எல்லோருக்கும் நல்லவர்!

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவில் இந்தியா தவப்புதல்வர் ஒருவரை, வரலாற்று நாயகர் ஒருவரை இழந்துவிட்டிருக்கிறது.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவில் இந்தியா தவப்புதல்வர் ஒருவரை, வரலாற்று நாயகர் ஒருவரை இழந்துவிட்டிருக்கிறது. அகவை 93-இல் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து அவர் மறைந்திருக்கிறார். 
அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். இவர் வருங்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று பண்டித ஜவாஹர்லால் நேருவே கூறியிருந்தார் எனும்போது, இளைஞராக இருக்கும்போது அவர் எந்த அளவுக்குத் துடிப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் உணர முடிகிறது.
வாஜ்பாயின் மிகப்பெரிய பலங்கள் இரண்டு. முதலாவது, அவரது அபாரமான பேச்சாற்றல், அவர் சரளமாக இந்தியில் பேசத் தொடங்கினால், எப்படிப்பட்ட கூட்டமாக இருந்தாலும் மகுடியில் கட்டுண்ட பாம்பாக அடங்கிக் கிடக்கும். நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுகிறார் என்றால், அவரது உரையைக் கேட்பதற்காகவே கொறடா இல்லாமலேயே உறுப்பினர்கள் அவைக்கு வந்திருப்பார்கள். அடல்ஜி பேசுவதைத் தொடர்ந்து கேட்டால், நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலோ, ஜனசங்கம் கட்சியிலோ சேர்ந்துவிடுவேனோ என்று பயப்படுகிறேன்' என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே ஒருமுறை கூறுமளவுக்கு அவரது பேச்சாற்றல் வலிமையானது.
வாஜ்பாயின் இரண்டாவது பலம், அனைவரையும் தனது நட்பு வட்டத்துக்குள் இழுத்து அரவணைத்துக் கொள்ளும் அவரது பண்பு. அதனால்தான் தன்னுடன் கொள்கையால் முற்றிலும் மாறுபட்ட இடதுசாரித் தலைவர்களிடமும், காங்கிரஸ் கட்சியினரிடமும் ஏன், இந்தி எதிர்ப்பாளர்களும், இறை மறுப்பாளர்களுமான திமுகவினரிடமும்கூட அவரால் நட்புப் பாராட்டவும், நெருங்கிப் பழகவும் முடிந்தது. அவரது இந்த பலம்தான், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் கூட்டணியை அமைத்து கொண்டு இந்தியப் பிரதமராகத் தொடர முடிந்ததன் ரகசியம்.
1996-இல் ஆட்சியமைக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தும்கூடப் பெரும்பான்மை பலம் ஏற்படுத்த முடியாதபோது, 13-ஆவது நாள் மிகவும் கண்ணியமாக மக்களவையைக் கூட்டி, தனிப்பெருங்கட்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும்கூட தனிப்பெரும்பான்மை பெற முடியாததை சுட்டிக்காட்டி அவர் பதவி விலகியபோது, பாரத தேசமே அவரை அண்ணாந்து பார்த்தது. அதேபோல, 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி ஒரே ஒரு வாக்கில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தபோதும், கொஞ்சமும் பதற்றமே படாமல் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தபோது, அடல்ஜியின் ஜனநாயகப் பண்பையும், சற்றும் கலங்காத நெஞ்சுறுதியையும் பார்த்து உலகமே வியந்தது.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1998-இல் ஆட்சியில் அமர்ந்தபோது, இப்படியொரு கூட்டணியால் செயல்பட முடியுமா என்று ஐயம் எழுப்பினார்கள் பலர். ஆனால், கூட்டணி அரசாக இருந்தும்கூட, சர்வதேச அளவிலான எதிர்வினைகள் வரும் என்று தெரிந்தும்கூடத் துணிந்து இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய பெருமை அன்றைய பிரதமர் வாஜ்பாயையேச் சாரும். அமெரிக்காவே எதிர்பார்க்காத, சந்தேகப்படாத அளவில் பொக்ரான் அணு ஆயுத சோதனை நடந்தபோதும் சரி, உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தியபோதும் சரி, அடல்ஜியின் அரசியல் சாதுர்யமும், நெஞ்சுரமும் இன்றளவும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
அடல் பிகாரி வாஜ்பாயின் ஆறு ஆண்டுகால ஆட்சி உண்மையிலேயே ஒரு பொற்கால ஆட்சி என்றுதான் கூற வேண்டும். இன்றுவரை நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் வாஜ்பாயை நினைவுகூரத் தவறுவதில்லை. உள்நாட்டுக் கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துவதில் வாஜ்பாய் அரசின் சாதனை அளப்பரியது. தங்க நாற்கரச் சாலைகள், தகவல் தொலைத்தொடர்பில் மிகப்பெரிய எழுச்சி, தில்லி மெட்ரோவை செயல்பட வைத்ததன் மூலம் இந்தியா முழுவதும் மெட்ரோ ரயிலுக்கு வழிகோலியது, அனைவருக்கும் கல்வி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது, சர்வதேசப் பொருளாதார வீழ்ச்சிக்கு நடுவிலும் இந்தியப் பொருளாதாரத்துக்கு பாதிப்பே இல்லாமல் இட்டுச் சென்றது என்று அவரது அரசு நிகழ்த்திய சாதனைகளைப் பட்டியலிட்டால் புத்தகம்தான் போட வேண்டும்.
வெளிவிவகாரக் கொள்கைக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்திய பெருமையும் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்கு உண்டு. வாஜ்பாய் ஆட்சி தொடர்ந்திருந்தால் இலங்கையில் ஈழத்தமிழர் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிந்திருக்காது. லாகூருக்கு பஸ் போக்குவரத்தை ஏற்படுத்தியதும், பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வீஸ் முசாரஃபை ஆக்ராவுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியதும், இந்திய - பாகிஸ்தான் உறவில் புதியதொரு அத்தியாயத்தையே ஏற்படுத்தியது.
அவரது ஆட்சியில் குஜராத் இனப்படுகொலை நடந்தது என்கிற ஒரேயொரு அசம்பாவிதம் தவிர, அவரது ஆறு ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அடைந்த வளர்ச்சியும், வெற்றியும், பெருமைகளும் ஏராளம், ஏராளம். இத்தனைக்கும் 23 கட்சிக் கூட்டணியை பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் அவர் தலைமை தாங்கி நடத்திய நிலையிலும், அவரால் அபார சாதனையை செய்து காட்ட முடிந்திருக்கிறது என்பதுதான் வியப்பு.
மூன்று முறை பிரதமராக இருந்தவர், காங்கிரஸ் அல்லாத மத்திய அரசைத் தலைமை தாங்கிப் பதவி காலத்தை நிறைவு செய்த முதல் பிரதமர் தனது 93-ஆவது வயதில் மறைந்துவிட்டிருக்கிறார். அவரது பிறப்பு சாதாரணமானது. ஆனால் வாழ்க்கை மகத்தானது. சுதந்திர இந்திய சரித்திரத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு, அனைவராலும் ஒருசேர நேசிக்கப்பட்ட மாமனிதர் அடல் பிகாரி வாஜ்பாயாகத்தான் இருப்பார். தினமணி' அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com