தேவையற்ற தலையீடு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தமிழக அரசின் முடிவை செவ்வாய்க்கிழமை நிராகரித்திருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தமிழக அரசின் முடிவை செவ்வாய்க்கிழமை நிராகரித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் நிர்வாக முடிவுகளில் தலையிடுகிறது என்றும், வரம்பு மீறுகிறது என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை. மக்களின் அன்றாடப் பிரச்னைகள் குறித்து அரசியல் தலைமைக்கு இருக்கும் அளவுக்கு நீதிபதிகளுக்குப் புரிதல் இருக்காது என்கிற வாதத்தை ஒரேயடியாகப் புறம்தள்ளிவிட முடியாது.
 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்திய மருத்துவக் கவுன்சில் புதிதாகச் சில விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. மருத்துவப் படிப்புக்கு "நீட்' தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் "தகுதிகாண்' தேர்வை ஏற்படுத்தியது இந்திய மருத்துவக் கவுன்சில். அதில் 50 சதவிகித ஒதுக்கீடு தேசிய அளவிலான சேர்க்கைக்கும், 50 சதவிகித ஒதுக்கீடு மாநில அரசுகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த எல்லா சேர்க்கைக்கும் தகுதிகாண் தேர்வு உண்டு. தமிழக அரசு, தனக்கு வழங்கப்படும் 50% இடங்களில், அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தது. இதை இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்றுக்கொள்ளவில்லை.
 முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறை 9(4), அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவில்லை. ஊக்க மதிப்பெண் அளிக்கலாம் என்றுதான் தெரிவிக்கிறது. அதுவும் கூட விரைவில் அணுக முடியாத மலைப்பிரதேசங்கள், ஆதிவாசி வாழும் இடங்கள் ஆகியவற்றுக்குத்தான்.
 அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகள் இட ஒதுக்கீடு அளிக்க அனுமதித்தால், மருத்துவர்களின் தரத்தில் சமரசம் செய்ய நேரிடும் என்றும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஒழுங்குமுறை அதிகாரங்களில் அத்துமீறித் தலையிடுவது போல ஆகிவிடும் என்றும் கூறி உச்சநீதிமன்ற அமர்வு தமிழக அரசின் இட ஒதுக்கீடு முடிவை நிராகரித்திருக்கிறது.
 இந்தியாவில் 10,189 பேருக்கு ஓர் அரசு மருத்துவர் என்கிற நிலைதான் காணப்படுகிறது. அதேபோல 90,343 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனை என்கிற விகிதம்தான் காணப்படுகிறது. இந்தியாவில் 70 கோடி மக்கள் வாழும் கிராமங்களில் 11,054 மருத்துவமனைகள்தான் இருக்கின்றன. இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும், மருத்துவர்களுக்கும் இடையேயான விகிதம் என்பது வியத்நாம், அல்ஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருப்பதைவிடக் குறைவாகக் காணப்படுகிறது. மருத்துவர்கள் பற்றாக்குறைதான் நாட்டின்சுகாதார நிர்வாகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்.
 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 60% மக்கள் ஊரகப் புறங்களில்தான் வாழ்கிறார்கள். அங்கே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்குப் போதிய மருத்துவர்கள் இல்லாத அவலம் நீண்ட காலமாகவே தொடர்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஊரகப்புறங்களில் குறிப்பாக, வசதி இல்லாத பின்தங்கிய கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் தயாராக இல்லை.
 மருத்துவ பட்டப்படிப்பை முடித்த பிறகு இளம் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஆர்வம் காட்டுவதற்கான காரணம், அவர்கள் தங்களது அனுபவத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல. மருத்துவ மேல்படிப்பு சேர்க்கைக்கு அது கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது என்பதால்தான்.
 ஏற்கெனவே நடுத்தர வர்க்கத்தினரும், விளிம்பு நிலை மக்களும், அதிகரித்துவிட்ட மருத்துவ செலவினங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாத நிலைமை ஏற்படுவது மிகப்பெரிய சமூக அநீதி. இதை அரசியல் தலைமை புரிந்து கொண்டிருக்கிறது. மருத்துவக் கவுன்சிலும், நீதிமன்றமும் இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதைத்தான் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவ மேல்படிப்புக்கான நுழைவு முறை அகற்றப்படுவது தெரிவிக்கிறது.
 இன்றைய மருத்துவக் கல்வியில் காணப்படும் மிகப்பெரிய குறை மருத்துவ பட்டப்படிப்பு முடிந்த பிறகு பெரும்பாலான மருத்துவர்கள், மருத்துவமனைகளில் பணிபுரியவோ, நோயாளிகளைப் பரிசோதித்து அனுபவம் பெறவோ முற்படுவதில்லை. மருத்துவ மேல்படிப்புக்கான தகுதிகாண் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில்தான் முனைப்புக் காட்டுகிறார்கள். தகுதிகாண் தேர்வு எழுதி மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றாலும் கூட, மருத்துவப் பணிக்குத் தயாராவதில்லை. அடுத்து, சிறப்பு மருத்துவர் ஆவதற்கான படிப்புக்குத் தயாராகிறார்கள். பெரும்பாலான சிறப்பு மருத்துவர்கள் அடிப்படை நோயாளிகள் பரிசோதனை அனுபவம் இல்லாதவர்களாக மருத்துவத் தொழிலில் இருக்கும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 இப்படிப்பட்ட சூழலில் மருத்துவப் பட்டப்படிப்பு முடித்த மருத்துவர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது அரசு மருத்துவமனைகளில், அதிலும் ஊரகப் புறங்களில் பணிபுரிந்தால் மட்டுமே மேற்படிப்புக்குத் தகுதி பெறுவார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டால்தான் மருத்துவர்களின் தரமும் அதிகரிக்கும், ஊரகப் புற மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணிபுரியவும் முற்படுவார்கள். அதை விட்டுவிட்டு தகுதிகாண் தேர்வு மட்டுமே மருத்துவ மேல்படிப்புக்கு அளவுகோல் என்கிற இந்திய மருத்துவ கவுன்சில், உச்சநீதிமன்றத்தின் கருத்து நடைமுறைப்படுத்தப்படுமானால், அடிப்படை நோயாளிகள் பரிசோதனை அனுபவம் இல்லாத வெறும் புத்தகப் புழுக்கள் மட்டும்தான் மருத்துவ மேல்படிப்புக்கும் சிறப்பு மருத்துவத்துக்கும் செல்ல முடியும் என்கிற அபாயத்தை மருத்துவக் கல்வி எதிர்கொள்ளும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com