அஸ்தமித்தது சூரியன்!

ஓய்வறியாச் சூரியன் அஸ்தமித்து விட்டது என்று சொல்வதா, எழுதி எழுதி சோர்ந்த விரல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டன என்று சொல்வதா,

ஓய்வறியாச் சூரியன் அஸ்தமித்து விட்டது என்று சொல்வதா, எழுதி எழுதி சோர்ந்த விரல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டன என்று சொல்வதா, தனது பேச்சிலும் மூச்சிலும் தமிழுணர்வுடன் திகழ்ந்தவர் தமிழ் மண்ணுடன் கலந்து விட்டார் என்று இரங்கல் செய்தி வாசிப்பதா...? 1924 ஜூன் மாதம் 3-ஆம் நாள் திருக்குவளையில் தொடங்கிய முத்துவேலர் கருணாநிதியின் பெரும்பயணம் அகவை 95-இல் சென்னையில் நிறைவு பெற்றிருக்கிறது.
காவிரிக் கரையில் பிறந்து, காவிரித் தண்ணீரில் நீந்தி விளையாடி, காவிரிக்காகப் போராடிய கருணாநிதியின் இறுதி மூச்சு காவேரி மருத்துவமனையில் பிரிந்தது தற்செயல் நிகழ்வாகத் தோன்றவில்லை. மரணத்துடன் மருத்துவமனையில் அவர் நடத்திய இறுதிக்கட்டப் போராட்டம், அவருக்கு எந்த அளவுக்கு மண்ணின்மீதும், வாழ்க்கையின் மீதும் காதல் இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. மரண தேவனேயானாலும் போராடாமல் விடமாட்டேன் என்று இறுதி மூச்சுப் பிரியும்வரை பிடிவாதம் பிடித்த அசாத்தியமான போராளி அவர்!
1957-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் குளித்தலை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் 2016 தேர்தல் வரை போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. 1975-ஆம் ஆண்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டு, நெருக்கடி நிலையும் அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியும் அமைந்தபோது, பலரும் கருணாநிதியின் சகாப்தம் முற்றுப்பெற்றதாகவே முடிவு கட்டினர். அடுத்த 13 ஆண்டுகள் தொடர் தோல்விகள், பின்னடைவுகள் என்று திமுக தளர்ந்தாலும், சோர்ந்து விடாமல் தொடர்ந்து தனது தலைமையில் அந்தக் கட்சியைக் கட்டிக்காத்த பெருமை அவரது தனித்திறமை.
மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னை வழி மொழியவோ, ஆதரிக்கவோ எந்தத் தலைவரோ, செல்வச் சீமானோ இல்லாமல், அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் போன்றவர்களைப்போல பட்டப்படிப்போ, முதுநிலைப் படிப்போ இல்லாத நிலையில், தனக்கென ஜாதிப் பின்னணியோ, பண பலமோ இல்லாத சூழ்நிலையில், அவர் அடிக்கடி சொல்வதைப்போல நிஜமாகவே ஒரு சாமானியன், இந்த நிலையை அடைய எந்த அளவுக்கு எதிர்நீச்சல் போட்டிருக்க வேண்டும் என்பதையும், அத்தனையையும் எதிர்கொண்டு இத்துணை வெற்றியை அடைவதென்றால் எத்துணை திறமைகள் அந்த மனிதரிடம் இருந்திருக்க வேண்டும் என்பதையும் நினைத்தால் பிரமிப்பில் சமைந்து விடுவோம்.
1969-இல் அவர் முதல்வரானது முதல், ஒன்றன் பின் ஒன்றாக எழுந்த பல்வேறு சவால்களுக்கு இடையிலும் அவரது நகைச்சுவை உணர்வும், தன்னம்பிக்கையும் எள்ளளவும் எப்போதும் குறைந்ததே இல்லை என்பதுதான் வியப்பு. அவரது எதிர்வினைகள் பெரும்பாலும் கிண்டலும் கேலியுமாக எள்ளி நகையாடும் விதத்தில்தான் அமைந்திருந்தன என்பதை மறுக்க முடியாது.
பராசக்தி' திரைப்படத்தில் கருணாநிதியின் வசனங்கள் வைக்கோல் போரில் நெருப்பு வைத்தாற்போல, தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் தீப்போலப் பரவியது. அதை மனனம் செய்தவர்களின் எண்ணிக்கை, அந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கையில் சரிபாதி. ஆனால், பராசக்தி' வெளியாவதற்கு முன்னரே கருணாநிதி நான்கு படங்களுக்குக் கதை, வசனம் எழுதிவிட்டிருந்தார் என்பதும், திரையுலகில் அவரது புகழ் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியிருந்தது என்பதும் இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. பராசக்தி' வெளிவந்தபோது கருணாநிதியின் வயது வெறும் 28!
திரைப்படம், இதழியல், அரசியல், இலக்கியம், மேடைப்பேச்சு என்று கருணாநிதி எதில் ஈடுபட்டாலும் அதில் தன்னிகரற்ற ஆளுமையாக அவரால் வலம்வர முடிந்தது. அரசியல் எதிரிகளை அவரால் அரவணைத்துச் செல்லவும் முடியும், அவர்களைப் பிரித்து அரசியல் வியூகம் அமைக்கவும் தெரியும். வள்ளுவரின் குறளுக்கேற்ப பிரித்தலும், பேணிக்கொளலும், பிரிந்தார் பொருத்தலும்' என்பது கருணாநிதிக்குக் கை வந்த கலை என்றால், சொல்லுக சொல்லைப் பிரிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து' என்பதைக் கற்றுத் தேர்ந்த வித்தகர் அவர்.
கடந்த அறுபது ஆண்டுகளாக கருணாநிதியைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த தமிழக அரசியல் அவரது மறைவால் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. ஓய்வு ஒழிவில்லாமல் சுழன்று கொண்டிருந்த சூரியனின் அஸ்தமனம், அரசியல் வானில் கும்மிருட்டை ஏற்படுத்தி இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் வேறு எந்த ஒருவரும் கருணாநிதியைப்போல் 19 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்ததில்லை. அதனால் இவரளவுக்குத் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களும் இருக்க முடியாது.
பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு பிரச்னைகளில் பலருக்கும் கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவரது தமிழ்ப் பற்றையும், தமிழின உணர்வையும் யாரும் சந்தேகிக்க முடியாது. அவரது செயல்பாடுகளும், கருத்துக்களும், செய்கைகளும், பேச்சுக்களும், விமர்சனங்களும் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது அடிப்படை குணமான தமிழ் மீதான காதலை மறுத்துவிட முடியாது.
முத்துவேலர் கருணாநிதி தனது 95-ஆவது வயதில் இயற்கை எய்திவிட்டிருக்கிறார். தமிழகத்தில் பல முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கப் போகிறார்கள். ஆனால், அவர்களில் தமிழை நேசிப்பதில் முதல்வராகத் திகழ்ந்தவர் கருணாநிதி மட்டுமாகத்தான் இருக்க முடியும். தமிழோடும், தமிழ் உணர்வோடும், தமிழினத்தின் உயிர்ப்போடும் கருணாநிதி' கலந்து விட்டிருக்கிறாரே தவிர, அவர் மறைந்துவிட்டார் என்று சொல்வதற்கில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com