காலத்தின் தேவை!

கடந்த இரண்டரை மாதங்களாக டோக்காலாமில் இந்திய - சீனப் படைகளுக்கு இடையே காணப்பட்ட பதற்ற நிலைக்கு திடீர் திருப்பம் ஏற்படுத்தி இருக்கிறது

கடந்த இரண்டரை மாதங்களாக டோக்காலாமில் இந்திய - சீனப் படைகளுக்கு இடையே காணப்பட்ட பதற்ற நிலைக்கு திடீர் திருப்பம் ஏற்படுத்தி இருக்கிறது பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணம். மத்திய சீனாவிலுள்ள வூஹான் நகரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அதிகாரப்பூர்வமல்லாத நட்புறவுசந்திப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். இந்தியாவும் சீனாவும் தொலைநோக்குப் பார்வையோடு எடுத்திருக்கும் புத்திசாலித்தனமான முடிவு இது.
 ஜூன் மாதம் சீனாவில் உள்ள கிங்டாவோவில் நடைபெற இருக்கும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டுக்கு முன்னால் இப்படியொரு நட்புறவு சந்திப்புக்கு இந்தியாவை அழைப்பது என்கிற முடிவை பெய்ஜிங் எடுத்திருக்கிறது. இந்தியாவுடன் தொடர்ந்த மோதல் போக்கை கடைப்பிடிப்பதன் விளைவுகளை அதிபர் ஷி நன்றாக உணர்ந்திருக்கிறார் என்பதன் அறிகுறிதான் சீன வெளிவிவகாரத்துறை எடுத்திருக்கும் இந்த முடிவு.
 டோக்காலாமில் போர் மூளக்கூடும் என்கிற அளவிலான பதற்ற நிலை ஏற்பட்டிருப்பது இரண்டு நாடுகளையுமே சிந்திக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கின்ற சில மாற்றங்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவின் அவசியத்தை அதிகரித்திருக்கிறது.
 இந்திய - சீன உறவு என்பது எந்தவொரு வரைமுறைக்குள்ளும் அடங்காதது. இரண்டு நாடுகளுக்குமிடையே பல நூற்றாண்டு வரலாற்றுத் தொடர்பு உண்டு என்றாலும், கடந்த ஒரு நூற்றாண்டாக சுமுகமான உறவு தொடர்ந்ததில்லை. இதற்கு மிக முக்கியமான காரணம், இரண்டு நாடுகளும் தவறான கண்ணோட்டத்துடன் ஒன்றை ஒன்று அணுகியதுதான் என்று சொல்லலாம்.
 இந்தியாவைப் பொருத்தவரை, தெற்காசியாவில் பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தை சீனா அதிகரித்து வருவது அண்டை நாடுகளின் மீதான தனது ஆதிக்கத்தைக் குலைப்பதாக இந்தியா கருதுகிறது. சீனாவைப் பொருத்தவரை, தனது போட்டியாளர்களாகக் கருதும் அமெரிக்காவுடனும் ஜப்பானுடனும் இந்தியா ஏற்படுத்திக்கொண்ட ராணுவ ஒப்பந்தங்கள், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்று கருதுகிறது. சமநிலையை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா அமெரிக்காவுடனும், சீனா பாகிஸ்தானுடனும் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டதன் பின்னணி இதுதான்.
 பிரதமர் நரேந்திர மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் இப்போது சந்தித்திருப்பதன் பின்னணியில், இரண்டு நாடுகளுக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களாகவே திரை மறைவில் பேச்சுவார்த்தையும், அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடலும் நடந்து வந்திருக்கிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலும், வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் முதல் கட்டமாக சீனாவுக்கு விஜயம் செய்து பிரதமர் மோடி - அதிபர் ஷி சந்திப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
 இந்திய-சீன கருத்து வேறுபாடு, தெற்காசியாவில் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை நமது அண்டை நாடுகளிடம் ஏற்படுத்த பாகிஸ்தானுக்கு உதவுகிறது. அதேபோல அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனுமான உறவில், இந்தியா வேறு வழியில்லாமல் தங்களைச் சார்ந்திருப்பதாக அவர்கள் கருத இடமளிக்கிறது.
 சீனாவுக்கு எதிரான சில நிலைப்பாடுகளை ஜப்பான் எடுத்தாலும் கூட, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு 300 பில்லியன் டாலராக உள்ளது (ரூ.19.5 லட்சம் கோடி). கருத்து வேறுபாட்டைக் கடந்து சீனாவுடனான பொருளாதார உறவை ஜப்பான் கட்டமைத்துக் கொள்ளும்போது, இந்தியா மட்டும் எதிரி நாடாக இருக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற சிந்தனை நமது வெளியுறவுத் துறைக்கு ஏற்பட்டிருக்கிறது!
 சீனாவுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக நடவடிக்கைகள் அவ்விரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார யுத்தத்தில் இந்தியாவுடன் தோழமையை வலுப்படுத்திக்கொள்ள சீனா விழைவதில் நியாயம் இருக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக உறவு கடந்த ஆண்டில் 84.4 பில்லியன் டாலர் (ரூ. 5.48 லட்சம் கோடி) எனும்போது இரண்டு நாடுகளும் சர்வதேச பிரச்னைகளில் இணைந்து செயல்படுவதால் பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பயனடையலாம் என்று சீனா கருதுகிறது.
 இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பும், தலைவர்கள் மத்தியிலான சந்திப்பும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வை ஏற்படுத்திவிடாது என்பது இரு தரப்புக்குமே தெரியும். இரண்டு நாடுகளையும் 3,488 கி.மீ. எல்லை பிரிக்கிறது என்றாலும், தீவிரவாதம், திபெத் பிரச்னை, நதிநீர் பயன்பாட்டுப் பிரச்னை என்று பல பிரச்னைகள் காணப்பட்டாலும், பொருளாதார ரீதியான நட்புறவு வலுப்படுமானால், இந்தப் பிரச்னைகளை விவாதித்துத் தீர்வு காண்பதற்கு அது வழிகோலும் என்பதை பிரதமர் மோடியும் அதிபர் ஷியும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
 இந்தியாவின் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நிலையில், கிழக்கு எல்லையில் சீனாவுடனான பிரச்னையை வளர்த்துக் கொள்ளாமல் இருந்தாக வேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு உண்டு. சீனாவைப் பொருத்தவரை, அமெரிக்காவும், ஜப்பானும் நெருக்கமான தொடர்பில் இருக்கும் நிலையில், இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவது அவசியம். இந்தப் பின்னணியில்தான் இந்திய-சீன உறவை நாம் அணுக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com