இயற்கையின் சீற்றம்!

கேரளம் ஏறத்தாழ ஒரு

கேரளம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு இதேபோல 1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெரியாறு வெள்ளப்பெருக்கால் கரைபுரண்டு ஓடியதற்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு மிகவும் மோசமான பெருமழையால் கேரளம் பாதிக்கப்பட்டிருக்கிறது. 
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை வழக்கத்தை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாக பொழிந்து தள்ளியிருக்கிறது. கேரளாவிலுள்ள 44 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பி வழிகின்றன. கேரளாவிலுள்ள 14 மாவட்டங்களிலும் அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கின்றன.
இந்த ஆண்டும் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய போது முதலில் வழக்கம்போல மழை தொடங்கிவிட்டது என்றும் வழக்கத்தை விட சற்று அதிகமான மழை பொழிகிறது என்றும் நினைத்தார்களே தவிர இப்படி வெறித்தனமாக மழை பொழியப்போகிறது என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது மட்டுமல்லாமல் பம்பாவும் சேர்ந்துகொள்ள தெற்கு, மத்திய கேரள மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டிருக்கின்றன.
கடந்த ஜூலை 29-லிருந்து வெள்ளத்தில் சிக்கி மடிந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 324. 70,000 அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 3,14 லட்சத்திற்கும் அதிகமானோர் 2,100 நிவாரண முகாம்களில் அடைக்கலம் பெறப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே மீட்புப் படைக்களுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் மீட்புப் படைகளை எதிர்பார்த்து வெவ்வேறு இடங்களில் வீட்டுக்கூரையின் மீதும் மரங்களின் மீதும் காத்துக் கிடக்கும் அவலம் தொடர்கிறது. மழை இன்னும் முழுமையாக விட்டபாடில்லை.
இதுவரை ராணுவத்தின் 18 குழுக்களும், கடற்படையின் 46 அணியினரும், விமானப் படையின் 13 பிரிவினரும், கடலோரப் பாதுகாப்புப் படையின் 18 அணியினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 21 பிரிவினரும் நிவாரணப் பணிகளுக்கு முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள். இந்திய விமானப் படையின் 18 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. மேலும் சில ஹெலிகாப்டர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீட்புப் பணிக்காக வரவழைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 
தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 79 படகுகளும், கடலோரக் காவல் படையின் 403 படகுகளும் ஆங்காங்கே சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை மீட்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. மீனவர்களும் ஆங்காங்கே தங்களது நூற்றுக்கணக்கான படகுகளுடன் மீட்புப் பணிக்கு உதவி வருகின்றனர். 40,000-க்கும் அதிகமான மாநில காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டும்கூட அடுத்த ஒரு வாரத்துக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தோன்றவில்லை. காரணம், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும்கூட மழை நின்றபாடில்லை.
கொச்சி சர்வதேச விமான நிலையம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி செயல்பட முடியாத நிலை காணப்படுகிறது. நிலைமையை நேரில் பார்ப்பதற்கு வந்த பிரதமரும் அதிகாரிகளும் கடற்படைத் தளத்திலுள்ள பழைய விமான நிலையத்தில்தான் வந்திறங்கி ஹெலிகாப்டரில் பார்வையிடச் சென்றிருக்கிறார்கள் என்றால் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், நாகாலாந்து, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிகமாகப் பொழிந்திருப்பதால் சுமார் ஆயிரம் உயிர்களுக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இப்போது கேரளமும் தனது பங்கிற்கு தென்மேற்குப் பருவமழைக்குப் பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறது. 
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நிதியுதவியும் பொருளுதவியும் ஒருபுறம் வந்து குவிந்து கொண்டிருந்தாலும் கேரளத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்பைப் பார்க்கும் போது அவை கடலில் கரைத்த பெருங்காயமாகத்தான் தோற்றமளிக்கின்றன. கேரள முதல்வர் கூறியிருப்பதைப் போல குறைந்தது ரூ.12,000 கோடி நிதியுதவி தேவைப்படும்போது, மத்திய அரசு வெறும் 680 கோடி மட்டுமே அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக கேரள வெள்ளபாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்து, போதுமான நிதியுதவியை வழங்கி உதவிக் கரம் நீட்ட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
இப்படியொரு சீற்றம் ஏற்பட்டிருப்பதற்கு இயற்கையின் மீது மட்டுமே பழி சுமத்தித் தப்பித்துவிட முடியாது. ஏறத்தாழ 9 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதிகள் கடந்த 40 ஆண்டுகளில் ரப்பர் தோட்டங்களாகவும், விடுதிகளாகவும் மாறியிருக்கின்றன. மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இடுக்கி மாவட்டத்தில்தான் இதுபோல வன ஆக்கிரமிப்புகள் அதிகமாக நடந்திருக்கின்றன. 
இயற்கையின் மீது மனிதன் தாக்குதல் நடத்தும்போது ஏதாவது ஒரு கட்டத்தில் இயற்கையும் தன்னுடைய ஆத்திரத்தையும் கோபத்தையும் மனிதன் மீது திருப்பி காட்ட முற்படுவது வியப்பை ஏற்படுத்தவில்லை. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதன் கண்கூடான நிகழ்வுதான் கேரளத்தை தாக்கியிருக்கும் அடை மழையும் வெள்ளப்பெருக்கும். 
இயற்கையைச் சீண்டிப் பார்த்தால் ஏற்படும் விளைவு என்ன என்பதை இந்தியாவின் ஏனைய மாநிலங்கள்இதிலிருந்து புரிந்துகொண்டால் நலம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com