கண்காணிக்கப்படுகிறோம்!

செல்லிடப்பேசியிலும் அறிதிறன்பேசியிலும் தங்களுக்குத் தேவையான நபர்களின் எண்களை, பயன்படுத்துபவர்கள் சேமித்து வைப்பது வழக்கம். வெளியே இருந்து எந்த ஒரு எண்ணையும்

செல்லிடப்பேசியிலும் அறிதிறன்பேசியிலும் தங்களுக்குத் தேவையான நபர்களின் எண்களை, பயன்படுத்துபவர்கள் சேமித்து வைப்பது வழக்கம். வெளியே இருந்து எந்த ஒரு எண்ணையும் முன் அனுமதியில்லாமல் இணைத்துவிட முடியாது. 
இந்தியாவிலுள்ள அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்') பயனாளிகளுக்கு திடீர் அதிர்ச்சி. அவர்களுடைய அறிதிறன்பேசியில் சேமித்துள்ள எண்களில் ஆதார் சேவையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உதவி எண் அவர்கள் கேட்காமலேயே இடம்பெற்றிருந்தது. 
பிரச்னை விவாதப் பொருளானவுடன் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அறிதிறன்பேசியை உருவாக்கிய கூகுள் நிறுவனம் தாங்கள்தான் அதற்குக் காரணம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. 
கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தன்மறைப்புநிலையை (பிரைவஸி') மீறி அவர்களது அறிதிறன்பேசிகளில் நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்டது. 2014-இல் சில முக்கியமான அவசர சேவைக்கான எண்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு எல்லா அறிதிறன்பேசிகளிலும் ஒரு புதிய முறையை இணைத்ததாகவும் தவறுதலாக இந்த எண்ணும் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. இது குறித்து தாங்களே விசாரணை நடத்தப்போவதாகவும் தெரிவித்தது. 
ஒவ்வொரு தனிநபரும் தொடர்பு எண்கள், கடவுச் சொற்கள் என்று அனைத்தையும் தன்னுடைய செல்லிடப்பேசி அல்லது அறிதிறன்பேசியில்தான் சேமித்து வைத்திருக்கிறார். பல்வேறு தகவல்களும் அதன் மூலம்தான் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, வங்கிக் கணக்கும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது தனிநபருடைய அறிதிறன்பேசியில் கூகுளால் நுழைய முடியும் என்றால், தன்மறைப்புநிலைக்கு ஏற்படும் பாதிப்பு எத்தகையது என்பதை நாம் உணரவேண்டும். 
ஆண்ட்ராய்ட்' தொழில்நுட்பத்தில் இயங்கும் அறிதிறன்பேசிகளிலும், ஆப்பிள்' நிறுவனத்தின் ஐ போன்'களிலும் தன்மறைப்புநிலைக்கான கட்டளையுடன் (கமாண்ட்) நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பது மறைக்கப்பட்டிருந்தாலும் கூட, பயனாளிகளின் செயல்பாடுகள் கூகுள் நிறுவனத்தால் கண்காணிக்கப்படுகின்றன என்கிற அதிர்ச்சிதரும் செய்தியை அúஸாசியேட் பிரஸ்' நிறுவனத்தின் புலன் விசாரணை வெளிப்படுத்தியிருக்கிறது. 
இங்கிலாந்திலுள்ள பெர்கிலி என்கிற இடத்தில், ஆராய்ச்சி மாணவி ஒருவர் தன்னுடைய ஆண்டராய்ட்' அறிதிறன்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் இருக்கும் பகுதி தொடர்பான விளம்பரங்கள் தொடு திரையில் வரத் தொடங்கின. வேறு ஓர் இடத்திற்கு சென்றபோது அந்தப் பகுதி சார்ந்த விளம்பரங்கள் வந்தன. இத்தனைக்கும் அவர் கூகுள் வரைபடம் தொடர்பான செயலியை முடக்கிவைத்திருந்தார். அதிலிருந்து, ஒரு செயலி தடை செய்யப்பட்டிருந்தாலும் கூகுள் நிறுவனம் பயனாளிகளைப் பின்தொடர்கிறது என்பது வெளிப்பட்டது.
தகவல்களை சேமிப்பது, எண்மத் தகவல்களைப் பயன்படுத்துவது என்பது மிகவும் பிரச்னைகள் நிறைந்த செயல்பாடு. கடந்த ஆண்டு வெளியான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா முறைகேடு' எந்த அளவுக்கு சேமிக்கப்படும் தகவல்கள் சேமித்து வைத்தவர் எதிர்பாராமலும், அவரது ஒப்புதல் இல்லாமலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டது. அறிதிறன்பேசிகளில் பயனாளிகளின் ஒப்புதல் இல்லாமலே அவர்களிடம் உள்ள தகவல்கள் கூகுள் நிறுவனத்தால் பயன்படுத்தப்படுவது உலகளாவிய அளவில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் வரைபடம் கோடிக்கணக்கான அறிதிறன்பேசி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பது மட்டுமல்ல, அவர்களின் நம்பிக்கைக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது. அறிதிறன்பேசிப் பயனாளிகள் தாங்கள் எங்கே இருக்கிறோம், எங்கே போகிறோம் உள்ளிட்ட எந்த விவரத்தையும் வெளியிட விரும்பாவிட்டாலும் கூட, கூகுள் நிறுவனம் அவர்களைக் கண்காணிக்கிறது. இதனால் கூகுள் நிறுவனமும் அதனுடன் தொடர்புடைய முகநூல் செயலியும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. பயனாளிகளின் முன் அனுமதியில்லாமல் அவர்களது அறிதிறன்பேசியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களை அவர்கள் மீது திணிக்கின்றன. தாங்கள் இருக்கும் இடம் குறித்த தகவலை முடக்கியிருப்பதாக பயனாளிகள் நினைத்தாலும் கூட, அவர்களுக்குத் தெரியாமல் அவை பயன்படுத்தப்படுகின்றன.
கூகுளும் முகநூலும் நுகர்வோருக்கு சேவை செய்வதாகக் கூறிக்கொண்டாலும், அத்தனை பயனாளிகளின் தகவல்களையும், அவர்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகளையும் சேகரித்து தணிக்கை செய்து தேவையான தகவல்களை சேமித்து வைத்து கொள்கின்றன. இந்த தககவல்களை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு விலைபேசி லாபம் ஈட்டுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்திற்கு 2.4 பில்லியன் யூரோ (சுமார் ரூ.19,715 கோடி) அபராதம் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது.
கூகுள், முகநூல் உள்ளிட்டவற்றிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க நிறுவனங்கள் 2018-இல் இதுவரை செய்திருக்கும் விளம்பரங்களின் அளவு சுமார் 20 பில்லியன் டாலரைவிட (சுமார் ரூ.1.40 லட்சம் கோடி) அதிகம். பயனாளிகளின் தகவல்கள் குறித்த உரிமை அவர்களிடம்தான் இருக்க வேண்டும். அதிலும் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்காமல் திருட்டுத்தனமாக தகவல்களைத் திரட்டுவது என்பது மன்னிக்க முடியாத குற்றம்; தன்மறைப்புநிலைக்கு மிகப்பெரிய சவால்; நம்பிக்கை துரோகம்.
இந்தப் பிரச்னைக்கு சர்வதேச அளவில் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டாக வேண்டும். இல்லையென்றால் அது அறிதிறன்பேசிப் பயனாளிகள் நிர்வாணமாக நிற்பதற்குச் சமம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com