கேள்விக்குறியாகும் நம்பகத்தன்மை!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு என்பது இந்தியாவின் தலைமை புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் குறித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஒன்று.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு என்பது இந்தியாவின் தலைமை புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் குறித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஒன்று. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் பங்கு குறித்து விசாரிக்கும்படி சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கு எந்த அளவுக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்த முழுமையான தகவல் இல்லை. 
இரண்டாண்டுகளுக்கு முன்னால் மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் முன்னாள் இயக்குநராக இருந்த பி.கே. பன்சல் என்பவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு மத்திய புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு வந்தது. புலனாய்வுத் துறையின் கடுமையான விசாரணை முறைகளால் பாதிக்கப்பட்டு பன்சலின் மனைவியும் மகளும் தற்கொலை செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பி.கே. பன்சலும் அவரது மகனும் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். தற்கொலை செய்து கொண்ட பி.கே. பன்சல் தனது தற்கொலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி வைத்திருந்தார்.
பன்சலின் தற்கொலைக் கடிதத்தில், விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்களை சித்திரவதை செய்தார்கள் என்பதும், குடும்பத்தினர் எவ்வளவு கடுமையாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தப்பட்டார்கள் என்பதும் விவரமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. புலனாய்வுத் துறையின் தலைவர் உள்ளிட்ட ஐந்து பேரின் பெயர்களை பன்சலும் அவரது மகனும் தங்களது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டு, அவர்கள் எப்படியெல்லாம் தங்களைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை விவரித்திருந்தனர். 
ஏற்கெனவே மத்திய புலனாய்வுத் துறையின் மரியாதையும் நம்பகத்தன்மையும் சீர்குலைந்து இருக்கும் நிலையில், இப்போது சிபிஐயின் நிர்வாகச் செயல்பாடுகள் அதன் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. சிபிஐ கையாளும் மிக முக்கியமான வழக்குகளில் அந்தத் துறையின் மூத்த அதிகாரிகள் எந்த அளவுக்குக் கருத்து வேறுபாடுடன் செயல்படுகிறார்கள் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அதிகாரிகளுக்கிடையே காணப்படும் ஒற்றுமையின்மையும், கருத்துவேறுபாடுகளும், தனிப்பட்ட விரோதங்களும் இப்போது பொது வெளியில் வரத் தொடங்கியிருக்கின்றன. 
மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் விடுப்பில் செல்லும்போது, அவருக்கு மாற்றாக வழக்குகளில் யார் சிபிஐ சார்பில் ஆஜராவது என்பது குறித்து மிகப்பெரிய விவாதம் தொடங்கியிருக்கிறது. கடந்த மாதம் மத்திய ஊழல் விசாரணை ஆணையத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா விடுப்பில் சென்றிருக்கும் நிலையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அழைப்பு ஆணையை ஏற்று அவருக்கு பதிலாக சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அத்தானா ஆஜரானார். பணி மூப்பு ரீதியாக இயக்குநருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சிறப்பு இயக்குநருக்கு ஆஜராகும் அதிகாரம் கிடையாது என்று மத்திய புலனாய்வுத் துறை அந்த ஆணையத்திடம் தெரிவித்தபோது, அது விவாதத்தை எழுப்பியது.
சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை சிபிஐ இயக்குநர் வர்மா கடுமையாக எதிர்த்தார். ராகேஷ் அஸ்தானா மீது துறை ரீதியான விசாரணை நடப்பதாகவும், அதனால் அவர் நியமிக்கப்படக் கூடாது இயக்குநர் அலோக் வர்மா பிரச்னைஎழுப்பினார். ஆனாலும்கூட உச்சநீதிமன்றம் அஸ்தானாவின் பதவி உயர்வை அங்கீகரித்து உத்தரவிட்டது. ராகேஷ் அஸ்தானா சிறப்பு இயக்குநராக பதவி ஏற்றும்கூட அவர் மீதான துறை ரீதியான விசாரணையை இயக்குநர் அலோக் வர்மா தொடர அனுமதித்தார். 
ராகேஷ் அஸ்தானா சிறப்பு இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டது முதல், மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மத்தியில் மிகப்பெரிய பிளவும், அஸ்தானாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த இயக்குநர் அலோக் வர்மாவின் ஆதரவாளர்களின் ஒத்துழைப்பின்மையும் சிபிஐயின் செயல்பாடுகளை பாதிக்கின்றன. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல், விஜய் மல்லையா ஊழல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான வழக்குகளில் இந்த பிரச்னை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலை தொடருமானால் வழக்குகள் முறையாக விசாரிக்கப்படுவது சந்தேகம்தான்.
மத்திய புலனாய்வுத் துறையும், அமலாக்கத்துறையும் பல்வேறு பொருளாதார குற்றங்களில் நடத்தும் விசாரணைகள் கேலிக்குரியவையாக மாறியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஏர் ஏஷியா வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. ஆனால், அமலாக்கத்துறையோ அந்த வழக்கு பலவீனமானது என்று கருதி அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. 
இரண்டு புலனாய்வு நிறுவனங்களுக்கும் இடையே எந்தவிதமான புரிதலோ தொடர்போ இல்லாமல் இருக்கும் நிலையில், பல வழக்குகளில் மத்திய அரசின் இரண்டு முக்கியமான துறைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு செயல்படுவது விசாரணையின் போக்கையே கேள்விக்குறியாக மாற்றிவிட்டிருக்கிறது. இதன் விளைவாக, அரசின் நிர்வாக அமைப்பு பலவீனப்பட்டு வருகிறது. இதை ஏன் ஆட்சியாளர்கள் உணரவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. 
இதே நிலைமை தொடருமானால், மாநில காவல்துறை மத்திய புலனாய்வுத் துறையைவிட நம்பகத்தன்மை உடையதாக மக்களால் கருதப்படும் நிலைமை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com