பாராட்டத் தோன்றவில்லை!

நீதிபதி குட்டியில் மேத்யூ ஜோசப் ஒருவழியாக கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றிருக்கிறார்.

நீதிபதி குட்டியில் மேத்யூ ஜோசப் ஒருவழியாக கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றிருக்கிறார். கடந்த எட்டு மாதங்களாக நீடித்து வந்த, உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.எம். ஜோசப்பின் உச்சநீதிமன்றத்துக்கான பதவி உயர்வு குறித்த சர்ச்சை, அவரது பதவி ஏற்புடன் முடிந்து விட்டது என்று கூறிவிட முடியவில்லை. காரணம், அவரது பதவி ஏற்பு கூட மத்திய அரசால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டதுதான். 
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், சட்ட ஆணையத் தலைவராக இருந்தவருமான நீதிபதி கே.கே.மேத்யூவின் மகன்தான் நீதிபதி கே.எம்.ஜோசப். கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த இவர், 2014 ஜூலை மாதம் உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் 9-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்குத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான கொலீஜியம்' கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.
கொலீஜியம் மூலம் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை சரியா, தவறா என்கிற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொலீஜியம் முறையின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள் நடைபெறுகின்றன. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களின் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் நீதிபதிகளின் பெயரை அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், நரேந்திர மோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் மத்திய ஆட்சியில் அமர்ந்தது முதல் இந்தப் பிரச்னையில் நீதித்துறைக்கும், மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடு எழத்தொடங்கியது.
நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்ளும் கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதால், அதற்குப் பதிலாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்' ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரித்து வந்தன. நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம்' நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 
இந்தப் பின்னணியில்தான் கடந்த ஜனவரி மாதம் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு செய்ய மத்திய அரசிடம் பரிந்துரைத்தது. மத்திய அரசு அந்தப் பரிந்துரையை நிராகரித்தது. மீண்டும் கடந்த மே மாதம் அதே பரிந்துரையை உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அனுப்பியது. நீதிபதி கே.எம். ஜோசப்புடன் சேர்ந்து பரிந்துரைக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ராவின் பெயர் மட்டும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகிக்கிறார்.
நீதிபதி கே.எம். ஜோசப் பிரச்னையில் மத்திய அரசு தயக்கம் காட்டுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசைக் கலைத்து, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்தது மத்திய அரசு. ஆனால், அன்றைய உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எம். ஜோசப் அந்த உத்தரவை ரத்து செய்தார். அதனால், மத்திய அரசு நீதிபதி கே.எம் ஜோசப்பை தனக்கு எதிரானவர் என்கிற கண்ணோட்டத்தில் அவரது பதவி உயர்வை நிராகரித்து வந்தது. ஆனால், ஏற்கெனவே கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நிலையில், அதே மாநிலத்தைச் சேர்ந்த இன்னொருவர் நியமிக்கப்படத் தேவையில்லை என்பதால் இவரது பெயரை நிராகரிப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் கூறியது.
உச்சநீதிமன்ற கொலீஜியம் கே.எம். ஜோசப்புக்கு பதவி உயர்வு தரப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து, மீண்டும் பரிந்துரைத்துவிட்ட நிலையில், மத்திய அரசு வேறு வழியில்லாமல் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க சம்மதம் தெரிவித்தது. ஆனாலும் கூட, கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோருடன் இணைத்து இவரது பெயரையும் அங்கீகரித்திருக்கிறது. பதவியேற்பில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜிக்கும், வினீத் சரணுக்கும் பின்னால் மூன்றாவது நபராக நீதிபதி கே.எம். ஜோசப்பின் பெயர் இடம்பெற்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த ஜனவரி மாதமே பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி கே.எம். ஜோசப் இப்போது நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோரை விட பதவி மூப்பு அடிப்படையில் பின்னால் தள்ளப்பட்டிருக்கிறார்.
உச்சநீதிமன்ற நியமனங்களில் பதவி மூப்பு என்பது கொலீஜியத்தில் இடம்பெறுவதற்கும் பின்னாளில் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கும் மிக மிக அவசியம். ஒரே நேரத்தில் மூன்று நான்கு பேர் பதவி ஏற்கும்போது, பதவி ஏற்பு வரிசைப்படி அவர்களது பணி மூப்பு தீர்மானிக்கப்படுகிறது. நீதிபதி கே.எம். ஜோசப்பின் மீதான அதிருப்தியை மத்திய அரசு இப்படி மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பது பாராட்டும்படியாக இல்லை.
தேர்தல் நெருங்கும் வேளையில் நீதிபதி கே.எம். ஜோசப்பின் பதவி உயர்வு சர்ச்சையை மேலும் கடுமையாக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பது தெரிகிறது. இதேபோல, 45-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் தீபக் மிஸ்ரா, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி பதவி ஓய்வு பெறும்போதும் மரபுகள் மீறப்படாமல் பணி மூப்பு அடிப்படையில் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்திருக்கிறது. கே.எம். ஜோசப் பிரச்னையில் மத்திய அரசு நடந்து கொண்டவிதம் அரசுக்கு கெளரவம் சேர்ப்பதாக இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com