சொற்குவை திட்டம்!

சமீபத்தில் தமிழக அரசின்


சமீபத்தில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்  "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் 135-ஆவது பிறந்தநாள் விழா சென்னை, போரூர் துண்டலம் பகுதியில் திரு.வி.க. பிறந்த இல்லத்திலுள்ள நூலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்திருக்கும் சில கருத்துகள் நம்பிக்கை ஊட்டுபவையாக இருக்கின்றன.
தமிழிலுள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல்,  ஆங்கிலத்துக்கு நிகரான சொற்களைப் பதிவு செய்தல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகளுடன் "சொற்குவை திட்டம்' உருவாக்கப்பட இருப்பதாக ஏற்கெனவே சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். அந்தத் திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். இதன் மூலம் இணையதளப் பொது வெளியில் உலகெங்கிலும் உள்ள தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் "சொற்குவை திட்ட'த்தைப் பயன்படுத்த முடியும்.
தமிழகத்துக்கு வெளியே உள்ள தமிழ் அமைப்புகள் அவரவர் பகுதியில்  தமிழ் கற்றுக்கொடுக்க வசதியாக பாடத்திட்டத்தை 
உருவாக்கி, நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இறங்கியிருக்கிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் "இளம் தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை' மூலம் ஆண்டுதோறும் 300-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடத்தி,  அவர்களுக்கு எழுத்து, இலக்கியம் உள்ளிட்டவற்றில் பயிற்சி அளித்து வருகிறது.
தமிழ் வளர்ச்சி குறித்தும், அடுத்த தலைமுறையினரின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிப்பது குறித்தும் நாம் தீவிரமாக சிந்தித்தாக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தவறில்லாமல் தமிழில் எழுதத் தெரியாது என்றால் கூட பரவாயில்லை. தமிழில் பேசவே தெரியாது என்கிற நிலைக்கு இன்றைய இளைய தலைமுறை தள்ளப்பட்டிருக்கும் அவலம் குறித்து நாம் கவலைப்பட்டே தீர வேண்டும். இப்படியொரு சூழலில்தான் தமிழக அரசு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் வளர்ச்சிக்கு என்று தனியாக ஓர் அமைச்சரையும், அவரது தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றையும் இணைத்திருக்கிறது. 
தமிழ்நாட்டின் மக்கள்தொகை ஏறத்தாழ ஏழரைக் கோடி என்றால், உலகளாவிய அளவில் தமிழர்களின் எண்ணிக்கை  சுமார் 10 கோடி இருக்கலாம். உலக அளவில் இன்றைக்கு 10 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுகிற மொழிகளாக ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷியன், இந்தி முதலிய 13 மொழிகள்தான் இருக்கின்றன. இந்த நிலையில், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, தாய்மொழியில் பேசவும், எழுதவும், தாய்மொழியை அன்றாட பயன்பாட்டுக்குக் கையாளவும் தெரிந்தவர்களின்  எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதுதான் சோகத்திலும் சோகம். 
சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெரிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்பு குறைந்ததாக நினைத்தல் எனும் நான்கு காரணங்களால்தான் மொழிகள் வழக்கொழிகின்றன. 
இந்திய அளவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துவிட்டதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. உலக அளவில் இன்னும் ஒரு நூற்றாண்டு காலத்தில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ் மொழியும் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் "யுனெஸ்கோ' ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருக்கிறது.
இன்றைய நிலையில் வாழ்வின் மிக முதன்மையான கட்டங்களில் தமிழர்களுக்குத் தங்களது தாய்மொழியான தமிழ் நினைவுக்கு வருவதே இல்லை. அன்றாட வாழ்க்கைப் பயன்பாடுகளுக்கும், வங்கிக் கணக்கு நடைமுறைகளுக்கும், வரவு-செலவு வணிகத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் தமிழ் பயன்படாது என்கிற தாழ்வு மனப்பான்மை பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இரண்டு தமிழர்களுக்கு இடையேயான உரையாடலில் ஆங்கிலத்தைக் கலப்பது என்பது ஒரு நாகரிகமாகத் தொடங்கி, அதுவே கலாசாரமாகி, இப்போது அது கட்டாயமாகிவிட்டது. தாய்மொழியாக இருந்தும் கூட, இன்றைய நிலையில் தமிழ் நாட்டில் தமிழர்களாலேயே தள்ளி நிறுத்தப்படுகிற ஒரு மொழியாகத்தான் தமிழ் இருக்கிறது.
தமிழின் பெருமைகள் மேடைகளில் முழங்கப்படும் அளவுக்கு அதன் வளர்சிச்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை. மொழியைப் பாதுகாத்து நிலைபெறச் செய்வதற்கான வழிமுறைகளும் காணப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை நாம் வரவேற்றுப் பாராட்ட வேண்டியிருக்கிறது. 
தமிழக அரசு தொடங்க இருக்கும் "சொற்குவை திட்டம்' மட்டுமே தமிழ் எதிர்கொள்ளும்  இன்றைய அதன் "உயிர்ப்பு நிலை' (சர்வைவல்) பிரச்னைக்குத் தீர்வாகிவிடாது. பலராலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம், புதிய அறிவியல் மற்றும் அன்றாட நடைமுறை ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இல்லாமல் இருப்பதுதான். வேற்று மொழியினர் தங்கள் வசதிக்காக உருவாக்கியிருக்கும் சொற்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வது என்பது சுலபமானதாக இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் தமிழ் மொழியின் அழிவுக்கு அதுவே  காரணமாகிவிடக்கூடும். 
வேற்றுமொழிச் சொற்களுக்கு இணையான  -அனைவரும் சுலபமாகக் கையாளக்கூடிய வகையிலான தமிழ்ச் சொற்களை உருவாக்குவதும் கூட, "சொற்குவை திட்டம்' உள்ளடக்க வேண்டிய மிக முக்கியமான பணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com