கும்பல் வன்முறைக்கு முடிவு?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அண்மையில் நாடாளுமன்றத்திற்கு வழங்கியிருக்கும் வழிகாட்டுதல் கவனத்திற்குரியதும்,


உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அண்மையில் நாடாளுமன்றத்திற்கு வழங்கியிருக்கும் வழிகாட்டுதல் கவனத்திற்குரியதும், குறிப்பிடத்தக்கதும், வரவேற்புக்குரியதுமாகும். 43 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பின்படி, கும்பல் வன்முறையை தனிப்பட்ட குற்றமாக அறிவித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும். மக்களாட்சிக்கும் கும்பல் ஆட்சிக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உண்டு என்பதை உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்திலுள்ள ராம்கர் என்ற இடத்தில் ரஹ்பர்கான் என்பவரும் அவரது நண்பரான அஸ்லாம் என்பவரும் அண்டை மாநிலமான ஹரியாணாவுக்கு தங்களது பசுக்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அந்த வழியே வந்த சிலர், அவர்கள் இருவரும் பசு வதைக்காக அவற்றைக் கொண்டு செல்வதாகக் கூறி அவர்களைத் தாக்கத் தொடங்கினர். தங்களைப் பசுக் காவலர்கள் என்று வர்ணித்துக் கொள்ளும் அமைப்பினரும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள, அப்பாவிகளான ரஹ்பர்கானும் அஸ்லாமும் குற்றுயிரும் குலையுயிருமாக ஆகுமளவுக்கு நையப் புடைக்கப்பட்டனர். 
காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்கு வரும்போது, அவர்கள் ஏற்கெனவே அடித்துக் கொல்லப்பட்டார்களா, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் காவல்துறையினரின் மெத்தனத்தால் மரணமடைந்தார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. ரஹ்பர்கானின் பசுக்களை கோசாலையில் கொண்டு சேர்த்துவிட்டு, சாவகாசமாக தேநீர் அருந்திவிட்டு அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அவர்களுடைய உயிர் பிரிந்துவிட்டதில் வியப்படைய ஒன்றுமில்லை. ரஹ்பர்கானையும், அஸ்லாமையும் அடித்துக் கொன்ற பசுக் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். காவல்துறையினரின் மெத்தனத்துக்கு அதுதான் காரணமா என்பது தெரியவில்லை.
அல்வார் சம்பவம், மத்திய அரசை, கும்பல் கொலைக்கு எதிராக தனியான குற்றவியல் சட்டத்தை ஏற்படுத்தும் கட்டாயத்துக்குத் தள்ளியிருக்கிறது. இந்திய நிர்வாகத்தில் எந்த அளவுக்கு சட்டங்கள் பயனளிக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்களை எதிர்கொள்ள புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் அதனால் பெரிய அளவில் பலனொன்றும் ஏற்பட்டுவிடவில்லை என்பதை, தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. அரசியல் துணிவும், நிர்வாக இயந்திரத்தின் முனைப்பும் இல்லாமல் சட்டங்களால் எந்தவிதப் பயனும் ஏற்பட்டுவிடாது.
இதுபோன்ற கும்பல் வன்முறையையும், கும்பல் கொலைகளையும் தடுப்பதற்கு உச்சநீதிமன்றம் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் கும்பல் வன்முறை குறித்து மெத்தனம் காட்டிவந்த மத்திய அரசு, இப்போது இதுகுறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்காக இரண்டு உயர்நிலை குழுக்களை அமைத்திருக்கிறது. மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தலைமையிலான அமைச்சர் குழுவிடம் தனது பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில், கும்பல் கொலைகளை எதிர்கொள்ளவும், கும்பல் வன்முறையைத் தடுக்கவும் சட்டங்கள் உருவாக்கப்படும். 
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் அரசுக்குப் பல்வேறு வழிகாட்டுதல்கள் தரப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, காவல்துறையினர் நெடுஞ்சாலை கண்காணிப்புக்குப் போதுமான அளவில் திறமையான காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்பதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் அந்த வழிகாட்டுதல்களில் முக்கியமானவை. மேலும், இதுபோன்ற கும்பல் வன்முறை சம்பவங்களில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது. 
மாநில அரசுகள் கும்பல் வன்முறை, கும்பல் கொலைகள் நடைபெறும் கிராமங்கள், மாவட்டங்கள் ஆகியவற்றை அடையாளம் காண வேண்டும்; எந்தவொரு கும்பல் வன்முறை சம்பவமாக இருந்தாலும், உடனடியாக அதுகுறித்து காவல்துறைத் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும்; வன்முறையைத் தூண்டிவிடும் செய்திகள், விடியோக்கள், சமூக ஊடகப் பரப்புரைகள் உள்ளிட்டவை சட்டத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது.
கும்பல் வன்முறையால் தாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்; கும்பல் வன்முறை, கும்பல் கொலைகள் தொடர்பான வழங்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்; இதுபோன்ற சம்பவங்களில் அதிகபட்ச தண்டனை வழங்கி, அதன் மூலம் கும்பல் மனோநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் முன்வர வேண்டும் - இவை உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகள். 
உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகள் மட்டுமே கும்பல் வன்முறைக்கும் கொலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடாது. 
மத்திய-மாநில ஆளுங்கட்சிகளைச் சார்ந்தவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிலையில், பிரதமர் நேரிடையாகத் தலையிட்டு இதை தேசிய பிரச்னையாக அறிவித்து, குற்றவாளிகளை எச்சரித்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com