தீர்வு இடஒதுக்கீடு அல்ல!

மகாராஷ்டிர மாநிலத்தில் இடஒதுக்கீடு

மகாராஷ்டிர மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி மராத்தா இனத்தவர்கள் நடத்தும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மராத்தா இனத்தவர்கள் கடந்த செப்டம்பர் 2016 முதல் இதுவரை மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 58 மெளன ஊர்வலங்கள் நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் லட்சக்கணக்கான மராத்தா இனத்தவர்கள் கலந்துகொண்டார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளை இணைக்காமல் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
கடந்த ஆண்டுவரை வன்முறையில் ஈடுபடாமல் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு இடஒதுக்கீடு கோரி மெளனப் பேரணி நடத்தி வந்த மராத்தா போராட்டக் குழுவினர், இப்போது வன்முறையில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். மகாராஷ்டிர காவல்துறை இதுவரை அவர்கள் மீது வன்முறை, சூறையாடல், கல்லெறிதல், காவல்துறையினரைத் தாக்குதல், பொதுச்சொத்துக்கு ஊறு விளைவித்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் 150-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் மற்ற பகுதிகளில் மட்டுமே தீவிரமாகக் காணப்பட்டப் போராட்டம் இப்போது தலைநகர் மும்பையிலும் தீவிரம் கண்டிருக்கிறது. 
இரண்டாண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றபோது அவர்களை சமாதானப்படுத்த முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் சில சலுகைகளை அறிவித்தார். பிற்பட்ட வகுப்பினருக்கு வழக்கப்படும் கல்வி நிலையங்களில் கட்டண சலுகை மராத்தா இனத்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு அரசுப் பணிகளில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க முதல்வர் பட்னவீஸ் முற்பட்டபோது, எதிர்பார்த்தது போலவே உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்துவிட்டது.
இப்போது போராட்டம் வலுத்திருக்கும் நிலையில் வரும் நவம்பர் மாதம் இறுதிக்குள் மகாராஷ்டிர அரசு மராத்தா இனத்தவருக்கு அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு வழக்கப்படும் என்று முதல்வர் பட்னவீஸ் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மராத்தா இனத்தவரின் இடஒதுக்கீட்டு பிரச்னை முடிவுக்கு வரும்வரை 22,000 அரசுப் பணியிடங்களை நிரப்பும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு 52% சதவீதம் உச்ச வரம்பு விதித்திருக்கும் நிலையிலும், மும்பை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட 16% சதவீத இடஒதுக்கீட்டை நிராகரித்திருக்கும் நிலையிலும் முதல்வர் பட்னவீஸýன் இப்போதைய அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகம்தான். 
மகாராஷ்டிர மாநிலத்தைப் பொருத்தவரை மராத்தா இனத்தவர்கள் பொருளாதார ரீதியாக வசதியானவர்கள். மகாராஷ்டிரத்தை ஆண்ட பல முதல்வர்கள் மராத்தா இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எப்போதுமே சமூக, அரசியல் அந்தஸ்தும் ஆதாயமும் அந்த இனத்தவருக்கு இருந்து வந்திருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மொத்த விவசாய நிலங்களில் 73% முதல் 90% வரை மராத்தா இனத்தவருக்குச் சொந்தமானது. பெரும்பாலான சர்க்கரை ஆலைகளையும் கூட்டுறவுச் சங்கங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் மராத்தா இனத்தவர்கள்தான். இந்த நிலையில் அவர்கள் சமூக, பொருளாராத அடிப்படையில் இடஒதுக்கீடு கோரிப் போராடுவது வெளிப்படையாகப் பார்த்தால் விசித்திரமாகத்தான் தோற்றமளிக்கும். ஆனால், இதன் பின்னணியில் மராத்தா இளைஞர்கள் மத்தியில் காணப்படும் வேலைவாய்ப்பின்மையும், பொருளாதாரப் பின்னடைவும் வெளியில் தெரிவதில்லை. 
மகாராஷ்டிர மாநிலத்தில் கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பட்டியல் இனத்தவரும் இடஒதுக்கீடு காரணமாக பெருமளவில் அரசு வேலைவாய்ப்புடன் நிரந்தர வருவாய் உள்ளவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். அதே நேரத்தில், விவசாயம் போதுமான அளவில் கை கொடுக்காத காரணத்தால், வேளாளர்களான மராத்தாக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயக் கூலி ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் அவர்களது விவசாய வருவாய் அதிகரிக்காமல் இருப்பதால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகரித்து வரும் கல்வி, மருத்துவச் செலவுகளும் நிரந்தரமில்லாத வேளாண் வருவாயும் மராத்தாக்களை இடஒதுக்கீடு கோரிப் போராட தூண்டியிருக்கிறது. 
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டிருப்பது போல, போதுமான அரசு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் இடஒதுக்கீடு எந்தவிதத்திலும் வேலைவாய்ப்புக்கான உறுதியை அளிக்காது. தங்களைப் பிற்படுத்தப்பட்ட இனத்தவராக மாற்றிக்கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற முடியும் என்கிற கருத்து மாயத்தோற்றமாகத்தான் இருக்க முடியும். 
மராத்தாக்கள் மட்டுமல்லாமல் ஹரியாணாவில் ஜாட்டுகள், குஜராத்தில் படேல் இனத்தவர்கள் உள்ளிட்ட முற்படுத்தப்பட்ட இனத்தவர்களின் பட்டியலில் உள்ளவர்கள் இடஒதுக்கீடு கோரிப் போராடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றால் இதன் பின்னணியில் மிகப்பெரிய வேளாண் இடர் காணப்படுகிறது என்பதுதான் பொருள். மராத்தக்களின் போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் காணப்படும் பதற்றமான மனநிலையின் வெளிப்பாடு என்பதை மத்திய - மாநில அரசுகள் உணர வேண்டும். இதற்குத் தீர்வு கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியாகத்தான் இருக்க முடியுமே தவிர, இடஒதுக்கீட்டு அறிவிப்புகள் பயனளிக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com