இணைய வணிகக் கொள்கை!

இணைய வணிகம் லட்சக்கணக்கான இந்தியர்கள் பொருள்களை வாங்கக் கடைத் தெருவுக்குப் போகும் வழக்கத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது. உற்பத்தியாளர்களும், வணிகர்களும் தங்களது

இணைய வணிகம் லட்சக்கணக்கான இந்தியர்கள் பொருள்களை வாங்கக் கடைத் தெருவுக்குப் போகும் வழக்கத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது. உற்பத்தியாளர்களும், வணிகர்களும் தங்களது விற்பனை உத்திகளை மாற்றி அமைக்கும் கட்டாயத்தையும் உருவாக்கி இருக்கிறது. அதிகமான அளவில் இணைய வணிக நிறுவனங்கள் இன்னும் களம் இறங்கிவிடவில்லை என்றாலும் கூட, உற்பத்தியார்கள் தனிப்பட்ட முறையில் இணைய விற்பனையை ஊக்குவிப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். ஆனாலும் கூட, இணைய வணிகம் குறித்த முறையான கொள்கை முடிவு எதுவும் அரசால் இதுவரை எடுக்கப்படவில்லை.
 இப்போது மத்திய அரசு இணைய வணிகத்தைக் கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் சில விதிமுறைகளை உருவாக்க எத்தனித்திருக்கிறது. மத்திய வணிக அமைச்சகம் தேசிய இணைய வணிகக் கொள்கையின் மாதிரி ஒன்றை தயாரித்திருக்கிறது. அந்த மாதிரிக் கொள்கை, மத்திய வணிக அமைச்சர் சுரேஷ் பிரபுவின் தலைமையிலான 70 பேர் கொண்ட குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில் தொழில்துறை, விமானத்துறை ஆகியவற்றின் அமைச்சர்களும் கூட இடம்பெறுகிறார்கள். இதன் மூலம் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்துவதுதான் வணிக அமைச்சகத்தின் நோக்கம்.
 இந்தியாவைப் பொருத்தவரை இப்போதும் கூட நேரடி வணிகம்தான் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமான சிறு வணிகர்களும், 3 கோடிக்கும் அதிகமான சிறு-குறு தொழிற்சாலைகளும் இருக்கின்றன. இவை ஏற்கெனவே இணைய வணிகத்தால் சிறு அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறைந்த விலையில் சீன இறக்குமதிகளுடன் "வால்மார்ட்' உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இணைய வணிகத்தின் மூலம் இந்தியாவுக்குள் நுழையும் போது, அதனால் இவர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும். இதையும் கருத்தில் கொண்டுதான் மத்திய வணிக அமைச்சகம் தனது புதிய தேசிய இணைய வணிகக் கொள்கையை அறிமுகப்படுத்த இருக்கிறது.
 இன்றைய நிலையில் இந்தியாவின் இணைய வணிகம் சுமார் 25 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.75 லட்சம் கோடி) ஆனால், வரக்கூடிய காலங்களில் இணைய வணிகம் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணக்கூடும் என்பதை வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய முற்பட்டிருப்பதிலிருந்து உணர முடிகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் இணைய வணிகம் 200 பில்லியன் டாலரை (சுமார் ரூ.14 லட்சம் கோடி) எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 அறிதிறன் பேசிகளும், மிகக்குறைந்த விலையில் இணைய சேவையும் குக்கிராமங்கள் வரை சென்றடையும் நிலையில், இணைய வணிகம் பெரும் வரவேற்பைப் பெறக்கூடும். மேலும், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதும், அவர்கள் சுலபமாக வீட்டில் இருந்தபடியே பொருள்களைப் பெற விரும்புவதும் இணைய வணிகத்தின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும்.
 மத்திய வணிக அமைச்சகத்தின் தேசிய இணைய வணிகக் கொள்கையின்படி, ஒட்டுமொத்த இணைய வணிக சேவையைக் கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் தேசிய ஒழுங்காற்று ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட இருக்கிறார். இது எந்த அளவுக்குப் போதுமானதாக இருக்கும் என்கிற கேள்வியை எழுப்புகிறது. இணைய வணிகத்தின் அசுர வளர்ச்சியைக் கண்காணிக்கவும் ஒழுங்காற்றவும் அதன் வெவ்வேறு துறைரீதியான வணிகம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இப்போதிருக்கும் சட்டங்களிலும் விதிமுறைகளிலும் பல மாற்றங்களும் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 2017-18-இன் முதல் எட்டு மாதங்களில் மட்டும் இணைய வணிகம் குறித்து மத்திய நுகர்வோர் நல அமைச்சகத்துக்கு 50,000-க்கும் அதிகமான புகார்கள் வாடிக்கையாளர்களால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சிறு வணிகர்களும் நேரடி வணிகர்களும், இணைய வணிகத்தில் மிகக் குறைந்த விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் பாதிக்கப்படுவது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். இணைய வணிகத்தின் வளர்ச்சியால் பாரம்பரியமாக நடந்து கொண்டிருக்கும் வியாபார நிறுவனங்களும் கடைகளும் பாதிக்கப்படுவது நியாயமானதாக இருக்காது.
 அதே நேரத்தில், உருவாக்கப்பட்டிருக்கும் மாதிரிக் கொள்கையில் எந்த அளவுக்கு விலைக் குறைப்பு செய்யலாம் என்பதும், பாரம்பரிய வணிகர்களின் நலனைப் பேணுவதற்காக இணைய வணிகத்துக்கு சில கட்டுப்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. வால்மார்ட் உள்ளிட்ட பெரிய இணைய வணிக நிறுவனங்கள் விலைக் குறைப்பின் மூலம் பாரம்பரிய நிறுவனங்களை ஒரேயடியாக அழித்துவிடக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம்.
 அதே நேரத்தில் யார் எந்த அளவுக்கு விலையில் தள்ளுபடி வழங்கலாம், எவ்வளவு காலத்துக்கு வழங்கலாம் என்பது உள்ளிட்ட முடிவுகளில் அரசு தலையிடுவது என்பது சந்தைப் பொருளாதார சூழலில் ஏற்புடையதாக இருக்காது.
 இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையைப் போலவே இணைய வணிகக் கொள்கையிலும் உள்நாட்டு உற்பத்திகளுக்கு முன்னுரிமையும், இந்திய முதலீட்டாளர் ஒருவர் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருப்பதும் வற்புறுத்தப்படுகிறது. இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமாக இருக்கும் என்பது தெரியவில்லை. மத்திய வணிக அமைச்சகம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் "மாதிரி இணைய வணிகக் கொள்கை' முழுமையானதாக இல்லாவிட்டாலும் முதலடி எடுத்து வைக்கப்படிருக்கிறது. சுரேஷ் பிரபு தலைமையிலான குழு இதில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி, இந்திய இணைய வணிகம் பாரம்பரிய வணிகத்தை பாதித்துவிடாமல் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைய உதவுமானால், அது நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com