ஃபார்மலின் பீதி

கேரளம், தமிழ்நாடு, கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள மீன் சந்தைகளில் விற்பனையாகும் மீன்களில், ஃபார்மலின் என்கிற வேதிப்பொருள் கலந்திருப்பதாக எழுப்பப்பட்டிருக்கும்

கேரளம், தமிழ்நாடு, கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள மீன் சந்தைகளில் விற்பனையாகும் மீன்களில், ஃபார்மலின் என்கிற வேதிப்பொருள் கலந்திருப்பதாக எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. பல மாநிலங்களில் மீன் விற்பனைக்கு தடையே விதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் மீன் உணவு குறித்த பீதி எழுந்திருக்கிறது. 
வழக்கமாக, இரண்டு மாத பருவ மழைக்குப் பிறகு ஜூலை மாதம் மீன்பிடிப் பருவம் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு மீன்பிடிப் பருவம், தென்னிந்திய மாநிலங்களில் சிறிது முன்னதாகவே தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு மீன்களின் வரத்தும் அதிகரித்திருக்கும் நிலையில், ஃபார்மலின் கலப்பு குறித்த பீதி விற்பனையை கடுமையாகப் பாதித்து, மீனவர்களைக் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமான சென்னை காசிமேட்டில் சாதாரணமாக வாரக் கடைசியில் சுமார் 200 டன்னும், வார நாள்களில் 55 முதல் 70 டன்னும் மீன்கள் விற்பனையாகும். இப்போது அந்த விற்பனை 25%-க்குமேல் குறைந்திருக்கிறது. அதேபோல் மீன் விலையும் கடுமையாகச் சரிந்திருக்கிறது.
சுகாதாரத் துறையினர், மீன்கள் புதிதாக இல்லை என்றும் ஃபார்மலின் பயன்படுத்தி பாதுகாக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றும் ஐயப்பாட்டை எழுப்பியிருப்பதுதான், இந்த விற்பனை சரிவுக்கும், விலை குறைவுக்கும் காரணம். 
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்த பிரச்னை. இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரளத்தில் உள்ள பாலக்காடு சோதனைச்சாவடியில் ஆந்திரத்திலிருந்து எட்டு லாரிகளில் கொண்டு வரப்பட்ட ஃபார்மலின் மூலம் பதப்படுத்தப்பட்ட 14,000 கிலோ மீன்கள் ஆந்திரத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டன. அந்த மீன்கள் பயன்பாட்டுக்கு உகந்தவையல்ல என்றும், உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் அவை அழிக்கப்பட்டதா, ஆந்திரத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டதா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. 
மேற்கு வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் மீன் இல்லாமல் யாரும் உணவு அருந்துவது இல்லை. நாகாலாந்து, மேகாலயம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மீன் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது எனும்போது எந்த அளவுக்கு சந்தேகம் வலுத்து பீதி பரவியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். 
ஃபார்மலின் என்பது ஃபார்மால்டிஹைடு என்கிற வேதிப்பொருளின் திரவக் கரைசல். சாதாரணமாக, பிணவறைகளிலும், சோதனைச் சாலைகளிலும் சடலங்கள் சிதைவடையாமல் பாதுகாப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. 
கடந்த பல ஆண்டுகளாகவே மீன் வணிகத்தில் புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் போது அவை சிதைவடையாமல் பாதுகாக்க ஃபார்மலின் கரைசல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பனிக்கட்டிகளின் மூலம் பாதுகாப்பதற்கு செலவும் அதிகம், பராமரிப்பும் தேவை என்பதால் இந்த முறையைத்தான் பல பெரு வணிகர்கள் கையாளுகிறார்கள்.
இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஃபார்மால்டிஹைடைப் பயன்படுத்தி, மீன்களைப் பாதுகாப்பதை தடை செய்திருக்கிறது. சர்வதேச புற்றுநோய் ஆய்வு நிறுவனம் ஃபார்மால்டிஹைடை புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள் என்று 2004-இல் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முக்கியமான காரணம், ஃபார்மால்டிஹைடு பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டதுதான். ஃபார்மால்டிஹைடு உட்கொள்ளப்பட்டால் புற்றுநோய் வருமா என்பது குறித்து முழுமையான ஆய்வு எதுவும் இதுவரையில் இல்லை.
புதிதாக பிடிக்கப்பட்ட மீன்களில் பாதுகாப்புக்காக எதையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை எனும்போது, ஃபார்மலின் கலப்பது, ஏற்கெனவே பிடித்துவைத்த பழைய மீன்களை நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காகத்தான் என்பது தெளிவு. அதிக அளவிலான ஃபார்மலின், புற்றுநோய் வரக் காரணமாகிறதோ இல்லையோ, வயிற்றில் அதிக எரிச்சலையும், வாயுவையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் எந்த விதத்திலும் இந்த வேதிப்பொருளை பயன்படுத்தி உணவுப் பொருளான மீன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
உலகிலேயே இரண்டாவது அதிக மீன்பிடித் தொழில் செய்யும் நாடு இந்தியா. உணவில் அதிகமாக மீன் சேர்த்துக்கொள்பவர்களும் இங்குதான் இருக்கிறார்கள். உள்நாட்டு மீன் உற்பத்தி 2004-05-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது இரட்டிப்பாகி இருக்கிறது. நம்முடைய ஏற்றுமதி 2004-05-இல் வெறும் 8,400 கோடி ரூபாய். 2016-17-இல் அதுவே 38,000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் மீன் ஏற்றுமதி பல மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படும் நிலையில், ஃபார்மலின் போன்ற புற்றுநோய் உருவாக்கும் வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது நமது ஏற்றுமதியை வெகுவாக பாதிக்கும். 
மீன் வணிகத்தின் வளர்ச்சி, தொடர்ந்த உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும் நுகர்வோர் நலத்தை அந்த வணிகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் ஃபார்மலின் பீதி உணர்த்துகிறது. உணவுப் பொருள்களில் நச்சுக் கலப்பது என்பது பொதுமக்களின் அடிப்படை உணவுக்கான உரிமையை மீறுவதாகும். இப்போது பரவலாகக் காணப்படும் பீதிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து, மீன் வணிகத்தையும் குடிமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com