பலவீனம்தான் பலம்!

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவையின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் வெளிச்சம் போட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவையின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் வெளிச்சம் போட்டிருக்கிறது. மக்களவையைப் போல ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லை. அப்படி இருந்தும் கூட, சரியான வியூகம் வகுத்து ஆளும் கட்சி வேட்பாளரை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளால் தோல்வியடையச் செய்ய முடியவில்லை. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங், 24 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் பி.கே. ஹரிபிரசாத்தை தோற்கடித்திருக்கிறார். 
கடந்த நான்கு ஆண்டுகளாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் மாநிலங்களவையில் கணிசமாக அதிகரித்து வந்திருப்பது உண்மை. ஆனாலும் கூட, பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் கட்சி கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. 
இந்தப் பின்னணியில்தான் மாநிலங்களவைத் துணைத் தலைவராக நீண்ட காலம் இருந்த காங்கிரஸ் உறுப்பினர் பி.ஜே.குரியனின் மாநிலங்களவை பதவிக்காலம் நிறைவு பெற்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தனது கட்சியைச் சேர்ந்தவரையோ, கூட்டணிக் கட்சி உறுப்பினர் ஒருவரையோ துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில் பாஜக முனைப்பு காட்டியதில் வியப்பில்லை. ஆனால், ஆளும் கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கும் எண்ணிக்கை பலமும் சாத்தியமும் இருந்தும் கூட அதை காங்கிரஸ் நழுவ விட்டதுதான் ஆச்சரியம்!
பிகாரில் தனது கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியது மட்டுமல்லாமல், மாநிலக் கட்சிகளுடன் தொடர்பு கொள்வதிலும் பாஜக தலைமை சுறுசுறுப்பாக இயங்கியது. ஒன்பது உறுப்பினர்கள் உள்ள பிஜு ஜனதா தளம், ஆறு உறுப்பினர்கள் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி, மூன்று உறுப்பினர்கள் உள்ள அகாலிதளம், மூன்று உறுப்பினர்கள் உள்ள சிவசேனா இவையெல்லாம் போதாதென்று தமிழகத்திலிருந்து அதிமுகவின் 13 உறுப்பினர்களும் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வந்தனர் என்பதை விட, பாஜக தொடர்பு கொண்டு அவர்களது ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டது என்பதுதான் நிஜம்.
இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்த விரும்பியது. ஆனால், எந்தக் காரணத்துக்காகவும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரைத் தாங்கள் ஆதரிக்க முடியாது என்று இடதுசாரிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தீர்மானமாகக் கூறியபோது, காங்கிரஸ் கட்சியால் மாற்று வேட்பாளராகக் கூட்டணி கட்சியிலிருந்து ஒருவரைப் பரிந்துரைக்க முடியவில்லை.
வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டது என்கிற காங்கிரஸ் குற்றச்சாட்டில் அர்த்தமில்லை. காங்கிரஸ் தரப்பு அந்தக் கட்சியின் ஆதரவைக் கோராத நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூன்று உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்று அந்தக் கட்சி விளக்கம் அளித்திருக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் காங்கிரஸ் தலைமை முறையாக ஆதரவு கோராததால்தான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து மறைமுகமாக ஆளும்கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு வழிகோலின.
தேர்தல் முடிவு பாஜகவுக்குச் சாதகமாக மாறியதற்கு ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் வேட்பாளரை நிறுத்தியது மட்டுமே காரணமல்ல. ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட பிஜு ஜனதாதளம் ஆளும்கட்சி வேட்பாளரை ஆதரிக்க முற்பட்டதுதான் வெற்றியின் போக்கை திசை திருப்பிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி, கெளரவம் பார்க்காமல் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கை அழைத்து ஆதரவு கோரத் தயங்கவில்லை. அமித் ஷாவும் கெளரவம் பார்க்காமல் கூட்டணிக் கட்சியான சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேயை அழைத்து ஆதரவு கோரிப் பெற்றார்.
நிதீஷ் குமாரின் மூலம் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவின் ஆதரவை பாஜக பெற்றதுபோல, காங்கிரஸும் முனைப்புக் காட்டியிருந்தால், எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்க முடியும். பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, தேசியவாத காங்கிரஸ் இவற்றில் ஏதாவது ஒரு கட்சியின் வேட்பாளரை நிறுத்தி, அத்தனை எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் காங்கிரஸார் பெற்றிருக்க முடியும். மம்தா பானர்ஜியின் துணையோடு, பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனை, தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளை எதிர்க்கட்சி அணிக்குக் கொண்டுவரும் வாய்ப்பை காங்கிரஸ் நழுவவிட்டுவிட்டது.
ஐக்கிய ஜனதாதள வேட்பாளரை வெற்றிபெறச் செய்ததன் மூலம் பிகாரில் தனது கூட்டணியை உறுதி செய்து கொண்டதுடன், எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இருக்கும் பிளவை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது பாஜக தலைமை. மாநிலக் கட்சிகளிடையே, பாஜக எதிர்ப்பை விட காங்கிரஸ் எதிர்ப்புதான் வலிமையாக இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தியதுதான் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதற்குத் தடையாக இருந்தது என்பதுதான் மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் கூறும் செய்தி.
பாஜகவின் பலவீனம் எதிர்க்கட்சிகளின் பலமல்ல. ஆனால், எதிர்க்கட்சிகளின் பலவீனம் பாஜகவின் பலம். இது 2019 மக்களவைத் தேர்தலுக்கும் பொருந்தலாம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com