இப்போது கேரளம், அடுத்தது...?

கேரளத்தில் ஒருவழியாக அடைமழை ஓய்ந்து பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனித்துக் கொண்டிருக்கின்றன

கேரளத்தில் ஒருவழியாக அடைமழை ஓய்ந்து பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனித்துக் கொண்டிருக்கின்றன. பேரிடர் பெருமளவில் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், மீட்புப் பணியும் நிவாரணப்பணியும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மிக அதிகமான அடைமழைதான் இந்தப் பேரிடருக்கு முதல் காரணம் என்றாலும் கூட, திட்டமிடப்படாத வளர்ச்சி, குறிப்பாக, அதிகரித்துவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், சுரங்கப் பணிகளும், வன அழிப்பும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளும்தான் மரணங்களுக்கும் அழிவுக்கும் மிக முக்கியமான காரணங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
 சமீப காலமாக கேரளத்தில் ஏற்பட்டிருக்கும் அதிவேகமான மனைவணிக வளர்ச்சி, அந்த மாநிலத்தின் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், நதியோரப் பகுதிகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது. விவசாயம், பொருளாதார ரீதியாக லாபகரமாக இல்லை என்பதால், விளைநிலங்கள் மனைவணிகத்துக்கு விலை போவதும், அங்கெல்லாம் குடியிருப்புகள் எழுவதும் வழக்கமாகிவிட்டது. இதனால், மழை வெள்ளம் நிலத்தடி நீராக மாறுவதற்கு வழியில்லாமல் போய்விட்டது. முறையான நீர் மேலாண்மை இருந்திருந்தால் பாதிப்பு இந்தளவுக்கு ஏற்பட்டிருக்காது.
 ஒவ்வொரு குடும்பமும் தனது வீட்டைச் சீர் செய்யவும், வீட்டு உபயோகப் பொருள்களைப் புதிதாக வாங்கவும் குறைந்தது 5 லட்சம் ரூபாயாவது செலவழிக்க நேரிடும். என்னதான் நிவாரணம் வழங்கப்பட்டாலும், கேரளம் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாவது ஆகும்.
 தண்ணீரை சேகரித்து வைப்பதில் காட்டப்படும் அதிக ஆர்வம், முறையாக நதிநீரை ஓடவிடுவதிலும் காட்டப்பட வேண்டும். அதனால்தான் உலகிலுள்ள பல நாடுகள் இனி அணைகள் கட்டுவதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றன. அமெரிக்காவில் சில அணைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. நீர் மேலாண்மை குறித்த சிந்தனையில் இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 ஐரோப்பாவில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வின்படி, உலகளாவிய அளவில் 1980-இல் இருந்து வெள்ளப் பெருக்கும், வெள்ளம் தொடர்பான பாதிப்பும் 25% அதிகரித்திருக்கிறது. 2014 முதல் அதுவே இரட்டிப்பாகி இருக்கிறது. அதிகரித்த தட்ப வெப்ப நிலை, வறட்சி, காட்டுத் தீ உள்ளிட்டவை 1980 முதல் அவற்றை இரட்டிப்பாக்கி இருக்கின்றன. புயல் உள்ளிட்ட பாதிப்புகளும் இரட்டிப்பாகி உள்ளன. இந்த உலகளாவிய பாதிப்பு இந்தியாவையும் பாதித்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.
 இந்தியாவைப் பொருத்தவரை வெள்ளச் சேதங்கள், அதனால் ஏற்படும் மரணங்கள், அழிவுகள், தொடரும் நோய்த் தொற்றுகள் இவையெல்லாம் வருடாந்திர நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன. 1953 முதல் 2017 வரையிலான 64 ஆண்டுகளில் வெள்ளப் பெருக்கால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலப்பரப்பு 46 கோடி ஹெக்டேருக்கும் அதிகம். கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 கோடிக்கும் மேல். ரூ.1.09 லட்சம் கோடி மதிப்புள்ள பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. ரூ.53,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 80 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. 60 லட்சத்துக்கும் அதிகமான ஆடு, மாடு போன்ற வளர்ப்புப் பிராணிகள் பலியாகியிருக்கின்றன.
 கடந்த 60 ஆண்டுகளில் 1.07 லட்சத்துக்கும் அதிகமான உயிர்கள் வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றால், பொதுச் சொத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகம். ஆண்டுதோறும் சராசரியாக 30 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். 70 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் நாசமாகின்றன. வெள்ளத்தால் ஆண்டுதோறும் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
 2005-இல் மும்பை; 2007-இல் உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார்; 2008-இல் கோசி பிகார்; 2009-இல் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்; 2010-இல் லடாக்; 2011-இல் உத்தரப் பிரதேசம், பிகார், ஒடிஸா; 2012-இல் அஸ்ஸாம்; 2013-இல் உத்தரகண்ட்; 2014-இல் ஜம்மு - காஷ்மீர்; 2015-இல் சென்னை; 2017-இல் குஜராத்; இப்போது 2018-இல் கேரளம் என்று அடைமழையால் ஏற்படும் பெருவெள்ளத்தால் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதி பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. மாநிலங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், பேரிடர் ஒரே மாதிரியாகத்தான் காணப்படுகிறது. ஒவ்வொரு பேரிடர் முடிந்தபோதும் எச்சரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததும், ஆக்கிரமிப்புகள் குறித்தும், நிலப் பயன்பாடு குறித்த விதிமுறைகேடுகளும், ஆத்திரமும் கோபமும் கொந்தளிப்புமாக வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால், அதற்குப் பிறகு அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள், பேரிடர் ஆய்வுக் குழுக்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாததைத்தான் ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டுகின்றன.
 2011-இல் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கம் ஆகியவை குறித்து ஆய்வு செய்த மாதவ் காட்கில் குழு ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் நிராகரித்தன. இப்போது பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பகுதிகள் அனைத்துமே காட்கில் குழுவால் பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டவை என்பதையும், அந்தப் பகுதிகளிலிருந்து அனைத்துத் தோட்டங்களும், சுற்றுலா விடுதிகளும் அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை. இப்படியொரு பேரிடர் ஏற்படும் என்று காட்கில் குழு முன்கூட்டியே எச்சரித்திருந்தது.
 கடந்த 60 ஆண்டுகளாக பாதிப்புகள் தொடர்ந்தாலும் அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்த ஆண்டு கேரளம். அடுத்த ஆண்டு ....?
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com