இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இன்னும்கூட வளர்ச்சி அடையும் நாடுகளில் விற்கப்படுகின்றன.

மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இன்னும்கூட வளர்ச்சி அடையும் நாடுகளில் விற்கப்படுகின்றன. மேலை நாடுகளில் குறைந்த விலையில் விற்கப்படும் உயிர்காக்கும் மருந்துகள் பலவும் காப்புரிமையைக் காரணம் காட்டி வளர்ச்சி அடையும் நாடுகளில் பல மடங்கு அதிக விலைக்கு நோயாளிக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், சாமானியர்களுக்கு முறையான சிகிச்சை என்பது எட்டாக்கனியாகி விட்டிருக்கிறது.
 ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குத் தொடர்ந்து ஆளாகி வருகிறது. இந்த நிறுவனத்தின் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரில் ஆஸ்பஸ்டாஸ் கலந்து விட்டதால் புற்று நோய் ஏற்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டது. ஏறத்தாழ 9,000-க்கும் அதிகமான வழக்குகள் அமெரிக்காவில் ஜான்சன்அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் இதுகுறித்து நிலுவையில் உள்ளன. ஆனால், இந்தியாவில் அந்த நிறுவனம் இப்போதும்கூட தனது குழந்தைகளுக்கான டால்கம் பவுடரை எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் விற்பனை செய்து கொண்டிருக்கிறது.
 இப்போது இன்னொரு வழக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும், தொழில் நாணயத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இடுப்பு மூட்டுக்கான செயற்கை மாற்று சிகிச்சைக்கு உலோகத்தாலான இடுப்பு மூட்டை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் எலும்பு சிகிச்சைப் பிரிவு விற்பனை செய்து வந்தது. இதை சுருக்கமாக ஏஎஸ்ஆர் மூட்டு மாற்று சிகிச்சை என்று அழைப்பார்கள். இந்த செயற்கை உலோக இடுப்பு மூட்டு சிகிச்சையால் நோயாளிகளுக்கு கடுமையான வலியும் வீக்கமும் ஏற்படுவது கண்டறியப்பட்டது. 2010-இல் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது செயற்கை இடுப்பு மூட்டு மாற்றை சந்தையிலிருந்து திரும்பப் பெற்றது.
 அமெரிக்காவிலுள்ள நுகர்வோர் தன்னார்வ நிறுவனம் ஒன்று பல்வேறு நோயாளிகளுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் செயற்கை மூட்டு மாற்று சிகிச்சையின் விளைவால் பாதிப்புகள் ஏற்படுவதை ஆய்வு செய்து அறிந்தது. அதன் விளைவாக, பல வழக்குகள் அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டன. நோயாளிகளுக்கு 4.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.30,701 கோடி) இழப்பீடாக வழங்க அந்த நிறுவனம் முன் வந்தது. இப்போதும் கூட 11,000 வழக்குகள் அந்த நிறுவனத்தின் உலோக செயற்கை இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களால் பல்வேறு அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரணையில் இருக்கின்றன.
 இந்த பின்னணியில்தான் மும்பையிலுள்ள 45 வயது மருந்து விற்பனைப் பிரதிநிதி விஜய் ஹோஜ்காலா என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் செயற்கை இடுப்பு மூட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், உலகத்திலேயே ஜான்சன் அண்ட் ஜான்சன் ஏஎஸ்ஆர் உலோக இடுப்பு மூட்டுதான் செயற்கை மாற்று சிகிச்சைக்குச் சிறந்தது என்று பரிந்துரைத்ததால் அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
 அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு பிரச்னைகள் எழத்தொடங்கின. தாங்க முடியாத வேதனை. அவருடைய பற்கள் ஒவ்வொன்றாக விழத் தொடங்கின. வலது காது கேட்காமல் போனது. மருத்துவ விற்பனை பிரதிநிதியான அவர் 15-க்கும் மேற்பட்ட எலும்பு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றும் அவர்களில் ஒருவர்கூட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது ஏஎஸ்ஆர் இடுப்பு செயற்கை மூட்டை திரும்பப் பெற்றது குறித்து அவரிடம் தெரிவிக்கவில்லை.
 ஏஎஸ்ஆர் உலோக மூட்டை விற்பனை செய்வதை அந்த நிறுவனம் நிறுத்தியது. இதற்குள் 4,700-க்கும் அதிகமானோர் அந்த பிரச்னையை ஏற்படுத்தும் செயற்கை மூட்டு மாற்று சிகிச்சையை இந்தியாவில் மேற்கொண்டிருந்தனர். அவர்களில் 1,080 பேரைத்தான் இதுவரையில் அடையாளம் காண முடிந்திருக்கிறது. அவர்களிலும் 275 பேர் மட்டுமே மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 3,600-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 2017-இல் விஜய் ஹோஜ்காலா உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளின் புகார்களைத் தொடர்ந்து ஏஎஸ்ஆர் உலோக மூட்டின் பின் விளைவுகள் குறித்த தகவல்களை மறைத்ததற்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்த விசாரணைக் குழு ஏஎஸ்ஆர் செயற்கை இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரூ.20 லட்சம் இழப்பீட்டை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. வேடிக்கை என்னவென்றால், கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் இதே ஏஎஸ்ஆர் சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஆறு நோயாளிகளுக்கு 247 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17.23 லட்சம் கோடி) ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தால் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது.
 பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு இந்திய நோயாளிகள் குறித்த அக்கறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்திய அரசுக்கு, சர்வதேச அளவில் எந்த மருந்தெல்லாம் தடை செய்யப்பட்டிருக்கின்றன, எதனால் எல்லாம் பாதிப்பு எற்படுகிறது என்பது குறித்து இந்திய நோயாளிகளுக்கு தெரிவிப்பதும், அவர்களுக்கு மேலை நாடுகளில் கிடைப்பது போன்ற இழப்பீடு கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் கடமை அல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com