தில் ஒற்றுமை இல்லை என்பதிலும் நீதித்துறையில் உடனடியான சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருவது என்பது நீதித்துறையின் மரியாதையைக் குலைக்குமே தவிர, அதன்மீதான மதிப்பை அதிகரிக்காது. நீதித்துறையை அரசியல் காரணங்களுக்கு எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. 
மேலவைத் தலைவரின் முடிவுதான் சரி!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com