சரிகிறதே ரூபாய்!

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகர்கிறதோ இல்லையோ, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகர்கிறதோ இல்லையோ, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது. ஆசிய நாணயங்களில் டாலருக்கு நிகரான மிகவும் மோசமான மதிப்பு வீழ்ச்சியை இந்தியாதான் எதிர்கொள்கிறது. டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 70 ரூபாயைத் தொட்டும்கூட, இந்திய அரசு இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து முழுமையாக இன்னும் உணரவில்லை என்று தோன்றுகிறது.
ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் இந்திய ரூபாயின் மதிப்பு 2.1% குறைந்திருக்கிறது. அதே நேரத்தில், ஏனைய ஆசிய நாணயங்களின் டாலருக்கு எதிரான மதிப்பு வீழ்ச்சி சராசரியாக 0.7% தான் என்பதை நாம் உணர வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும், அது நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் என்றும் கருதுவதும் எதிர்பார்ப்பாக இருக்க முடியுமே தவிர, நடைமுறை சாத்தியமானதல்ல. 
இந்தப் பிரச்னைக்குக் காரணம், சர்வதேசப் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் சந்தைகள்' என்று சில நாடுகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. 
அந்தப் பட்டியலிலுள்ள ஏதாவது ஒரு நாட்டில் பொருளாதாரப் பிரச்னை ஏற்படும்போது, முதலீட்டாளர்கள் அந்தப் பட்டியலிலுள்ள அத்தனை நாடுகளையும் பிரச்னைக்குரிய நாடுகள் என்று கருதி அவர்களது முதலீடுகளை எடுத்துச் சென்று விடுகின்றனர். அந்தப் பட்டியலிலுள்ள துருக்கி அப்படியொரு பிரச்னையில் சிக்கிக் கொண்டிருப்பதுதான் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கும் காரணம். துருக்கியும் இந்தியாவும் மட்டுமல்ல, 36 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 
கடந்த மே 2014-இல் இருந்து டிசம்பர் 2017 வரை இந்தியாவின் டாலருக்கு நிகரான நாணய மாற்று 14.5% அதிகரித்தது என்றால், அதற்குப் பிறகு ஜூலை 2018 வரை அதன் மதிப்பு 6.1% குறைந்திருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், இது மேலும் குறையக்கூடும் என்றுதான் தோன்றுகிறது. இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2016-17-இல் 15.3 பில்லியன் டாலராக (சுமார் ரூ.1.05 லட்சம் கோடி) இருந்தது. 2017-18-இல் 48.7 பில்லயன் டாலராக (சுமார் ரூ.3.3 லட்சம் கோடி)அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இதுவே 75 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.5.17 லட்சம் கோடி) அதிகமாக உயரக்கூடும். இந்த நிலையில், கணிசமான அளவு ஏற்றுமதி அதிகரித்தாலொழிய இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையேயான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்டிவிட முடியாது.
நமது ஏற்றுமதியை விட இறக்குமதியின் அளவு 160 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 லட்சம் கோடி)அதிகம். இந்த ஆண்டு 190 பில்லியன் டாலராக (சுமார் ரூ.13.1 லட்சம் கோடி)இடைவெளி அதிகரிக்கக்கூடும். நாணய மதிப்பு குறைவு, ஏற்றுமதியின் மதிப்பை அதிகரித்து, இறக்குமதியின் மதிப்பைக் குறைத்து விடுகிறது. உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் காணப்படுவதால் பெரிய அளவிலான ஏற்றுமதிக்கும் வாய்ப்பில்லை. 
இந்தியாவின் இறக்குமதியில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கச்சா எண்ணெய். இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் பின்னடைவைச் சந்தித்தால் மட்டும்தான் நமது கச்சா எண்ணெயின் தேவை குறையும். பொருளாதாரம் அப்படியொரு பின்னடைவைச் சந்தித்தால் அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். அதனால், கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தவிர்க்க முடியாது. இறக்குமதிகளைக் குறைத்து இந்தியாவிலேயே உற்பத்தியைப் பெருக்குவது என்பது நினைத்த மாத்திரத்தில் நடந்துவிடக் கூடியதல்ல. ஆகவே, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியைக் குறைப்பது என்பதோ, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதன் மூலம் எதிர்கொள்வது என்பதோ நடைமுறை சாத்தியமல்ல.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கியது முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்களில் பலர் இந்தியாவில் செய்திருந்த முதலீடுகளை திரும்பப் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். புதிய முதலீடுகள் வருவது மிகவும் குறைந்துவிட்டது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவிலிருந்து 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.62,100 கோடி) வெளியேறியிருக்கிறது. இது மேலும், அதிகரிக்குமே தவிரக் குறையாது. 
இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி தன் வசமிருக்கும் டாலர் கையிருப்பை விற்று ரூபாயின் மதிப்பைத் தக்கவைக்க முயல்கிறது. அப்படிச் செய்யாவிட்டால், ரூபாயின் மதிப்பை மேலும் குறைய அனுமதித்து, பொருளாதாரத்தையே முடக்க நேரிடும். ரிசர்வ் வங்கி டாலரை விற்க விற்க, புழக்கத்தில் இருக்கும் பணம் குறைந்து பணத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. 
ஒரு பிரச்னையை எதிர்கொள்வதற்கு முதலில் பிரச்னை உருவாகிறது என்பதையும், மிகவும் கடுமையான பொருளாதாரப் பிரச்னையை எதிர்கொள்கிறோம் என்பதையும் நாம் உணர வேண்டும். இவ்வளவு பிரச்னைகளை இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்கிறது என்பதை அரசும், பொருளாதார நிபுணர்களும் எந்த அளவுக்குத் தீவிரமாக உணர்ந்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. 
நாணயத்தின் மதிப்பு சரியும்போது, அதை உடனடியாக அணை போட்டுத் தடுத்துவிட முடியாது. அப்படியானால், இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. இந்திய அரசு உடனடியாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலீட்டுப் பத்திரம் ஒன்றை அறிவித்து, இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் அதில் முதலீடு செய்ய பிரதமர் வேண்டுகோள் விடுப்பதன் மூலம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமன் செய்ய முடியும். 
இன்னும் ஏன் இது குறித்து நிதி அமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் யோசிக்கவில்லை?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com