விவசாயிக்கு வஞ்சனை...

இரண்டாண்டுகளுக்கு முன்பு உலகிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு உலகிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2016, ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம்' (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேளாண் இடரை அகற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு குறைந்து வருகிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தங்களது பயிர்களைக் காப்பீடு செய்யும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நிலையில், காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நியாயமாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி 2016-17-இல் 5.72 கோடியாக இருந்த காப்பீடு கோரிய விவசாயிகளின் எண்ணிக்கை 2017-18-இல் 4.87 கோடியாகக் குறைந்திருக்கிறது. 85 லட்சம் விவசாயிகள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை நிராகரித்திருப்பது ஏன் என்பதை அரசு சிந்திக்க வேண்டும். 
பல மாநிலங்களில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமான விவசாயிகள் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறி இருக்கிறார்கள். ராஜஸ்தான், (34.3%), குஜராத் (11.17%), மகாராஷ்டிரம் (15.23%), கர்நாடகம் (41.5%), கேரளம் (40.4%) உத்தரகண்ட் (29.5%), உத்தரப் பிரதேசம் (21.83%), பிகார் (17.68%), தமிழ்நாடு (11.43%) ஆகிய மாநிலங்களில் காப்பீட்டை நிராகரிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை குறிப்பிடும்படியாக இருக்கிறது.
பயிரிடுவதற்கு முந்தைய நிலையிலிருந்து அறுவடைக்குப் பிறகு விளைபொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வது வரை எல்லா இடர்பாடுகளுக்கும் (ரிஸ்க்) பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்' மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து மிகக்குறைவான தொகைதான் கட்டணமாகப் பெறப்படுகிறது. மீதமுள்ள தொகையை மத்திய-மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் 2016-17 நிதியாண்டில் ரூ.22,180 கோடியும், 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.24,454 கோடியும் விவசாயிகளிடமிருந்தும், அரசிடமிருந்துமாகக் காப்பீட்டுக் கட்டணம் வசூலித்திருக்கின்றன. ஆனால், 2016-17-இல் விவசாயிகளுக்கு அவர்கள் வழங்கியிருக்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.12, 959 கோடி மட்டுமே. 
மாநில அரசுகளின் பரிந்துரைப்படி கடந்த ஆண்டுக்கான காரிஃப் சாகுபடி பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை ரூ.13,655 கோடி. இதில் வெறும் ரூ.1,759 கோடி இழப்பீட்டை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கின்றன. அதிலும் கூட வெறும் 400 கோடி மட்டும்தான் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2016-17 சாகுபடி பருவத்திலும் கூட காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதற்கும் வழங்கியதற்கும் இடையேயான வித்தியாசம் ரூ.1474 கோடி. ஒப்புக்கொண்ட தொகையைக் கூட காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க முன்வருவதில்லை.
இழப்பீடு பெறுவதில் தாமதம் என்பது ஒருபுறம் இருக்க, காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் இழப்பீடும் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. பல நிகழ்வுகளில் விவசாயிகளுக்கு வெறும் ரூ.4, ரூ.10 என்றெல்லாம் கூட காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க முற்பட்டிருக்கின்றன. அதிகம் படிப்பறிவு இல்லாத விவசாயிகள் இது குறித்து யாரிடம் முறையிடுவது என்பது தெரியாமல் தவிக்கிறார்கள். 
அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டு, காப்பீடு வழங்குவதுதான் வழக்கம். காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோருவது போல கட்டணம் கோரும் முறை, உலகில் வேறு எங்கும் இதுவரையில் இல்லை. தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொண்டதால்தான் இப்படியொரு முடிவை அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் காப்பீட்டுக் கட்டணம் பெற தனியார் நிறுவனங்களுக்கு இந்த வழிமுறை உதவுகிறது. 
அரசின் பல காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும் நிலையில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பங்குபெற வேண்டிய அவசியம் என்ன? காப்பீட்டு நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக இருந்தால், முறையாக அவை இழப்பீடுகளை வழங்குகிறதா என்பதைக் கண்காணிக்கவும், தட்டிக் கேட்கவும், உத்தரவிடவும் அரசால் முடியும். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுக் கட்டணத்தை வசூலிப்பதில் காட்டும் அக்கறையையும், ஆர்வத்தையும் விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்குவதிலும் அதற்கான தொகையை உடனடியாகக் கொடுப்பதிலும் காட்டுவதில்லை. 
கடந்த சாகுபடி ஆண்டில் மட்டும் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.9,000 கோடிக்கும் அதிகமான லாபத்தை பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஈட்டியிருக்கின்றன. விவசாயிகளின் பெயரைச் சொல்லி மக்கள் வரிப் பணத்தை அரசிடம் கட்டணமாகப் பெற்று பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றன. விவசாயிகளின் இடர்களைப் போக்குவதற்காக பிரதமரால் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்திலிருந்து விவசாயிகள் வெளியேறுவது வேதனை அளிக்கிறது. 
இந்தத் திட்டம் வெற்றி பெற்று, விவசாயிகள் மத்தியில் நரேந்திர மோடி அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டுமானால், இதை அரசுக் காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் மட்டுமே நிறைவேற்றினால்தான் அது சாத்தியமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com