தீர்ப்பல்ல, தீர்வு!

தில்லி உயர்நீதிமன்றம் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் அல்ல என்று தீர்ப்பளித்திருக்கிறது.

தில்லி உயர்நீதிமன்றம் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் அல்ல என்று தீர்ப்பளித்திருக்கிறது. நீதிபதிகள் கீதா மிட்டல், ஹரி சங்கர் ஆகியோரின் அமர்வு, பொதுநல வழக்கு ஒன்றில் இந்த மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மனிதாபிமானத்துக்கு எதிரான இந்தச் சட்டப் பிரிவு அகற்றப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டும்.
பம்பாய் பிச்சை எடுத்தல் தடுப்புச் சட்டம் - 1959'-இல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் 25 பிரிவுகள் மிகவும் கடுமையானவை. அதனடிப்படையில்தான் பல்வேறு மாநிலச் சட்டங்கள் பிச்சை எடுப்பதைக் கிரிமினல் குற்றமாக அறிவித்தன. 
நீதிபதிகள் கீதா மிட்டலும், ஹரி சங்கரும் தங்களது தீர்ப்பில் பிச்சை எடுப்பதை ஒரு வியாதி என்றோ, குற்றம் என்றோ ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். போதுமான சமூகப் பாதுகாப்பின் மூலம் அரசு தனது குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்காததன் விளைவால்தான் விளிம்பு நிலை மனிதர்கள் பிச்சை எடுக்கத் தூண்டப்படுகிறார்கள் என்று தங்களது தீர்ப்பில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள். பிச்சை எடுப்பதை கிரிமினல் குற்றமாக்குவதன் மூலம் அடித்தட்டு மக்களும் விளிம்பு நிலை மனிதர்களும் தங்களது அடிப்படைத் தேவைகளான உணவுக்கும் இருப்பிடத்துக்குமான உரிமையை இழக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். 
2015-இல் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, மத்திய சமூக நீதித்துறை இணைஅமைச்சர் விஜய் சம்பலா இந்தியாவில் 4.13 லட்சம் பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், அவர்களில் 2,187 பேர் தில்லியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், அதிகாரபூர்வமற்ற புள்ளிவிவரப்படி தலைநகர் தில்லியில் மட்டும் 60,000-க்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மும்பையில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான பேர் காணப்படுகின்றனர். இந்தியா முழுவதிலும் முறையான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால், பல லட்சம் பேர் இரந்து உயிர் வாழ்பவர்களாகக் காணப்படுவது திண்ணம். இந்தப் பின்னணியில்தான் தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை நாம் காண வேண்டும்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 40, 000 குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். ஏறத்தாழ 3 லட்சம் குழந்தைகள் போதை மருந்து தரப்பட்டு வலுக்கட்டாயமாக பிச்சைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 
இந்த நிலையில், பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் அல்ல என்று வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு பிச்சைக்காரர்களைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயலில் ஈடுபடும் கும்பல்களுக்கு வலு சேர்த்துவிடும் என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தச் சட்டம் இருப்பதால் குழந்தைகள் கடத்தப்படுவதும் அவர்கள் வலுக்கட்டாயமாக பிச்சைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் தடுக்கப்பட்டது என்று கருதுபவர்களும் உண்டு. இதுகுறித்து உயர்நீதிமன்றம் சிந்திக்காமல் இல்லை.
தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் அல்ல என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, பிச்சை எடுப்பதைத் தொழில் முறையில் செய்ய எத்தனிக்கும் சமூக விரோதக் கும்பல்களுக்கு எதிரான சட்டப் பிரிவுகளை அகற்றவில்லை. கட்டாயப்படுத்தப்பட்ட பிச்சைக்காரர்களுக்கும், உயிர்வாழ்வதற்காகப் பிச்சை எடுப்பவர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் நோக்கம்.
இதுவரை தில்லியில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்பதால், ஓரளவுக்குப் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. இனிமேல், வெளி மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பிச்சைக்காரர்கள் தில்லியில் குவிந்து விடுவார்களோ என்கிற அச்சத்தை சில ஊடகங்கள் ஏற்படுத்த முற்பட்டிருக்கின்றன. 
தில்லியைப் பொருத்தவரை ஏற்கெனவே இருக்கும் பிச்சைக்காரர் விடுதிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. வெளி மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடிவந்து வேறுவழியில்லாமல் பிச்சை எடுப்பவர்களுக்கு தங்க இடமோ, உணவோ அந்த விடுதிகளில் கிடைக்காததால், அவர்கள் தொழில் முறை பிச்சைக்காரர்களாக மாறிவிடுகிறார்கள். இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, தில்லி அரசு பிச்சைக்காரர்களுக்கான விடுதிகளையும், அவர்களுக்கு உணவு வழங்குவதையும் உறுதிப்படுத்துவதன் மூலம் தலைநகர் தில்லியில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இந்தியாவின் எல்லாப் பெரு நகரங்களுக்கும் கூட இந்தத் தீர்வு பொருந்தும்.
2016-இல் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, பிச்சைக்காரர்கள் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காண சட்டம் ஒன்றைக் கொண்டுவர முற்பட்டார். ஆதரவற்றவர் (பாதுகாப்பு, உதவி, மறுவாழ்வு) மாதிரி மசோதா' ஒன்றைத் தயாரித்தார். அந்த மசோதாவின்படி, பிச்சை எடுப்பதன் மீதான கிரிமினல் குற்றம் அகற்றப்படுவதுடன், தொழில் ரீதியாகப் பிச்சை எடுக்கும் கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வழிகோலப்பட்டிருந்தது. 
அந்த மசோதாவில் மாநில அரசுகள் போதுமான ஊழியர்களுடன் கூடிய பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்கான நிலையங்களை அமைக்கவும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும், தொழில் கற்றுக்கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. என்ன காரணத்தாலோ அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. 
அரசு செய்யத் தவறியதை தில்லி உயர்நீதிமன்றம் இப்போது செய்திருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு எல்லா மாநில அரசுகளும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com