அரை இறுதி ஆட்டம்!

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ராஜஸ்தானும் தெலங்கானாவும் வாக்கெடுப்புக்குத் தயாராகின்றன

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ராஜஸ்தானும் தெலங்கானாவும் வாக்கெடுப்புக்குத் தயாராகின்றன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிúஸாரம் மாநிலங்கள் வாக்கெடுப்பு முடிந்து முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன. வரும் டிசம்பர் 11-ஆம் தேதி ஐந்து மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நிலைமை.
 தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் மாநிலப் பிரச்னைகள் முன்னிலை வகிக்கின்றன என்றாலும் கூட, தேர்தல் முடிவுகள் தேசிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்னைகளும், மக்களவைத் தேர்தலுக்கான பிரச்னைகளும் வேறு வேறு. சட்டப்பேரவைத் தேர்தலில் காணப்படும் மனநிலை, மக்களவைத் தேர்தலிலும் வாக்காளர்களிடம் காணப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் கூட, மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் நடைபெறும் தேர்தல்கள் என்பதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.
 மத்திய இந்தியா என்று முன்பு அழைக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலம் இப்போது மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என்று பிரிக்கப்பட்டாலும் கூட, இவ்விரு மாநிலங்களும் சேர்ந்து மக்களவைக்கு 40 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றன. பல்வேறு ஜாதிகள், பழங்குடிகள், முஸ்லிம்கள் என்று இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் மாநிலங்களாக இவை விளங்குகின்றன. அதனால், இந்த மாநிலங்களின் வாக்காளர் மனநிலையும் , தேர்தல்நேரப் பிரச்னைகளும் தேசிய அளவில் பிரதிபலிக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் நேரிடையாக மோதும் மாநிலங்களாகவும் சத்தீஸ்கரும், மத்தியப் பிரதேசமும் ராஜஸ்தானும் திகழ்வதால், இரண்டு கட்சிகளுமே மக்களவைத் தேர்தலுக்கான பரீட்சார்த்த பலப்பரீட்சையாகத்தான் இந்தச் சுற்றுத் தேர்தல்களைக் கருதுகின்றன.
 சக்தி வாய்ந்த ஐந்து முதலமைச்சர்களின் செல்வாக்குக்குச் சவாலாக அமைகிறது இந்தத் தேர்தல்கள். மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ்சிங் செüஹானும், சத்தீஸ்கரில் ரமண் சிங்கும், மிúஸாரமில் லால் தன்ஹாவ்லாவும் நீண்ட நாள்களாகத் தொடர்ந்து முதலமைச்சர்களாக இருந்து வருபவர்கள். மக்கள் செல்வாக்கைப் பெற்ற அரசியல்வாதிகள். தெலங்கானாவில் சந்திரசேகர் ராவும், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியாவும் அவரவர் மாநிலத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்திகளாகத் திகழ்பவர்கள். அதனால், இந்தத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமான திருப்பங்களை ஏற்படுத்தலாம், ஏற்படுத்தாமலும் போகலாம்.
 தெலங்கானாவையும், மிúஸாரமையும் விட, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல்கள்தான் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. அரசியல் நோக்கர்கள் ராஜஸ்தானுக்கு பெரும் முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம், கடந்த 20 ஆண்டுகளாக ராஜஸ்தானில் தேர்தலுக்குத் தேர்தல் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருவதால், இந்த முறை பாஜக அகற்றப்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடும் என்கிற பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சத்தீஸ்கரிலும், மத்தியப் பிரதேசத்திலும் அதுபோல ஆட்சி மாற்றம் நிச்சயமாக ஏற்படும் என்று உறுதியாக யாராலும் கணித்துவிட முடியாத நிலைமை காணப்படுகிறது.
 சத்தீஸ்கரைப் பொருத்தவரை அந்த மாநிலம் 2000-இல் உருவானபோது முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. தனி மாநிலமாக சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டது முதல், கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிறது. கடந்த மூன்று தேர்தல்களிலும் ஆளும் பாஜகவுடன் நேரிடையாகக் காங்கிரஸ் கட்சி மோதியது.
 இந்த முறை மூன்றாவது அணியாக, காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியிருக்கும் முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் களமிறங்கி இருக்கிறார். மும்முனைப் போட்டி, எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்து பாஜகவுக்கு சாதகமாக முடிவுகளை மாற்ற வாய்ப்புண்டு. மூன்றுமுறை முதல்வராக இருக்கும் ரமண் சிங் மீது அதீத வெறுப்பு காணப்பட்டால் மட்டுமே மூன்றாவது அணியையும் மீறி காங்கிரஸ் வெற்றிபெற முடியும்.
 மத்தியப் பிரதேசத்தைப் பொருத்தவரை முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் கடந்த 15 ஆண்டுகளாக எத்தனையோ வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட்டு மக்கள் மத்தியில் தனக்கென மிகப்பெரிய வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றிய பாசனத் திட்டங்களும், விவசாயத் திட்டங்களும் அளவுக்கு அதிகமான உற்பத்தியை ஏற்படுத்தி இருப்பது அவருக்குப் பிரச்னையாகி இருக்கிறது. விவசாயிகளுக்குத் தங்களது உற்பத்திக்குப் போதிய விலை கிடைக்காத நிலைமை காணப்படுகிறது. இது முதல்வர் செüஹானுக்கு எதிராகத் திரும்பக்கூடும்.
 பாஜகவுக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் ஒரு தலைமையை அடையாளம் காட்டி, தேர்தல் களத்தில் போரிட முடிகிறது. காங்கிரஸ் கட்சியால் எந்தவொரு மாநிலத் தலைவரையும் அடையாளம் காணவோ, முன்னிலைப்படுத்தவோ முடியவில்லை. பாஜக சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றால், அதற்கு காங்கிரஸின் இந்த பலவீனம்தான் காரணமாக இருக்கும்.
 ஐந்தில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மாநிலங்களில் வெற்றிபெறும் கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சியாக மாறக்கூடும். காரணம், இது அரை இறுதி ஆட்டம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com